ததும்பும் நதி



மழை உயரம்
என் உயரம்
எனினும்
கால்தட்டும் மலைகளுக்கிடையில்
விரும்பியதால் மட்டுமே
தேங்கிக் கிடக்கிறேன்.

அடைந்து கிடக்கும் அலைமுகத்தில்
காயம் செய்ய முடியாத கற்கள்
கீழே ஆழத்தில்
மௌனத்தில் மூழ்குகின்றன

யானைக்கால்களின் பாய்ச்சலை
முறங்களால் தடுத்ததாக
கர்வத்தில் திமிருகின்றன மதகுகள்.

ஒரு குவளைத்தண்ணீரை
யாரோ
அலட்சியமாக வீசுகிறார்கள்.
அடிவயிற்றில் பரவுகிறது
நீரின்றி இறந்த பறவைகளின்
கடைசிநேரச் சிறகடிப்பு.

அவிழ்ந்து இறங்குகிறேன்
அணைக்கிண்ணம் தளும்புகிறது
பென்சிலால் எல்லை வரைந்த
கரைகள் நடுங்கின்றன

மரங்களை மூழ்கடித்தபின்
பூக்களை மிதக்க விடுகிறேன்
ஊருக்குள் நுழையும் பொது
வயிற்றை அரிக்கின்றன
செரிக்காத நெகிழிக்குடுவைகள்

ஒரு திமிங்கிலமெனத் திரளுகிறேன்
வாலின் அசைவில்
உடைந்து அழுகின்றன
உயர்கட்டிட நகரங்கள்

கடலுக்குள்
நானாகத்தான் விரும்பி நுழைகிறேன்
வெயில்
குத்திக் கொன்றதாய்
தூரத்திலிருந்து
பயந்தபடியே பேசிக்கொள்கிறார்கள்.

காற்றுவெளி - சித்திரை 2019 

Comments