எல்லாப் பொருளும் சந்தை குறித்தனவே
கவிஞர் மண்குதிரையின் மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது கவிதைத் தொகுப்பு குறித்து
****
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்களது தெருவிலேயே நண்பன் வீட்டில் மட்டும்தான் தொலைக்காட்சி இருந்தது. இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டுதான் அதையும் பார்க்க அனுமதிப்பார்கள். விளையாட்டை மறந்துவிட்டு திரைப்படம் முடியும்வரை, இருமல் தும்மலைக்கூட அடக்கிக் கொண்டு, வெளியேற்றிவிடுவார்கள் என்ற பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். இப்படித்தான் தொலைக்காட்சி வழியாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அடியெடுத்து வைத்தது தொழில்நுட்பம். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும்தான் செய்திகள் ஒளிபரப்பாகும். விளம்பரங்கள் ஆரம்பத்திலிருந்தே கவர்ந்து இழுக்க ஆரம்பித்து விடும். செய்திகளின் நேரம் வளர்ந்து இன்று 24 மணி நேரமும் பிரேக்கிங் நியூஸ் பரபரப்பிலேயே வைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்த விளம்பரங்கள் படிப்படியாக கழுத்தில் அமர்ந்து கொண்டு இயக்க ஆரம்பித்தன. எதை வாங்க வேண்டும் எவெளியேறியபின்ண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எப்படி, எந்தெந்த பொருட்களுடன் வாழ்வது வாழ்க்கை என்றெல்லாம் சொல்லித்தர ஆரம்பித்து பிறகு நம்மைச் சுற்றி உலக வணிகத்தின் நிரந்தரமான வலையை பின்னிக் கொண்டிருக்கின்றன. கணிணி பரவலான பிறகு இணையத்தின் பயன்பாடு பெருவீச்சுடன் உலகம் முழுவதையும் தன் ஆதிக்கப் போர்வை கொண்டு மூடிவிட்டது. தற்போது உச்சத்தில் இருக்கும் செல்போன் பயன்பாடு ஒவ்வொரு கையையும் சிறைப்பிடித்திருக்கிறது. உலகச் சந்தை நம் ஒவ்வொரு வினாடியையும் தீர்மானிக்கிறது. முன்கூட்டியே கணிக்கிறது. இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. தனிமைச் சிறையில் அடைக்கப்படுவோமென பயந்து இதனுடன்தான் எப்போதும் இருக்க வேண்டும், இல்லாவிடில் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிடலாம் என்று தோன்றுமளவுக்கு ஆக்கிரமிப்பு விரிவாக ஆழமாக நிகழ்ந்திருக்கிறது. யாரையும் எதிர்த்து எதையும் கேட்க முடியாத இந்த குழப்பமான சூழலில் நாம் மாட்டிக் கொண்டு இருப்பதை தலையில் அடித்து நினைவுறுத்துவது போல வந்திருக்கிறது கவிஞர் மண்குதிரையின் “மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது” தொகுப்பு. இந்தப் பின்னணியில் இத்தொகுப்பின் கவிதைகளை அணுகலாம் என நினைக்கிறேன்.
//போஸ்ட்மாடத்தில் கபாலம்
உடைப்பவனாய் இருப்பதுபோல
கவிஞனாய் இருப்பது
சுதந்திரமானது
இன்பமானது //
கவிஞனாய் இருப்பது அவ்வளவு சுதந்திரமானது என்று தொடங்கும் முதல் கவிதை வழியே இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நம் ஆழ்மனதில் கட்டியிருக்கும் கூடாரங்களை அடித்து நொறுக்குவதற்கு ஆயத்தப்படுத்துகிறார் மண்குதிரை.
// இந்த உலகத்துக்கு நன்மைகளால் ஒரு
பயனும் இல்லை //
என்று முடிகிற கவிதையில் ஒரு அதிகாலையில் வீட்டுக்குள் நுழையும் இந்த நூற்றாண்டின் அதிபதி, மாநகரவாசி ஒருவனை எழுப்பி அவன் செய்த நன்மைகளைப் பொருட்படுத்தாமல் தீமைகளைப் பட்டியலிட்டு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாக்குகிறான். எந்தத் தீமையும் செய்யாமல் எதற்காக இந்த உலகில் வசிக்கிறாய்? உன்னால் உலகச் சந்தைக்கு ஒரு லாபமும் இல்லையென்று அவனைக் கழுமரத்தில் ஏற்றிக் கொல்கிறான். அவனைப் பார்த்து எல்லோரும் பயந்து தீமை செய்வதை வழக்கம் போலத் தொடங்குகிறார்கள். சந்தை உலகம் நிம்மதியான தாளகதியுடன் இயங்கத் தொடங்குகிறது.
