ஒரு மிடறு இசை


ஒரு மிடறு இசையைக்
குடித்த பிறகே
உன்னைப் பற்றிய
கவிதையை எழுதுகிறேன்

பகலில் மழைக்காக
இருட்டாகும் வீட்டுக்குள்
மெல்லத் தொடங்குகிறது
நமக்குப் பிடித்த பாடல்

ஆடும் இசைக்கயிற்றில்
இந்தப் பக்கம் நான்
அந்தப் பக்கம் நீ
வழிவிடமுடியாத வழியில்
நடந்து வருகிறோம்

கோடை வெயிலில்
வெந்த ஆப்பிள்கள்
குளிர்க் கடலில்
நுழையும் போதே
மரக்கிளையில் தொங்கிய                  குதூகலத்திற்கு திரும்புகின்றன

தண்டுவடத்தில் ஏறுகிறது
தவிப்பு
மூளையின் நரம்புகளுக்குள்
பொங்குகின்றன
வீணை மழைத்துளிகள்

ஆலாபனையில்
மிதக்கும் நம் முத்தங்கள்
நேர்க்கோடுகளில் சந்திக்கப் பயணிக்கின்றன

தடம் புரளாமல்
ஓடுகின்றன
மன ரயில்கள்.
தண்டவாளங்களைப்
பார்த்துக் கொள்கிறது
இசை

சருகு எரியும் ஒலியில்
தொடங்கிய சுவாசங்கள்
காடுகளுக்குத் தாவுகின்ற
நேரத்தில்
சரியாக ஆரம்பிக்கிறது
மழை.

நன்றி : காற்று வெளி ஜனவரி 2019

Comments