சொல்லாத சொல்


தூரத்தில் ஒலிக்கிறது
"நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல்
கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்
கண்ணதாசன்.

பாடல் வரிகளின் படிக்கட்டுகளில்
பயணிக்கிறோம்
நீளவாக்கிலும் குறுக்கிலும்   
வழிகிறது இசை.

படிக்கட்டுகளின் முடிவில்
நகராமல் நிற்கிறது
" சொல்லாத சொல்லுக்கு        விலையேதுமில்லை " வரி.
நாம் புதிதாகப் பார்த்துக்கொள்கிறோம்
மறைகின்றன படிக்கட்டுகள்
வழிந்த இசை
மழையாக மாறுகிறது.

"சொல்லாத சொல் எது ? "
இருவரும் கேட்கிறோம்.
அவிழ்ந்து விரிகின்றன
உயிரின் குடைக்கம்பிகள்
பெருமழையில் மூழ்குகிறது
மொழியின் சொற்கள்.

ஒரே ஒரு சொல்லைப்        பத்திரப்படுத்தி
மூச்சின் வெப்பத்தில் விசை திரட்டி
உனக்குள் உருள விடுகிறேன்.
நீ சுழல ஆரம்பிக்கிறாய்
ராட்டினத்தின் இருக்கைகளில்
சுழன்று சுழன்று முளைக்கின்றன
லட்சம் சொற்கள்.

சுழற்சியில் உருவாகிறது
சொல் மண்டலம்.
சுவாசிக்கத் தயங்குகிறோம்.
தடையுடைத்து நிரம்புகிறது
காதலெனும் ஒருசொல். 
ததும்புகிறோம் கடலாக

ஒரே ஒரு சொல்லை
பேசுவதற்காக எடுத்து
மீண்டும் மீண்டும்
உடலில் விடுகிறோம்

படரும் மௌனப்பாசியை
அறுக்க ஆரம்பிக்கின்றன
குரல்வளையைக் கடிக்கும்
சொல்மீன்கள்

வீட்டிற்குச் செல்லும் முன்பு
விடைபெறும் கைக்குலுக்கலில்
பரிமாற்றமடைந்து செல்கிறது
சொல்லாத சொல்.


Comments