20. இதழெல்லாம் துயர் பெருக அந்திச்சுழியில் பூத்தெழும் ஊழ்கத்தின் மாமலர்-- வே.நி.சூர்யா கவிதைகள் குறித்து

 








நள்ளிரவில் கண்களை மூடியபடி விசும்பிக்கொண்டே இருந்த குழந்தையை என்ன செய்தும் உறங்க வைக்க முடியவில்லை. விழித்துக் கொண்டதும் ஒவ்வொரு முகமாகப் பார்த்துவிட்டு தாயைத் தேடியது. பாட்டியும், இரண்டு சித்திகளும், மாமாவும் என யார் கையிலும் இருக்காமல்  வாசற்கதவை பார்த்து போக வேண்டுமென அழுதது. சனிக்கிழமை அதிகாலையில் கதவைத் திறக்கும்போது மட்டும்தான் தாய் வருவாளென அதற்குத் தெரியவில்லை. கதவைத் திறந்து, யாருமில்லை என்றதும் இருளில் அசைவது தாய்தானா என்று எட்டிப்பார்த்து விட்டு ஏமார்ந்து அழுதபடியே மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டது. ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்த வீட்டில் அக்குழந்தையின் தாயும் தந்தையும் உறங்காது வாசலில் நின்று அழுதபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு பால் கட்டிக் கொண்டு நெஞ்சு வலித்தது.  பிறந்ததிலிருந்து  எட்டு மாதமாக அவளுடன் மட்டுமே இருந்த குழந்தையை பணிமாறுதலில் ஒரு வார காலமாக பிரிந்திருந்தாள். புது ஊரென்பதால் யாரிடமும் குழந்தையை விட முடியாமல் பாட்டி வீட்டிலேயே விட்டுச் சென்றாள். வார இறுதியில் மட்டும் குழந்தையை பார்த்து விட்டு தூளியில் தூங்கும் போதே ரயிலுக்கு சென்று விடுவார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் தெப்ப குளத்தின் அந்தப் பக்கம் இருக்கும் கரையில்தான் தாய் இருக்கிறாளென குழந்தை அடிக்கடி"  அம்மா ! அம்மா ! " என கைகளை காட்டும்.  வயிற்றுக்குள் ஐந்தாம் மாத சிசுவாக இருந்த போது அபார்ஷன் ஆகும் வாய்ப்பிருப்பதாக கருப்பை வாயைத் தைத்திருந்ததார்கள். அதிர்ந்து நடக்காமல், சரியாக உட்கார்ந்து எழமுடியாமல், படுக்க முடியாமல் அவ்வளவு கவனத்துடனும் பயத்துடனும் நாட்களை வளர்த்தாள். அடிக்கடி வயிற்றில் கை வைத்து குழந்தை முண்டுகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள். 

பிரசவ நாளில் மயக்கத்திலிருந்தவளிடம் உரையாடிக் கொண்டே  வயிற்றில் அறுவை செய்த மருத்துவர் அவ்வளவு எளிதில் கையில் வராத குழந்தையை " அட ! என்ன சரியான வாலுக்குட்டியாக இருக்கே " என்றபடி தொடையில் தட்டினார். குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது.  துடைத்தெடுத்த செவிலி ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக இன்னொரு அறைக்கு தூக்கிச் சென்று மேஜையில் வைத்தாள். தலைமுடியை இடது கையால் இழுத்த குழந்தை வலது கையால் ஆக்ஸிஜன் கவசத்தை பிடுங்கியது. செவிலி ஓடிச் சென்று மீண்டும் முகத்தில் பொருத்தினாள். " "சரியான வாலுப்பா இது "  என்று திட்டிய செவிலி, அழத் தொடங்கிய குழந்தையை சமாதானம் செய்தாள். குழந்தையை வெண்ணிற தூவாலையில் ஏந்திக் கொண்டு தாயினருகே வைத்தார்கள்.முத்தமிட்ட தாய்க்கும் குழந்தைக்கும் எட்டு மாதத்தில் பிரியப் போகிறோம் என்பது தெரியவில்லை. பிறக்கும் முன்பும் மாபெரும் போராட்டம். பிறந்த பின்பும் புதிய போராட்டம். குழந்தையை மட்டும் விட்டு வைக்கவா போகிறது வாழ்வு.அந்தக் குடும்பத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தையின் வருகையால் வீடே குதூகலத்தில் இருந்தது. "இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின்-

