அன்பாக இருப்பது


யார் மீதும்
அன்பாக இருக்கிறேன் என
சொல்லாமல் இரு

உன் அன்பு
கனசதுரப்பெட்டியில்
உருண்டைத் தக்காளிகளை
நெருக்கி அடுக்குவதாக
நசுக்கி அழுகச் செய்து விடும்.

உன் அன்பு
கோழி முட்டைக்குள்
குஞ்சுகளை அடைக்காப்பதாக
பிரசவங்களைப் புறக்கணித்து
இறந்து போகச் செய்து விடும்

உன் அன்பு
நீர்த்தொட்டி மீன்களுக்கு
விடுதலை அளிப்பதற்காக எடுத்து
நீரற்ற கோடையில் செவுள்கள் அலற
துடித்துச் சாக வைத்திடும்

உன் அன்பு
பூனைக்குட்டியை பத்திரமாக
உன் தோள் பையில்
பொத்தி வைத்திருக்கும் போது
தாவும் பிஞ்சுக்கால் எலும்புகளை
உடைந்து போக வைத்திடும்

உன் அன்பை
கைகளாக அணைக்கச் செய்யாதே
சிறகுகளாக மாறும்படி
பிரார்த்தனை செய்

பிரியமானவர்களை
உன் அன்பின் ஆக்கிரமிப்பின்றி
நிம்மதியாக உறங்க விடு


கொலுசு - மார்ச் 2019

Comments