புரட்சியாளர்கள்


அடிக்கடி யாராவது
பொய்ச்சூடு வைத்து
நம்மைச் சொறிந்து விடுகிறார்கள்
மயிர்க்கால்கள் பூரித்து
புரட்சிக்கு தயாராகின்றன

புரட்சியாளருக்குத் தெரியும்
நம் எந்த நரம்புகளை சுத்தியலால் தட்டினால்
புரட்சி புடைத்தெழும் என்று

திடீர் புரட்சியாளர்கள்
போர்க்களத்தில் பிடறிமயிர் சிலிர்க்க
கணைத்துப் பாயும்
குதிரைகளைப் போல
நம்மைப் பாய்ந்தோடச் செய்கின்றனர்

வரிசையாக வைக்கப்பட்ட
கூர்தீட்டப்பட்ட வாள்களில்
நாம் நம்மை பலி கொடுக்கிறோம்

போரில் இறந்தவர் மனதில் வாழ்கிறார் என
புரட்சியாளர் விளம்பரம் செய்கிறார்

போர் முழக்கம் செய்யச் சொல்லிவிட்டு
விமானத்தில் பறந்து
வெளிநாடு செல்லும் புரட்சியாளர்
திரும்பி வரும் போது
இறந்தவர்களை எண்ணுகிறார்

நம் இதயங்களை கரைந்தழச் செய்யும்
புரட்சியாளரின் ஒரு துளிக் கண்ணீர்
அடுத்த போருக்கு ஆயத்தப்படுத்தும்

புரட்சியாளர்களின் உடைகள்
வாடகை என்று நமக்குத் தெரியாது
அவர் சொந்தமாக எதுவுமே
பேசுவது கூட இல்லை

மிகச் சிறிய பிளேடுகளால்
கிழிந்து விடும் வெண்திரையில்தான்
நம் புரட்சியாளர்கள்
தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.


காற்றுவெளி - மார்ச்  2019 

Comments