பழைய சட்டை என்று ஏதும் இல்லை

பழைய வீடு என்று ஏதும் இல்லை

மெல்லத் திறக்கும் கண்களால்

எந்த உலகை

புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை

எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்கட்டி." என்பார் தேவதச்சன். மருத்துவமனையிலிருந்து குழந்தை வீட்டுக்குச் சென்ற நாளில் கார்காலத்தின் முதல்நாள்  மெல்லிய தூறலுடன் ஆரம்பித்தது. கோடை காலம் மிக விரைவாக பிரிப்பதற்காக வந்து கொண்டிருந்தது.



புன்னகைக்கும் குழந்தையை கையில் கொடுத்து கொஞ்சச் சொல்லும் இக்கவிதை அது அழப்போகும் நாட்களையும் கொஞ்சம் கவனியுங்கள் எனும் போது  வார்த்தைகளற்று ததும்ப வைக்கிறது. 



ஊற்று


பிறந்து சில நாட்களேயான குழந்தையை

பார்க்கச் சென்றிருந்தேன்

சாவகாசமாக தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது

உனக்கோ பெயரில்லை 

கரடுமுரடான நேற்றில்லை

நானும்தான் இருக்கிறேன்… பார்த்தாயா?

இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்

அந்த சிறிய பஞ்சுக்கன்னத்தை

உலகத்துக்கம் அழுந்தத்தொடாத 

அந்த மிருதினை

தொட்டுப்பார்த்தேன்

பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே

ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே

எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே

எனக்கு துக்கமாக இருக்கிறது.


( அந்தியில் திகழ்வது தொகுப்பிலிருந்து )



"உனக்கோ பெயரில்லை, கரடு முரடான நேற்றில்லை. நானும்தான் இருக்கிறேன்.. பார்த்தாயா ? " குழந்தையும் கரடு முரடான காலத்தை காண்பதற்காகத்தான் பூமிக்கு வந்திருக்கிறது.  ஞாபகச் செதில்களை அணியும் நாளில் மீன்குஞ்சு கடலில் நீந்திய ஒவ்வொரு நாளையும் சேகரிக்க ஆரம்பிக்கிறது. ஞாபகங்கள் அழுத்தாத வரை அது நீரில் ஆனந்தமாக நீந்துகிறது. தப்பித்தல், ஓட்டம் எதையும் அறியும் அவசியமின்றி இருக்கிறது. குழந்தையின் கன்னத்தை விட மிருதுவானது என்ன இருக்கிறது. துக்கத்தில் எழும் கண்ணீர்த்துளிகள் இன்னும் அதில் வீழவில்லை. பசிக்காக அழுவது மட்டும் நடக்கும்.  கன்னத்தின் மிருதைத் தொட்டதும் கவிஞனுக்கு துக்கம் பீடிக்கிறது. நானும்தான் இருக்கிறேன் பார்த்தாயா. நீயும் அவ்வழியில்தான் வருகிறாயா செல்லமே. நீ ஞாபகங்களால் இனி எழுதப் போகும் கதைகள் முடிவற்றதாகும். மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் ஓடுவதற்கென்றே நிறைய கதைகளை உருவாக்குவாய். அழுவாய். வளர வளர உன்னோடு இருந்த  எல்லோரும் விலகுவார்கள். குழந்தை கவிதைதானே என்று வாசித்தால்  துக்கத்தின் கனம் மனமெங்கும் சரிகிறது. உலகெங்கும் மருத்துவமனையின் தொட்டில்களில் ஆடும் குழந்தைகளின் காதில் இக்கவிதையை பாடிவிட்டு அவற்றின் தலையைத் தடவி விட வேண்டும்

போலத் தோன்றுகிறது. 




