காற்றாகிக் கொல்லும் புகை


அந்தக் கோபுரத்திலிருந்து
வெளியேறும் புகையைப் பார்த்தால்
பயமாக இருக்கிறது

தொட்டால் கரைந்துவிடும்
மெல்லிய உடலுக்குள்
மறைந்திருக்கின்றன
நுரையீரல் குருதி தேடும்
கறுப்பு உதடுகள்

கைகளால் பிடிக்க முடியாத
உயரத்தில் வளரும் புகை
காற்றாக மாறியது.
தடுக்கும் கைகளை
நள்ளிரவில்
துண்டிக்க ஆரம்பித்தது

கோபுரத்தில் ஏறிப்
புகையை நிறுத்த முடியாதவர்கள்
நஞ்சுக் காற்றுக்கெதிராக
நெஞ்சிலடித்து அழ ஆரம்பித்தனர்

புகைமூட்டத்தில் ஒளிந்திருந்து பாய்ந்த தோட்டாக்கள்
நுரையீரல்களின் குருதியை
அழுது கொண்டிருந்தவர்களின்
முகங்களில் அறைந்தன

புகைக்கு பயந்து
கதவுகளை அடைத்து 
வீட்டுக்குள்
மூச்சை அடக்க ஆரம்பித்தனர்
நகரவாசிகள்

நள்ளிரவில் பிரேதங்களைப்
பரிசோதனை செய்யும் புகை
நாவால் சுவைத்துப் பார்க்கிறது
தோட்டாக்களை.

Comments