வெயில் பாடல்


நீ கைத்தட்டுகிறாய்
ஒளிர்கின்றன தூசிகள்

இலைகளில்
நீ கை கழுவிய
ஒளித் துளிகளின் கூடல்
சமைக்கப்படுகிறது காலை உணவு

காத்திருக்கிறது கடற்கரை
நடந்து செல்கிறாய் மாயக்கால்களால்.
பொன்னிற ரசவாதம்
நிகழ்கிறது ஒவ்வொரு துகளிலும்

கூரைவழியே கண்கள் தடவி
குழந்தைகளை எழுப்புகிறாய்
கொட்டாவிகளின் அலாரங்கள்
மணியெழுப்புகின்றன

ஒவ்வொரு தெருவிலும்
உன் விரல்கள்
தேடி மூடுகிறது
மின்விளக்குகளின் கண்களை

ஒளிக்கயிறுகளை
வெளியெல்லாம் வீசுகிறாய்
ஊஞ்சலாடும் பறவைகள்
வண்ணத்தில் குளிக்கின்றன

முத்தச் சொடுக்கில்
வாய் திறக்கின்றன மலர்கள்
காற்றில் ஒலிபரப்பாகிறது
நறுமணப் பாடல்
வண்ணத்துப்பூச்சிகளுக்காக.

நேரமாகி விடுகிறது
மரங்களில் அமர்ந்து
நிழல்களை வரைகிறாய்
பகலின் மடியில்
தூங்குகிறது இரவு.

நன்றி : கொலுசு ஜனவரி 2019 

Comments