🌑🌑🌑



குளிர்நீரை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டிருந்தான். குளத்துக்குள் இறங்கும் முன்பு நிறைய அவகாசம் கிடைக்கும். ஆனால் மழையில் உடலை ஒப்புக்கொடுப்பதை தவிர வேறேதும் செய்ய முடிவதில்லை.குளித்துக் கரையேறினான். பிரம்ம முகூர்த்தத்தில் வானமும் காற்றும் ததும்பிக் கொண்டிருந்தது. குருவின்  அறைக்குக் கீழே இருக்கும் மண்டபத்தில் அதிகாலை தியானத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள் மூன்று நாள் தியான பயிற்சிக்கு வந்தவர்கள். வந்த நாளிலிருந்தே அவன் யாரிடமும் அதிகமாக பேசவே இல்லை. ஆசிரமத்தில் எங்கு பார்த்தாலும்  இன்முகத்துடன் பேசினார்கள். வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள். உணவு உண்ண ஒரு வரிசை பொருட்கள் வாங்க ஒரு வரிசை என எல்லாமும் கச்சிதமாக சிறிய சப்தமுமின்றி இயங்குவது வியப்பாக இருந்தது. இதுதான் வாழ்க்கையா ? சிறிதும் பகையின்றி பொறாமையின்றி அன்றாட நதி நகர்ந்து சென்றது வியப்பாக இருந்தது. அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தான். புல் செதுக்கும் பணி கிடைத்தால் கூட போதும். செய்து கொண்டு எப்போதும் அமைதியிலும் இருக்கலாம் எனத் தோன்றியது. குருவின் அறைக்குக் கீழே இருந்த வட்டமான அறையில் மெல்லிய சுடரொளி அசைந்து கொண்டிருந்தது. அவனுக்கு முன்பாகவே இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். முதலில் மூச்சுப்பயிற்சியில் மனம் லயித்திருந்தது.பிறகு வெவ்வேறு இடங்களுக்கு வழக்கம் போல பயணம், குழப்பம், பெருமூச்சு பின்பு சலிப்பின் விழிப்பு.  இருபது நிமிடங்களில் எல்லோரும் வெளியேறினார்கள். உண்மையாகவே எல்லோருக்கும் தியானம் கிடைத்திருக்குமா ?  வெளியில் சொல்லாமல் அமைதியாக கலைந்து செல்கிறார்களா என நினைத்தான். பயிற்சியில் இருந்த நாட்களில் அமைதியான பனிக்குடத்துக்குள்  தவழும் குழந்தை போல இருந்தான். பயிற்சி முடிந்து திரும்பும் போது  பழனிக்கு செல்ல வேண்டுமென்றார்கள். அங்கே சிறு வயதில் யானையடிப்பாதையில் அம்மா செல்லவிடாததால்  கோபித்துக் கொண்டு படியேறியது நினைவுக்கு வந்தது.  ஆலயத்தில் ஒரு ஓரத்தில் இருந்த போகரின் சமாதியில் அமர்ந்து பத்து பேர் தியானம் செய்தார்கள். ஆசிரமத்தில் இருந்த அமைதி கரையத் தொடங்கி இருந்தது. ஊரில் தற்காலிகமாக விட்டுவிட்டு வந்திருந்த அன்றாடப் பிரச்சினைகள் வாகனத்தை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தன. மகளின் பள்ளிக்கு கட்டணம் செலுத்த இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறதென ஞாபகம் வந்ததும், மூன்று நாட்களாக குடியிருந்த அமைதியை அடித்து வெளியேற்றியது பரபரப்பு. வீட்டுக்குள் வந்தததும் ஆசிரமத்திலிருந்து எடுத்து வந்திருந்த மண்ணை பம்ப்ளிமாஸ் மரத்துக்கு அடியில் கொட்டினான். மண்ணை இடம் மாற்றுவதன் வாயிலாக அந்த அமைதி இங்கே குடிகொள்ளத் தொடங்கிவிடுமென நம்பினான். அவனது வீட்டில் எல்லோரும் சிரித்தார்கள். ஆனாலும் முன்பு போல இல்லாமல் மரத்தையும் கனிகளையும் கவனித்தான். மண்ணைத் தொட்டு முகர்ந்து பார்த்தான். எல்லாமும் புதிதாக இயங்குவது போலத் தோன்றியது. மரத்துக்குள் உயிர் துடிப்பதாக உணர்ந்தவன், கனிகளில் சுளை பிரிந்து இருப்பதையும் அதிசயமாகப் பார்த்தான்.கன்றுகளையும் மாடுகளையும் அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்ற போது எல்லாமும் புதிதாக இருந்தது. அதற்குப் பிறகு அந்த கண்கள் அவனை விட்டு விலகவே இல்லை.