****
பத்தாண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவிலிருந்து கட்டுமானப் பணிகளுக்காக அழைத்துவரப்பட்டிருந்த தொழிலாளர்கள் எங்களது ஊரில் தற்காலிகமாகக் கூடாரங்களை அமைத்துத் தங்கியிருந்தார்கள். ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் அவ்வப்போது குடும்பமாகச் செல்வார்கள். ஒரு நாள் இருவர் மட்டும் எதையோ தேடியபடி துணிமூட்டையுடன் மணலில் அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நீரற்ற ஆற்றின் மீது கடுங்கோபம் கொண்டு திட்டினார்கள். வற்றாத நதிகள் உள்ள ஊரில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி ஆற்று நீர் காணாமல் போவது எரிச்சலை உண்டுபண்ணியிருக்கலாம். நீண்ட தூரம் நடந்து எப்படியோ நீரைக் கண்டுபிடித்து குளித்துத் திரும்பினார்கள். நீரைத்தேடி அலைவதைப் போல் துயரம் வேறில்லை.ஆறு குறித்த கவிதைகள் வழியாக மண்குதிரை நினைவுகளை பாதாளக்கரண்டியால் அகழ்ந்தெடுக்கிறார். ஒவ்வொருவரையும் அவர்களது பால்யகால ஆற்றுக்குள் குளித்துவிட்டும், நீரற்ற சுடுமணலில் பாதம் தகிக்க ஓடியபடியும் அலைய விடுகிறார். ஆறு வற்றும் போது மணல் லாரிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. விலங்குகள், பறவைகள் எல்லாம் படிப்படியாக எப்படி ஆற்றிலிருந்து விலகிச் செல்கின்றன என்றெல்லாம் கோபத்துடன் விவரிக்கிறார்.
//எப்போதாவது நீர் வரும் ஆறு
தன்னை ஆறு என்று நிரூபிக்க இருந்த
பொடிச்சங்கையும் சிப்பிகளையும்
சிறுவர்கள் டவுசர் பைகளில் நிரப்பிக்
கொண்டோடிவிட்டார்கள்
தன்னை ஆறு என்று நிரூபிக்கும்
பரிதவிப்பில்
அந்த ஆறு
பெண்கள் தோண்டும் ஊற்றுகளில்
தன் நீர்க் கைகளை
உயர்த்தி உயர்த்திக்
காண்பிக்கிறது.//
தன்னை ஆறு என்று நிரூபிக்கத் துடிக்கிறது அந்த நிலம். நான் தண்ணீர்ப்பரப்பு என்று உறுதிப்படுத்த, ஊற்றுகளில் உடல் முழுவதும் புதைந்து கையை மட்டும் உயர்த்தி உயர்த்தி காண்பிக்கிறது. கவிதையில் அந்தக் காட்சி தரும் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதிலிருந்து மூச்சு மூட்ட கொல்லப்பட்ட ஏரிகளின் கோரக்காட்சி துலங்குகிறது. ஆற்றின் கரைகளை மெல்லக் கொன்று ஆக்கிரமித்தல். நீர்நிலைகளை நிலப்பரப்பாக மாற்றுதல் சர்வசாதாரணமாக நடைபெறுவதைக் கண்டு கொந்தளிக்கிறது கவிதை. இன்னொரு கவிதையில் வெள்ளக்காடாக மாறும் ஆற்றையும் கடல் தேடி ஓடும் சீற்றத்தையும் காண்பிக்கிறார்.ஆற்றின் வெவ்வேறு காலத்தில் அதன் வெவ்வேறு தோற்றங்களும் அதையொட்டிய வாழ்வியல் மாற்றங்களையும் தத்ரூபமாக சித்தரிக்கிறார் மண்குதிரை.
****
வைக்கோல் விறகுகளுடன் வரட்டிகளை அடுக்கியவர்கள் நிறைய சர்க்கரையைக் கொட்டினார்கள். தீ நன்கு பற்றி எரிவதற்காக என்று சொன்னார்கள். பாட்டி தேநீரில் அதிகமான சர்க்கரை கொட்டி குடிப்பவள். இப்போது இறப்பிற்குப் பின்னும் அதிக சர்க்கரையுடன் எரிவது அவளுக்கு உவப்பாக இருக்கும் என்று தோன்றியது. பற்ற வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விடுமாறு கூறினார்கள். சடசடவெனக் கிளம்பியது அவள் சர்க்கரை தின்னும் ஓசை. மண்குதிரை கவிதையில் இறந்த ஒருவனைக் குறித்து ஊரில் எல்லாரும் கலங்கி அழுது முடித்துவிட்ட பின்பும் எரியும்போது அவன் பேசுவதை எழுதியிருக்கிறார்.
