4. பெரிதினும் பெரிது முகங்களைத் திருத்துதல் - முகுந்த் நாகராஜன் கவிதைகள் குறித்து

 





பணிநிமித்தமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும்  நண்பன் எப்போதாவது வீடியோ அழைப்பில் காட்சி தருவான்.  ஊரிலிருக்கும் போது மரங்களை, வயல்களை தெருக்களை காட்டச் சொல்லுவான். குடும்பம் குறித்து ஆரம்பிக்கும் பேச்சு, பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று வளர்ந்து பின்பு  வாடகை வீட்டில்தான் வசிக்கிறாயா சொந்த வீடு கட்ட வேண்டியதுதானே என்றெல்லாம் விரியும்.உள்ளூர் அரசியலைத் திட்டிவிட்டு வழக்கம் போல வாழ்வில் எதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் நண்பா என்பதில் முடியும். நான் சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்ததும் "என்னடா சாதிக்க வேண்டும்" என்று கேட்பேன். பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என்பான். அவனது குடும்பம் ஊரில்தான் இருக்கிறது.அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லவிருப்பதாகவும் சொன்னான். கடந்த வாரம் அவனது மகனுடன் வீடியோ அழைப்பில் பேசிய போது புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டியின்  இதயம் துடிக்கும் ஒலியைக் கேட்டுவிட்டு "டப் டப் டப் னு அடிக்குதுப்பா " என்றானாம். மகனுக்கு ஆங்கிலத்தில் சரியாகப் பேச வரவில்லை கவலையாக இருக்கிறது என்றான் நண்பன். அழைப்பிலிருந்து இருவரும் மறைந்து கொண்டோம் . " …….எவ்வளவோ பார்த்துவிட்டான்

இது போல, அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென " என்று இசையின் கவிதை ஒன்று உண்டு. அந்தச் சிறுவனுக்கு ஆட்டுக்குட்டி இதயம் துடிப்பது அத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. அதுதான் வாழ்வு என்று அப்பாவிடம் அவனுக்கு சொல்லத் தெரியவில்லை.  வாழ்க்கை எப்படிப் போகிறது என்று யாரேனும் கேட்டால் முகுந்த் நாகராஜன் கவிதையைப் போல போகிறது என்று புன்னகையுடன் சொல்வேன். 


என்னிடம் பெரிதாக 



'வாழ்க்கை எப்படிப் போகிறது '

என்று கேட்டான் 

ரொம்ப நாள் கழித்து 

சாட்டில் வந்த நண்பன்

முன் தினம்

சரவணபவனில் 

பெரிய தோசை  வேண்டும் 

என்று அடம்பிடித்து வாங்கிச் 

சாப்பிட முடியாமல் 

முழித்துக் கொண்டிருந்த 

சிறுமியைப் பற்றி சொன்னேன் 

'  அப்புறம் பார்க்கலாம் '  என்று 

மறைந்து போனான் 

என்னிடம் பெரிதாக 

எதையேனும் 

எதிர்பார்க்கிறார்களோ 


        ( K அலைவரிசை    தொகுப்பிலிருந்து ) 



குழந்தைகள்தான் முழுமையாக வாழ்கிறார்கள். முழுமையின் கடலிலிருந்து எந்நேரமும் கவிதைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பெரிய தோசை வேண்டுமென அடம்பிடித்து வாங்கி சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டிருக்கும் சிறுமியின் தலையில் ஆசீர்வதித்து  வாழ்க்கை நகர்ந்து செல்லும் போது பின்னனியில் ஒலிக்கிறது "தோசையம்மா தோசை " பாடல். 


🔘🔘🔘 


மோதிக் கொண்டு விளையாடுகின்றன இரண்டு அலைகள். குறும்பான குட்டி அலை ஒன்று இடையில் குதித்து ஆளுக்கு ஒரு உதை விடுகிறது செல்லமாக. குட்டி அலை வந்து பிரித்து விட்டதே என கோபம் இல்லை பெரிய அலைகளுக்கு. வலிப்பது போன்று நடித்து ஓரத்திற்குச் செல்கின்றன. உடைந்து நுரைக்கும் குட்டி அலையின் புன்னகையில் கடல் ததும்பிக் கொண்டே இருக்கிறது. கடலைக் கண்டுவிட்ட வந்த சிறு பெண் வீட்டுக்குள் கடலை உருவாக்குகிறாள் . தோள்கள் காவடி தூக்குமிடமாக, முதுகு டக் டக் டக்  குதிரையின் முதுகாக, யானை மேல் அம்பாரியாக  என அப்பாவை எல்லாவகையான உயிராகவும் பொருளாகவும் குழந்தைகள் மாற்றி விளையாடுவார்கள். அப்பாக்கள் எடுக்கும் அவதாரங்கள் ஒன்றா இரண்டா ? மகளுக்கு குட்டிப்பாப்பாவாக அப்பா மாறுவதும் அதனால்தான். சிறிய தொந்தியுடன் படுத்திருக்கும் அப்பாவின் மீது ஏறும் குட்டி அலை உருண்டு இடது பக்கம் செல்கிறது. திரும்பி ஏறி உடையும் அலை , விடாது விளையாடிக் கொண்டே இருக்கிறது. அலையடித்து அப்பாவைக் கடலாக்குகிறது. மிதக்கிறது மெத்தை. திடீரென தொந்தியில் ஈரம் கசிகிறது. அலை விளையாட்டுக்கு சாட்சி வேண்டாமா ? அப்பாவை கடலாக மாற்றுவதை வெகு எளிதாக செய்து முடித்து விடுகிறார் முகுந்த் நாகராஜன்.