தியானமண்டபத்துக்குள் அழைத்துச் சென்று அமர வைக்கும் வே.நி.சூர்யாவின் இக்கவிதை நம்மையே ஒரு தியானமண்டபமாக மாற்றி காண்பவன், காட்சி, காணும் பொருள் ஒன்றாகும் பேரனுபவத்தை அளிக்கிறது. 



தியான மண்டபம்


மாலைவேளை.

மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தேன்

அடர்த்தியான இலைத் தொகுதிகளுக்குள் ஒரு சிட்டுக்குருவி மறைவதைப் பார்த்ததும்

யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது

அலைபேசியில் நண்பரை அழைத்தேன்

பதிலில்லை

மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன்

நேரம் சரியாக 06:56


இப்போது

காற்று எல்லாவற்றையும்

தொட்டுக் கொண்டிருக்கிறது

ஆங்காங்கே மின்மினிகள் தலைகாட்டத் துவங்குகின்றன

ரத்தத்தில் மது மட்டம் கூடுவது போல 

ஆகாசம்

அடர்ந்து அடர்ந்து

சாம்பல் நீலம், இளஞ்சிவப்பு என

கருநீலத்திற்குள் விரைந்து கொண்டிருக்கிறது

இங்கு மட்டுமல்ல

பூமி முழுவதும்

தன்னந்தனியாக நீலப் பறவையொன்று

கண்களுக்கு வெளியே 

பதறிக் கொண்டிருக்கிறது

புதிர் நிறைந்த வானத்தை ஒரு படுக்கையென்றாக்கி

அயர்ந்திருக்கிறது நுரை நிலவு

பெயர் சொல்லாது சப்தங்களின் உதவியின்றி

காற்றில் ஒரு குரல்

திசைக்குத் திசை திரும்பிப்பார்க்கிறேன்

பூச்சிகள் ரீங்காரமிடுகின்றன

சட்டென ஒர் அமைதி சூழ்கிறது

மேல் படிக்கட்டுக்கும் கீழுள்ளதுக்கும்

பேதமற்று இருளில் ஒரே படிக்கட்டாக மாறுகிறது

நான் மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து

மெதுவாக வெளிவிடுகிறேன்

மரங்கள், தூரத்து மலைகள்,

பாறைகள், தாவரங்கள்,

மலர்கள், வண்டுகள்,

காலடிகள், நாய்கள்,

சருகுகள், தேரைகள்,

படிக்கட்டுகள், சுவர்கள்,

எல்லையற்ற நட்சத்திரங்கள், 

எட்டாத நிலவுகள்,

பால்கனிகள், 

கொடிகளில் ஆடும் ஈர உடைகள்,

வீடுகள், நாற்காலிகள் என

ஒன்றுவிடாமல் அத்தனையும்

மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

அதனுள் நான் அமர்கிறேன்

என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன

தேவாலய மணிநாதமாகத் தொலைவிலிருந்து புறப்பட்டு

கீழறையில் ஒரு காகிதத்தில்

சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக

ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்

ஒர் அமைதி

நிறுத்தற்புள்ளி போல.