//துளைகளுக்குள் தீ
பற்றிப் பரவுகிறது
காண சகிக்காது எல்லோரும்
வெளியேறியபின்
சடசடவென வெடித்துக்கிளம்பும்
என் சிதைவின் இசையை
நான் மட்டும்..
உற்சாகத்துடன் ரசித்துக்
கொண்டிருக்கிறேன்//
தீ பற்றிப் பரவும் போது உடல் என்னவாக இருக்கிறது. சிதையில் வெடி வெடித்துக் கொண்டாடுகிறது தீ. அது இசையாக இருப்பதாகவும் இறந்தவன் அதை ரசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். ஒவ்வொரு பொறியாகப் பறந்து செல்லும் நெருப்பெல்லாம் இசைத்துணுக்குகள் என்றே தோன்றுகிறது.
*****
கவிஞர் யவனிகா ஸ்ரீராம் உலகமயமாக்கலின் தாக்கம் குறித்த உரையாடலொன்றில் “இந்தியா திறந்த சந்தையான பிறகு அதிகமாகக் கிடைக்கும் பொருளாதாரத்திற்காக மக்களிடம் நுகர்வுத் தன்மையை மட்டும் அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டுமீறிய நுகர்வுக்காக அடித்தள மக்களை வெறுமனே நுகர்வோர் ஆக்கும் சூழல் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது.” என்கிறார். சந்தைப் பொருளாதாரம் நாம் உண்ணும் உணவில் முதலில் சுவையைக் கூட்டுவதற்காக இலவசமாக சுவைகூட்டும் பொருளை தருகிறது. ஆவலுடன் வாங்கி வந்து குழம்பில் கலக்கிறோம். பிறகு அந்த சுவை நாக்கில் ஒட்டிக் கொள்கிறது. நாளாக நாளாக அந்த சுவை இல்லாமல் குழம்பு வைக்கவே முடிவதில்லை என்ற நிலை வருகிறது. கள்ளச் சந்தை விலையை ஏற்றுகிறது. எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்று வாங்குவதற்கு நுகர்வோர் உலகம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. சந்தை சாட்டையால் அடித்துக் கூட்டத்தை சரி செய்கிறது. புட்டத்தைத் தேய்த்துக் கொண்டு பல்லிளித்த படி “ ஆகா! என்ன சுவை! அதற்காக எதையும் தாங்கலாம்” என சுவைகூட்டும் பொருளுக்காக காத்திருக்கிறோம். சந்தை வெற்றி கொள்கிறது.
இயல்பாக இருந்த காமம் சார்ந்த உணர்வுகள் கூட வீடியோக்களின் கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பித்து விட்டது. இணையத்தில் லட்சக்கணக்கில் குவிந்திருக்கும் வீடியோக்கள் மனித உடலின் இயல்புகளை திரியச் செய்ய ஆரம்பித்து விட்டன. மனிதர்கள் சோர்ந்து போகிறார்கள். காட்சிகள் கிளர்ச்சியூட்டுவதாகவும் உடலில் இயங்குவது சோர்வூட்டும் ஒன்றாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் அதைத் தொட்டவுடன் கண்காணித்து இயங்கும் அல்காரிதம், தொடர்ந்து பார்வையில் வந்து கொண்டேயிருக்கும் கட்டற்ற வீடியோக்கள் வேறொரு உலகத்துக்கு இணைப்பு கொடுத்து அகண்ட பாதாளத்துக்குள் அழைத்துச் செல்கிறது. அதில் நுழைந்த ஒருவன் பின்திரும்பி வருவது அரிதிலும் அரிதாகி விட்டது.
//எருமை மாட்டைப் போலப்
பெருத்த என் காமம்
அடிமாட்டுச் சந்தைக்கு
வண்டியில் ஏற்றப்பட்டுவிட்டது//
அடிமாட்டுச் சந்தைக்கு வண்டியில் ஏற்றப்படுவது காமம் மட்டுமல்ல எல்லா மனித உணர்வுகளும்தான்.
