நல்ல பையன்


முதன்முதலாக
உன்னை நல்ல பையன்
என அழைக்கிறவர்
ஒருபோதும் அறிவதில்லை
நிரந்தரமாக நீ நடிக்கப் போகிறாய் என்று

நீ் அதற்குப் பிறகு
ஒருபோதும்
நீயாக மாறவே முடிவதில்லை
உன் பயணத்தின் தண்டவாளங்கள்
நல்லது நல்லது என விரிகின்றன

நீ உன் முகத்துக்குள்
இன்னொரு கண்ணாடியை உருவாக்கி
ஒவ்வொரு முறையும்
உன்னை சரி செய்வதாக
தண்டிக்க ஆரம்பிக்கிறாய்

நல்ல பையன்
அமைதியாக இருக்க வேண்டும்
நன்றாகப் படிக்க வேண்டும்
பெண்களைப் பார்க்கக் கூடாது
வகிடெடுத்து தலை சீவ வேண்டும்
கோட்பாடுகளை நீயே உருவாக்குகிறாய்

உனக்கு ஒரு போதும் கோபம் வராது
நீ ஒரு போதும் கணக்கு பார்க்க மாட்டாய்
எல்லா வேலைகளையும் விரும்பி செய்வாய்
உன்னைப் போல இப்போது யாருமில்லை
உலகம் உன்னை சம்மட்டியால் அடிக்க
மயிலிறகால் மயக்க மருந்து தடவுகிறது

அவனா அப்படிச் செய்தான்
நம்பவே முடியவில்லை
நல்ல பையனென்று நினைத்தேன்
இப்படிச் செய்து விட்டான் என
உன் வீட்டு வாசலில்
உலகம் புலம்பும் நாளில்
நீ நினைத்த நல்லவற்றிற்காக
நல்லதென நம்பியவற்றிற்காக
நல்லதை செய்யாமலிருந்ததற்காக
நீ தற்கொலை செய்து கொள்கிறாய்

முதன்முதலாக
உன்னை நல்ல பையன்
என அழைக்கிறவர்
ஒருபோதும் அறிவதில்லை
நீ நிரந்தரமாக நடிக்கப் போகிறாய் என்று
நல்லதிற்காக ஒருநாள்
சாகப்போகிறாய் என்று

Comments