( அந்தியில் திகழ்வது தொகுப்பிலிருந்து )




பொழுதை கவனிக்கும் போதே நமக்குள் ஒவ்வொன்றாக வரத் தொடங்குகின்றன. மனம் ஒவ்வொன்றையும் தொட்டு அறிகிறது. பகலின் போர்க்களத்தில் காயமுற்று பாரம் சுமப்பவர்களை, அழைக்கும் அந்தி, வண்ணங்களால் மருந்திட்டு வலி நிவாரணியாக மாறுகிறது." ஒன்றுவிடாமல் அத்தனையும்

மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

அதனுள் நான் அமர்கிறேன்". இயற்கையில் ஒவ்வொன்றும் தியானத்தில்தான் இருக்கிறதா அல்லது ஆனந்தத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறதா. எங்கு சென்றாலும் எங்கு அமர்ந்தாலும் வானத்தின் அருள் குறைவதே இல்லைதானே ? மனம் ஒப்புக்கொடுக்க முடியாமல் ஓடி ஓடி ஒளிகிறது. "தற்காலிகமாக ஒரு தேநீர் அளவுக்கு அருந்தக் கொடு இயற்கையே ! நிறைய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருபது வருடங்கள் கழித்து உன்னை மட்டுமே நினைத்து வாழும் வாழ்வு வாழ்வேன் " என்று மன்றாடிவிட்டு ஓடிவிடுகிறது.  வானத்தை நோக்கி கவனத்தை திசை திருப்பும் கவிதை அந்திக்குள் நழைவதன் வாயிலாக எல்லையற்ற பிரபஞ்சத்துக்குள் நுழையும் கதவையும் சேர்த்தே திறக்கிறது.