****
மதிய உணவுக்குத் தாமதமாவதால் உணவகத்தில் சண்டையில் சட்டை கிழிகிறது. எனக்கு வயல் இல்லை. எனவே அதைக் குறித்து எந்தக் கவலையும் இல்லை என்ற மனநிலையே பரவலாகக் காணப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் கதை இந்த நூற்றாண்டுக்குத் தேவையற்ற ஓவர் எமோஷனல் ஸ்டோரிகளில் ஒன்றாகி விட்டதைப் போல விவசாயிகள் அழுவதும், மழை பெய்தால் பள்ளி விடுமுறை செய்திகளுக்கிடையே அவர்களது பேட்டியும், வெள்ளத்தில் மூழ்கிய நிலங்களும் கவனிக்கப்படாத ஒன்றாகவே மாறிவிட்டன. முன்பு விவசாயிகளின் தற்கொலை செய்தியைக் கேட்டால் நெஞ்சம் பதைபதைக்கும். இப்போது அதுவும் பழகிவிட்டதால் சிசிடிவி காட்சிகளில் அகோர விபத்துகளின் மரணங்கள் மட்டுமே தீம் இசையுடன் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன.
//எங்கள் வயலை
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
மேயத் தொடங்கிவிட்டது
எங்கள் வயல்களிலெல்லாம் சாலைகள்
எங்கள் குலுக்கையிலெல்லாம் பூனைகள்
நாங்கள் எளிய சம்சாரிகள்
சித்திரை நாளேர்போல
காயம்பட்ட அந்தக் காட்டை உழுது உழுது
நாங்களும் காத்திருக்கிறோம்
ஒரு மாபெரும் புரட்சிக்காக//
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு வயலை மட்டுமா மேய்ந்து கொண்டிருக்கிறது மொத்த மானுட வாழ்வையுமே. வயல்களில் எல்லாம் வீடுகள் அதற்காக நீண்ட சாலைகள். தண்ணீர் இல்லையென்பதை விட விவசாயம் செய்ய ஆளும் இல்லை நேரமும் இல்லை. மண்குதிரையின் கவிதையில் எளிய சம்சாரிகளான உபரி விவசாயிகள் பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கிறார்கள். மானியத்துக்கு அலைகிறார்கள். நாளெல்லாம் காட்டை உழுகிறார்கள். வானம் பார்த்த பூமியில் மழையைப் போல மாபெரும் புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். பாரதி சொன்னைதைப் போல “ஆகா வென்று எழுந்தது பார் யுகப்புரட்சி. “ ஆமாம் ! புரட்சிதான். எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடும் என்று காத்திருக்கிறார்கள்.
*****
காதலின் இடம் இந்த நூற்றாண்டில் என்னவாக இருக்கிறது என்பதை எவ்வளவு முட்டி மோதினாலும் தெரிந்துகொள்ளவே முடியவில்லை. முன்பு காதலுக்கென்று வைத்திருந்த எல்லா மதிப்பீடுகளும் உதைக்கப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாவில் தொடங்குவது, இடைவிடாமல் சாட் செய்வது, எந்நேரமானாலும் வீடியோ காலில் அழைப்பது, ரயிலில் கூட்ட நெரிசலில் கவனிப்பவர் குறித்த எவ்வித நெருடலுமின்றி கொஞ்சிக் குழைவது, மடியில் உறங்குவது, இறங்கும் போது பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் படி முத்தமிட்டு விடைபெறுவது என இருபதாம் நூற்றாண்டின் மிக முன்னேறிய காதலர்களைக் கண்டு அச்சமடைபவர்களை பூமர் அங்கிள்களாக மாற்றி வைத்திருகிறது. யாராவது பார்த்துவிடுவார்கள் எனத் தயங்கி நின்ற காதல், யார் பார்த்தால்தான் என்ன கண்ணை மூடிக்கொள்ளட்டுமே என அதீத துணிச்சலில் இறங்கிவிட்டது. காதலர்களுக்கும் ஒரு காதல் மட்டுமே இருக்கவில்லை. காதல் முறிவு ஒரு தொல்லையாக இல்லை. வெற்றியைப் போலவே தோல்வியைக் கொண்டாட நல்ல உணவகத்தில் இரவு உணவு, குடி, கொண்டாட்டம் ஊர்சுற்றல். மறுநாள் புதிய காதலைத் தொடங்கிவிடுவது என எதற்கும் எந்த சிந்தனையும் இல்லை. உறவுகள் குறித்த எந்தக் குற்ற உணர்வும் இந்த பின் நவீனத்துவக் காதலில் இல்லை. காதலர்களுக்கு பரிசு கொடுப்பதில் மெல்ல எட்டிப்பார்க்கும் சந்தை ஒவ்வொரு பொருளையும் காதலின் வெவ்வேறு தருணங்களுக்கு எப்படி பரிசளிப்பது என்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்து முழுமையாக அவர்களைச் சுரண்ட ஆரம்பிக்கிறது. ஐஃபோன் இல்லையா. பிரேக் அப். பார்டி இல்லையா பிரேக் அப். “பிரேக் அப்! பிரேக் அப்! “ மண்குதிரை காதலை சந்தைக்காக மாற்றப்பட்ட பரிசுப் பொருட்களில் ஒன்றாகச் சொல்கிறார். மலைச்சாமி என்ற கதாபாத்திரத்தின் வழியே காதல் குறித்த நீண்ட விவரணையை நிகழ்த்துபவர் கடைசியில் அவனுக்கு அறிவே இல்லை எல்லாவற்றையும் காதலென நம்பிக் கொண்டிருக்கிறான் என்று முடிக்கிறார்.
