🦩நிறம் மாறும் கொக்குகள் 🦩

 



இடது தொடையைக் 

குடைந்து கொண்டிருந்த 

கொக்குகளின் தலையிலடித்து 

அமைதி காக்கும்படி வேண்டினேன் 

இதயத்தினருகில் வைத்த போதும் 

மரங்கொத்தியாகி 

கூர் தீட்டிக்கொண்டிருந்தது அலகை  

பதிலுரைத்து 

இரையளிக்காவிடில் 

பல்கிப் பெருகும் பிடிவாதம் பிடித்தவை 

ஒவ்வொன்றின் அலகைத் திறக்கையிலும் 

வெடிக்க ஆயத்தமாயிருக்கும் எரிமலையின் கண்கள் 

தப்பிப்பதற்காக 

மீன்களை மட்டும் வைத்து அனுப்புவேன்

அலகைத் திறப்பவள் 

நான் இல்லையெனத் தெரிந்ததும்

கழுத்தைத் திருகி வீசி விடுவாள் 

இறந்த கொக்குகள் சுழலும் பகுதி 

மிகவும் அபாயகரமானது 

நீளமாக வரும் கொக்குகள் 

நீளமான மீன்களையே கேட்கும் 

வாலை மட்டும் வைத்தால் 

அமைதியாக வீட்டுக்குச் சென்று  

அவளுடலைக் கொத்தித் தின்னும்  

வெற்றிடமாகக் கொக்குகள் வருவது 

பேரபாயத்தின் மௌனச் சங்கொலி  

தாமதிக்காமல் 

இரையாக மாறிச் சென்றிட வேண்டும்

கொக்குகள் தீராத 

விரல்களைக் கொண்டிருப்பவளால்  

பறக்க விடாமல் இருக்கமுடியாது 

இருவருக்குமிடையே 

பறந்து செல்லும் மர்மக் கொக்குகளை 

வழியில் ஒரு நாள் சந்தித்துவிட்டேன்   

எனது ஊரில் சிவப்பாக வந்து சேர்வது 

அவளது ஊரில் நீலமாகச் 

சிறகடித்துக் கொண்டிருந்தது.


Comments