🌑🌑🌑


"இறைவா உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் இன்றிரவாவது உறங்கவிடு " என்று கைகளை நெஞ்சில் வைத்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். மனைவி சிரித்தாள். குழந்தையிடம் "அப்பா எப்படி இருமுவார் "என்று செய்து காட்டச் சொன்னாள்.  குழந்தை "உஃப் உஃப்" என காற்றை ஊதி ஊதி அணைத்தது. கோபம் வந்தாலும் மறைத்துக் கொண்டு சிரித்தான். குளிர் காலம் வந்தாலே  வலசை வரும் பறவை போல அவனுக்கு இருமல் வந்துவிடும். போகவே போகாது. என்ன செய்தாலும் தை மாதம் முடியும் வரை செல்லுமிடமெல்லாம் இருமலை தூக்கிக் கொண்டே அலைவான்.  முன்பெல்லாம் வெந்நீருடன் நெஞ்சை நீவிக் கொடுக்கும் மனைவிக்கு சிறிது வெறுப்பும் சலிப்பும் வர ஆரம்பித்திருந்தது. "சீக்காளியா பாத்து நானே கட்டிக்கிட்டனே ! " என்று புலம்ப ஆரம்பித்திருந்தாள். இரவில் திருமண வரவேற்புக்கு தனியாக குழந்தையுடன் சென்ற போது 'இருமல் கணவர்' வரவில்லையா என்று உறவினர் கேலி செய்தது இன்னும் அவமானமாக இருந்தது. அன்று இரவில் வாயை மூடிக் கொண்டு குளியலறைக்கு ஓடி இருமினான்.  நுரையீரலை பாறாங்கல்லில் வைத்து அடித்துத் துவைப்பது போன்று இருந்தது. குழந்தை சப்தம் கேட்டு வீறிட்டு அழுதது. மனைவி வந்து பார்க்கவே வெளிக்கதவை சாத்திக் கொண்டு வாசலில் நின்றான். நாயொன்று அவன் இழுத்து இருமுவதை வேடிக்கை பார்த்து குரைத்தது. பனிக்காற்று நுரையீரலை கால்பந்தாக உதைத்து விளையாடியது. இருள் அவனையே சுருட்டாக இழுத்து இழுத்து புகைத்தது. சித்ரவதை தாங்காமல் செத்துவிடலாமென்று தோன்றியது. தொண்டையை அறுத்துக் கொள்ளலாம் அல்லது நுரையீரலைக் கிழித்து சளியை தோண்டியெடுக்கலாம் என நினைத்தான். எந்த மருந்தும் முழுதாக சரிசெய்ய முடியாமல் கோடைக்காலம் நோக்கி ஓடு என்றே சொன்னது. கூட்டத்திலிருந்து விலக்கிய நோய்மை குடும்பத்திலிருந்தும் தனித்திருக்கச் செய்தது. நினைக்கக்கூடாது என்று மறதியை ஒவ்வொரு கல்லாக நினைவில் மீது வைத்து அழுத்துவான். பிதுங்கிக் கொண்டு ஓடும் நினைவு மீண்டும் இருமலாகத் தொன்றிவிடும். எட்டாவது படிக்கும்போது மெலிதாக முளைவிட்ட நோய் இருபது வருடங்களில் நுரையீரலில் காடாகப் பரவியிருந்தது. சிறுவயதில்  மார்கழி மாதங்களில்  நொச்சி இலைகளின் சாறிரங்கிய வெந்நீரில்தான் குளிக்க வைப்பாள் அம்மா. நெஞ்சுக்கு அத்தனை இதமாக இருக்கும். எட்டாவது படிக்கும் போது பாட்டுப் போட்டியில ஆசையாக கலந்து கொண்டான். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே " பாதியிலேயே இருமல் தொடங்கி விட்டது. அமர்ந்திருந்தவர்கள் கூச்சல் இட்டதும் அவமானத்துடன் பள்ளியிலிருந்து வெளியேறி ஊர் எல்லையிலிருந்த மயானக் குளத்தில் போய் அமர்ந்து கொண்டான். அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளுக்கு இருமல் வருமா ? வந்தால் மற்ற ஆடுகள் எப்படி சிரிக்குமெனவும் யோசித்தான்.  மருத்துவர் மூக்கு பெரிதாக இருக்கிறதாகவும் அறுவைக்கிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சொன்னார். ஜாதகத்தில் பெரிய கண்டமிருப்பதாக ஜோதிடர் எச்சரித்திருந்தார். அம்மா அம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டாள். மார்கழி மாதம் பஜனை ஒலி கேட்பதற்காக விழித்திருப்பான். இருமல் எல்லாவற்றையும் சின்னபின்னமாக்கிவிடும். நள்ளிரவில் இருமும் நெஞ்சை அம்மா நீவிவிடுவாள். "தாயே உனக்கு இரக்கம் இல்லையா ?" என்று கோபித்துக் கொள்வாள். அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்குவான். வெயில் வரும் வரைக்கும் பனிக்காலத்தின்  ஒவ்வொரு நாள் இரவும் நரகமாகவே இருக்கும். வெயிலை விழுங்கி நுரையீரலை சரி செய்து விட்டால் நன்றாக இருக்குமென வயலில் போய் நிற்பான். அவனை முழுமையாக தொட்டுச் செல்லும் வெயில் நுரையீரலை மட்டும் ஏமாற்றிவிட்டுச் சென்று கொண்டே இருந்தது.




நோயின் பாடலை ஒலிக்கவிடும் கவிதை மனதின் ஒவ்வொரு அடுக்காக நுழைந்து படிந்திருக்கும் பல்லாண்டு நூலாம்படையை அடித்து வெளியேற்றுகிறது. நோய்மையிலிருந்து பரிபூரண நலத்துக்கு அழைத்துச் செல்கிறது. 