//சந்தைப் பொருளாதாரத்தில் காதல்
கோல்டன் ரேப் செய்யப்பட்ட
பரிசுப் பொருள்//
//எவ்வளவு உயரிய, உன்னத
இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்
காதலிலும்
கேட்பரி சில்க் சாக்லேட்டுக்கு
ஒரு இடமில்லை
என்று யாராவது சொல்ல முடியுமா?//
ஆமாம். ஒரு சாக்லேட் கூட இல்லாமல் இன்று காதலை நினைத்துப் பார்க்க முடியாதுதானே. தொடர்ந்து ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் காதலுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதாகச் சொல்லி நம்மைத் தூண்டி வாங்க வைக்கின்றன. காதலில் சண்டை வந்தால் சமாதானத்துக்கு கொடுப்படும் பரிசுப் பொருள் விலைமதிப்புள்ளதாக இருக்க வேண்டும். அதுதான் காதலை உடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் பிரேக் அப் மட்டும்தான்.
****
இந்த வாழ்வு முழுவதுமாகவே சந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் வணிகத்தின் மாயச்சரடால் இணைக்கப்பட்டிருக்கிறது. நாமெல்லோரும் ஒருவகையில் நுகர்வோர் கூட்டம் அல்லது சாகும் முன்பு வரைக்கும் அடிமையாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் உடல்கள். மண்குதிரையின் கவிதைகள் இந்த மண், மனிதர்கள், வாழ்வு, காதல் உள்ளிட்ட எல்லா உணர்வுகளும் தன்னிலை திரிந்து வேறொன்றாக மாறியிருப்பது குறித்து தீவிர சினத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்துகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைத் தொகுப்பு இருதய ரத்தத்தை சூடாக்குவதை இதை வாசிக்கும் போது உணர்ந்தேன். மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அரசியலாலும் தாராளமயமும் தனியார்மயமும் கூட்டணி வைத்து பொருட்களின் உற்பத்தியை கட்டற்று அதிகரித்து உலகமயமாக்கலின் பூதத்தை ஒவ்வொரு செல்போனிலும் இன்று வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நாம் தலைகுனிந்து கவனிப்பதுதான் அதன் வெற்றி. நம் கழுத்து எலும்புகளை சுத்தியலால் தட்டிப் பணிய வைத்து எக்காலத்திலும் நிமிரமுடியாமல் தொழில்நுட்ப அடிமையாக்கி வைத்திருக்கிறது. தொழில்நுட்பம் அறிவுத்தளத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்கிற அதேவேளையில் அதன் பின்னணியில் உலகச்சந்தை வியாபாரத்தை முன்னெடுப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஒவ்வொரு வீட்டிலும் உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக உணரப்படக்கூடும். இத்தொகுப்பில் வழக்கமான கவித்துவ அழகுகள் தாண்டி ஆன்மாவின் உலை கொதித்து ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்பட்டிருக்கிறது. குறைவான அளவிலான கவிதைகள் என்ற போதும் உலக அளவிலான விரிவான உரையாடலைத் துவங்கி வைக்கின்றன. இது பேசுவது அரசியலையா, பொருளாதாரத்தையா, உலகமயமாக்கலையா, ஆன்மீகத்தையா, காதலையா, தீமைகளையா எனக் கேட்டால் எல்லாவற்றையும்தான் இன்னும் என்னென்ன உண்டோ அதையும்தான் என்று சொல்லத் தொன்றுகிறது.
Comments
Post a Comment