இளையராஜா

இளையராஜா
...............................

அந்தச் சாரங்கியை
நிறுத்தி விடுங்கள்
இளையராஜா

ஒவ்வொரு நரம்பிலும்
கண்ணீர்த்துளிகள்
ஊற்றெடுக்கின்றன

இந்தக் குமிழி உடலை
கடலில் உடைத்து விடாதீர்கள்
குழல் காற்றால் ஊதி
கரையேற்றி விடுங்கள்

எந்த உயிரை
பொங்கும்  உயிரில்
வழிய விடுகிறீர்கள்

திமிர்ப்பானைகள் நெகிழ்ந்து
மண்ணாக வனைகின்றன

பிய்த்துக்கொண்டு வெளியேறுகின்றன
மூளையின் தாழ்ப்பாள்கள்

சொற்களின் கால்களை
பிடித்திழுக்கிறது
ஐஸ்கிரீம் சகதி

தொப்பூழில்
மீண்டும் சுழல ஆரம்பிக்கிறது
அம்மாவின் மூச்சுக்காற்று

நூல் நூலாகப்
பிரிந்து உரிகிறது
தூக்குக்கயிறு

வேட்டை மறந்த விலங்கு
மயிலிறகு சேகரிக்கிறது

மலைவெடித்துப் பாய்ந்த
நெருப்புக்குழம்பை
பெய்து அணைக்கிறது
பெரும்பனி

விறைத்த தண்டவாளங்களில்
நெடுந்தூரத்திற்கு
வயலின் வாசிக்கிறது மழை.

கொலுசு - ஆகஸ்ட் 2018 

Comments