காசநோய்க்கு ஒரு பாடல் 




காசநோயே

நீ என்னை முற்றிலும் இன்னொரு ஆளாக மாற்றிவிட்டாய்

இந்தக் கட்டிடத்தை நீ இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவாய் என்றல்லவா நினைத்திருந்தேன்

மாறாக அனாயசமாய் பல திருகாணிகளை கழற்றிவிட்டிருக்கிறாய்

சிலவற்றை இன்னும் இறுக்கமாக்கியிருக்கிறாய்

ஆன்மாவின் கன்னத்தில் 

அறைந்து அறைந்து கூவியிருக்கிறாய்:

“இன்றைப் பார்..இன்றைப் பார்”

அந்த மாலைநேர காய்ச்சல் பொழுதுகள்

எனக்கு கடற்கரைகள் கடற்கரைகள் என்றானதும் அப்போதுதான்

அடுத்தடுத்த மாத்திரை விழுங்கல்கள்

நடுக்காட்டில் திக்கு தெரியாது அலையும் ஆட்டுக்குட்டி என நான் இறைவனைத் தேடியதும் அப்போதுதான்

அஸ்தமனச் சூரியனுக்குக் கீழே மெதுவாக நடக்கிறேன்

இனி வாழ்வுருக்கி நோய்களுக்கு நான் அஞ்சவேண்டியதில்லை

இன்றை மிதித்து இன்றிலேறி இன்று போல பறக்கவும் செய்கிறேன்

இத்தனையும் உன்னால்தான்

கடற்கரைகளை காட்டி 

உயிரை அமுதென ஊட்டிய உன்னால்தான் இத்தனையும்


பாக்டீரியங்களின் இளவரசியே

இங்கேப் பார்

பின்னிரவுகளில் குரல் நைய்ய இருமிக்கொண்டே இருக்கிறாய் என்றாயே

இப்போது பார் நான் கனவில் சேர்ந்திசைக் கச்சேரிகள் நிகழ்த்துகிறேன்

அந்த முதல் இருக்கை உனக்குத்தான்

வந்து உட்கார்

உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ

எனக்கு நினைவு உள்ளது

உன் அறிகுறிகளை மூட்டைக்கட்டிக்கொண்டு

ஒரு நல்ல அஸ்தமன வேளையில் 

இந்த மாளிகையை விட்டு 

நீ வெளியேறவும் செய்தாய்

ஒவ்வொரு நொடியிலும் நறுமணம் சேர

நீ பயங்கரமா கருணையா என்பதுகூட மறந்துபோய்

வாசல் வரை வந்து

மாத்திரை அட்டைகள் தீர்ந்த சுதந்திரத்துடன்

உனக்கு கை அசைத்தேன்

இப்போதோ காலங்கள் நிறைய ஓடிவிட்டன

லாரி சக்கரத்தினடி எலுமிச்சைகள் என


உனக்கும் எனக்கும் இடையே ஒரு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தொலைவு

நன்றிகெட்டவன் என மறுகரையிலிருந்து

நீ முணுமுணுப்பதை கேட்க இயல்கிறது என்னால்

ஆனாலும் காசநோயே

நான் எப்போதும் இப்படித்தான்

நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன் விடைபெறுகிறேன்

அழுகிறேன் எச்சில்வடிக்கிறேன்

சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

என் வேர்கள் பலவீனமானவை

சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை

அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

கற்பனாவாத யுகத்தின் செல்லக்குழந்தையே

இவை உன் கைங்கர்யம்தானா

அறியேன்

அதனாலென்ன

எத்தனை முறை வேண்டுமானாலும் வா

இது திறந்தேதான் கிடக்கிறது 

இரண்டு கரும்பலகைகள் கொண்ட வகுப்பறை என

ஆனால் 

இந்த பிரார்த்தனையை மட்டும் 

என் பொருட்டு மறந்து விடாதே

எழுத்துப்பிழைகளோடு மலிந்து கிடக்கிறோம்

கிழித்து எறிந்துவிடாதே எங்களை

பதிலுக்கு ஆர அமர உட்கார்ந்து திருத்து ஒன்றாம் வகுப்பு பையனின் விடைத்தாளென

மதிப்பெண் கூட இடு

ஆனால் என் போன்றவர்களை

ஒருபோதும் ஃபெயில் ஆக்கிவிடாதே காசநோயே. . .




