துயரத்தின் நறுமணம்


அன்பே !
இந்த பழச்சாற்றில் மிதக்கிறது
உன் துயரத்தின் நறுமணம்

அருந்துவது தெரியாமல்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

உப்புக் கரிக்கும் சாதம் சொல்கிறது
உலை கொதிக்கும் போது
நீ அழுதிருக்கிறாய் என்பதை

சமையலறையில்தான் எப்போதும்
கண்ணீரை
ரத்தத்தை
வியர்வையை
துடைத்துக் கொள்கிறாய்

வரவேற்பறையில்
ஒன்றுமில்லையென
காய்ந்த கண்களுடன் சிரிக்கிறாய்

உனக்கென்று
உனக்குத் தெரிந்தவர்கள்
இங்கு இல்லை
மற்றபடி
இந்த ஊரிலும் மழை பெய்கிறது
இந்த ஊரிலும் வெயில் அடிக்கிறது
இந்த ஊரிலும் காற்று வீசுகிறது

நள்ளிரவில்
நான் துடைக்க வருவதற்குள்
காய்ந்து விடுகிறது உன் கண்ணீர்

பறவைகளைப் பார்த்துக்கொள்ள
மரங்கள் இருக்கின்றன
வானம் இருக்கிறது
கூடு எப்போதும்
கூட வருவதில்லை.

நன்றி : கொலுசு மின்னிதழ் பிப்ரவரி 2019

Comments