அழியாத சாட்சியம்

  



பிடுங்கிய மலர்களை

உயிருள்ள மலர்களினிடையே 

செடியில் நான் 

சூடியிருக்கக் கூடாது.


தொட்டுப் பார்த்துக் 

காற்றிலாடி விளையாடத் 

துவங்கும்போது

பயம் கூடிவிட்டது.


புகைப்படத்துக்காகவே 

அழைத்து வந்தேன் 

போகலாம்  என்கிறேன்.


பூங்காவின் 

வட்ட ராட்டினத்திலிருந்து 

இறங்க விரும்பாத குழந்தைகளாய் 

தலையாட்டுகின்றன

எல்லா மலர்களும் 


புகைப்படத்தை 

நிரந்தரமாக 

அழித்துவிட்டு

செடியின் காலடியில் 

மண்டியிடுகிறேன் 


தலைவாரி முடித்து

ஓடிவரும் மகளுக்காக 

ஒரேயொரு மலரை 

உதிர்க்கிறது செடி.


Comments