( அந்தியில் திகழ்வது தொகுப்பிலிருந்து )



"மாறாக அனாயசமாய் பல திருகாணிகளை கழற்றிவிட்டிருக்கிறாய்

சிலவற்றை இன்னும் இறுக்கமாக்கியிருக்கிறாய்". நோய் வந்து தாக்கும் வரைக்கும் உடலென்ற ஒன்று இருப்பதே மனதுக்கு தெரிவதில்லை. மெல்லிய தலைவலி வரும்போது கூட வேலை பார்க்க முடியவில்லை என 'கோடரி தைலத்தால்' ஓங்கி அடித்துவிட்டு செய்வதைத் தொடர்கிறோம். நாசி அடைத்துக் கொண்டால் பீரங்கியால் தாக்குவது போல அடிக்கடி தைலம் இழுத்து சுவாசிப்போம். தொண்டை கட்டிக் கொண்டால் உப்பு கொப்பளித்து கணைத்து வெளியேற்றுவோம். அதற்குப் பிறகு நோய் உடலை ஆக்கிரமித்து கட்டளை இட ஆரம்பித்ததும் செய்வதறியாது ஊசிமருந்து செலுத்தி மிக விரைவாக தேறப்பார்ப்போம். நோய்க்கு ஓய்வு தேவை. அவ்வளவு எளிதில் உடலை விட்டு சென்றுவிடுவதில்லை. வீட்டில் யார் இருக்கிறார்கள் ? என்ன நடக்கிறது? ஒருநாள் பகலில் உறங்க முடியாத விழிப்பின் கவனிப்பில் மொத்த வாழ்வும் துலங்கத் தொடங்குகிறது. கோபமாகப் பேசியது, அவமானப்படுத்தியது எல்லாம் நினைவுக்கு வர கண்ணீர் வழிகிறது. கடவுள் குறித்து சிறு பயம் தோன்றுகிறது. கவனிப்பின் கதவை நோய்மை திறக்கிறது. மற்றவர்கள் நம்மை கவனித்துக் கொள்கிறார்கள். நாம் அவர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்கிறோம். நான்கு நாட்கள் காய்ச்சல் முடிந்து வெளியில் வந்தால் அதே காலகாலமாக தீண்ட வரும் இளவெயில்.அதை புதிதாக உடுத்திக் கொள்கிறோம். "நீ பயங்கரமா கருணையா என்பதுகூட மறந்துபோய்

வாசல் வரை வந்து

மாத்திரை அட்டைகள் தீர்ந்த சுதந்திரத்துடன் உனக்கு கை அசைத்தேன்". பயம் காட்டிய பிறகு கருணையளிக்கும் நோய்மை. நோயில் விழுந்து புதிதாகப் பிறக்கிறது உடல். காசநோயிடம் எங்களை ஃபெயிலாக்கிவிடாதே என்று கெஞ்சுகிறது கவிதை. நிச்சயமாக அது 

ஃ பெயிலாக்கி விடவில்லை. உடலைக்  காப்பாற்றிவிடுகிறது. அந்தியில் திகழும் சூர்யாவின் கவிதைகள் நம்மை ஊழ்கத்துக்கு அழைத்துச் செல்லும் மாபெரும் மலரை வானில் தோன்ற வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு இதழிலும் இடைவிடாத துயரம் பெருகிக் கொண்டே இருக்கிறது. 



கவிஞர் : வே.நி.சூர்யா


கவிதைத் தொகுப்புகள் : 


1. கரப்பானியம் 


2. அந்தியில் திகழ்வது





Comments

Popular Posts