நெய்தல் 


கடலைப் பார்த்துவிட்டு 

வந்த அன்று இரவு 

அலை விளையாட்டு 

ஆட ஆரம்பித்தாள் 

சின்னப்பெண்.

தலையை விரித்துக் கொண்டு 

கை இரண்டையும் 

நீட்டிக்கொண்டு படுப்பாள் 

கொஞ்ச நேரம் 

அமைதியாக இருந்துவிட்டு 

அப்படியே பொங்கி எழுந்து 

பக்கத்தில் படுத்திருக்கும் 

அப்பாவின் மேல் 

குப்புற விழுந்து 

அப்படியே கொஞ்சம் 

உருண்டு விட்டு 

மீண்டும் அந்தப் பக்கத்தில் இருந்து 

ஆரம்பிப்பாள் 

அலை விளையாட்டில் 

நனைந்து போன அப்பாவை 

இருட்டில் லேசாக 

நக்கிப் பார்த்த அம்மா 

' உப்புக்காரா' என்றாள் மெதுவாக 

மகள் சிற்றலை போல 

புரண்டு படுத்தாள் 



  ( K அலைவரிசை தொகுப்பிலிருந்து )




குழந்தையுடன் விளையாடும் ஒவ்வொரு கணமும் பொற்கணம். கவிஞனுக்குச் சொல்லவே வேண்டாம்.  குழந்தையின் அலை விளையாட்டு முடிந்ததும் சன்னமாக  ஒலிக்கும் "உப்புக்காரா " எனும்  அம்மாவின் குரல் அப்பாவிடம் நீ அலையிலிருந்து கடலாக மாறிவிட்டாய் என்று சொல்லும் போது கமகமக்கிறது காதல். நெருங்க முடியாத அலைகளுக்கிடையே குட்டி அலை விளையாடும் வாழ்வின் அழகை கவிதையை விட வேறு யாரால் சொல்லிவிட முடியும். 


🔘🔘🔘 


'அப்பர் பெர்த்' என்றால் குழந்தைகளுக்கு ரயிலில் பல்லக்கு. கீழேயும் நடுவிலும் இல்லாத சுதந்திரமும் உற்சாகமும் மேலே அவர்களுக்கு வந்துவிடும். ரயிலின் தலையைத் தட்டியபடி விளையாடுவார்கள். விழுந்து விடுவார்கள் என்று பயத்திலிருக்கும் போதே "ஜாலியா இருக்கும்மா " என்று கூச்சலிடுவார்கள். அப்பர் பெர்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவை. இறக்கி விட்டதும் சுருங்கி விடுகிறது பூமுகம். மொத்த இதழ்களும் மூடிக் கொள்கின்றன.உறங்குபவளின் முகமெங்கும் பரவியிருக்கிறது கோபம். ஏற முடியாத இயலாமை உள்ளே பொங்கி வழிகிறது. தூங்கி விடுகிற முகத்தை சரி செய்வது எளிதாக இல்லை.  அம்மா விட்டெறிந்த கடுஞ்சொல்  தாக்கியிருக்கிறது. முகத்தையும் சரிசெய்ய வேண்டும். தூக்கத்தையும் கலைக்காதிருக்க வேண்டும். எல்லாவற்றையும் அனுபவித்திருக்கிறார்  முகுந்த நாகராஜன். 

ரயிலில் ஏறும் போதெல்லாம் அப்பர் பெர்த்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கவிதைக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டுத்தான் எனது பெர்த்துக்கு நகர்கிறேன்.




முகம் திருத்துதல் 



மேல் பர்த்தில் இருந்து 

இறக்கி விட்டதற்காக 

அம்மாவிடம் கோபித்துக் கொண்டு 

முகத்தைத் திருப்பிப்  படுத்துக் கொண்டவள் 

ஐந்து நிமிஷத்தில் அப்படியே 

தூங்கியும் விட்டாள் 

கோபமாகத் தூங்குகிற மகளை 

கொஞ்ச நேரம்  வேடிக்கை பார்த்த 

அவள் அம்மா அப்புறம் 

போர்வையை ஒழுங்கு செய்வது போல் 

மகளின்  முகத்தை  சரி செய்து விட்டாள் 

தூக்கம் கலையாமல் 

பட்டுப்பாவாடையைக் கழற்றிவிட்டு 

பழைய கவுனை  அணிவிப்பது போல 

அத்தனை எளிதாக 


     ( கிருஷ்ணன் நிழல் தொகுப்பிலிருந்து




"பட்டுப்பாவாடையைக் கழற்றிவிட்டு பழைய கவுனை அணிவிப்பது போல அத்தனை எளிதாக " ஆகா ! அம்மா திருத்தும் முகம் அத்தனை அழகாக உறங்குகிறது. முகுந்த் நாகராஜனுக்கு வாழ்வே குழந்தைகள் நிறைந்த வீடாக இருக்கிறது. கவிதைகள் ஒவ்வொன்றும் சலிக்காத கொண்டாட்டத்தை உருவாக்கும் வேளையில் வாசிக்கும் முகங்களைத் திருத்திக் கொண்டே இருக்கின்றன.




கவிஞர் : முகுந்த் நாகராஜன் 


கவிதைத் தொகுப்புகள் : 

1.அகி, 2.ஒரு இரவில் 21 சென்டி மீட்டர் மழை பெய்தது, 3.கிருஷ்ணன் நிழல், 

4.K அலைவரிசை, 5.கின்மோர் 




Comments