15.குருதி பெருக்கும் கசையடிகள் உள்ளாறாத ரணங்களின் உரையாடல்கள்--தேவசீமா கவிதைகள் குறித்து

  





ஃபோனில் ஒரு போட்டோ எடுத்துவிட்டு ஒருமுறை தொட்டதும் " இருநூறு ரூபாய் பெறப்பட்டது "என்று அலறியது குட்டி டிரான்சிஸ்டர் போன்ற  வெள்ளைப்பெட்டி. வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்,  பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்த போது கடைக்காரர்  எரிச்சலுடன் இருந்தார். "நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் தாத்தா" என்றார். வீட்டுக்குத் திரும்பிய போது மருமகளிடம்  அன்றைய தின  செலவுக்காக இருபது ரூபாய் கேட்க என்னவோ போல இருந்தது. கவனித்த மகன் சட்டைப்பையில் இருபது ரூபாயை வைத்தான். பிறகு அவனது நண்பனிடம் " டேய் ! மாதக் கடைசி கொஞ்சம் டைட்டா இருக்கு. கிரெடிட் கார்டு பில் கட்டனும். ஒரு பத்தாயிரம் அனுப்புடா!" என்றான். ஃபோனை வைத்ததும் நண்பன் ஃபோனிலிருந்து வங்கிக்கு பாய்ந்த மின்பணக் குதிரை பிறகு அங்கிருந்து  துள்ளிக் குதித்து மகனது ஃபோனுக்குள் நுழைந்து கணைக்கத் தொடங்கியது.  "பணம் கேட்க கூச்சமா இல்லையாடா ? "என்றார் மகனிடம். "அதெல்லாம் ஏதுமில்லைப்பா. வீட்டு வாசலிலா போய் நிற்கிறோம். ஃபோனில் தானே கேட்கிறோம். ஃபோனில் பணம் வந்துவிட்டது. அவ்வளவு தான்" என்றான். பையிலிருந்த இருபது ரூபாயைத் தொட்டுப்பார்த்தார். அது அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இழுத்துச் சென்றது. அவருக்கு திருமணமான இரண்டாவது ஆண்டில்  மழை மாதத்தின்  அதிகாலையொன்றில் அவரது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டார். சரியாக வேலைக்குச் செல்லாத காலமாதலால் கையில் சுத்தமாக பணம் இல்லை. தந்தையை வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்து விட்டு ,ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் அதற்குள் யாரிடமும்  சொல்ல வேண்டாமென்றும் மனைவியிடம் சொல்லிவிட்டு ஓடினார். தெருவில் உள்ளவர்களிடம், நண்பர்களிடம் கேட்டால் அவமானமாகி விடும் என்று பக்கத்து ஊரிலிருந்த பெரியப்பாவின் மகனைப் பார்ப்பதற்காக முதல் பேருந்திலேறி சென்று கொண்டிருந்தார். கார்காலம் சூரியனை விழுங்கி முற்றிலும் இருளாக்கி விட்டிருந்தது. அவர்களது வீட்டிற்கும் பெரியப்பா வீட்டிற்குமிடையே ஏற்கனவே தகராறு முற்றி பேச்சு வார்த்தை ஏதுமின்றி இருந்தது. இருப்பினும் நம்பிக்கையுடன்தான் சென்றார். வீட்டை நெருங்கியதும் மழையில் மூழ்கியிருந்த கால்களை கூச்சமும் அவமானம் பிடித்து இழுத்தது.  அழுகையைக் கட்டுப்படுத்தியபடியே வீட்டுக் கதவைத் தட்டினார். சாவு செலவுக்கு  ஆயிரம் ரூபாய் பணம் வேண்டுமென பெரியப்பாவின் மகனைக் கேட்டார். நாற்காலியில் திரும்பி அமர்ந்திருந்தபடியே சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தவர் " திடீர்னு கேட்டா ஆயிரம் ரூபாய்க்கு எங்க போறது. இல்லைனு சொல்லி அனுப்பு " என்றார் அவரது மனைவியிடம். அவர் நினைத்திருந்தால் யாரிடமாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். அலட்சியத்தால் செய்யவில்லை. நேரில் பார்க்காமல் புறக்கணித்தது இன்னும் வலித்தது. என்ன செய்வதென புரியாமல் புலம்பியபடியே பேருந்தில் ஏறினார். தலைக்கு மேலே ஓட்டையிலிருந்து மழை நீர் ஊற்றிக் கொண்டிருந்தது. சட்டை முழவதும் நனைந்தபடியே அமர்ந்திருந்தர் ஊரில் இறங்கிய போது மழை விட்டிருந்தது. படபடக்கும் நெஞ்சுடன் வீட்டை நெருங்கிய போது அவரது நண்பர்கள் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தார்கள்.  கண்ணீருடன் சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்தார். அதே இருபது ரூபாய் துடித்துக் கொண்டிருந்தது.



ஒரு ஸ்விட்சைத் தொட்டதும் மனத்தின் எல்லாக் கதவுகளையும் திறக்கும் தேவசீமாவின் இக்கவிதை கடந்த காலத்தின் கண்ணீர் அறைகளுக்குள் பிரவேசிக்கும் போது மட்டும் மிகவும் கவனம் என்கிறது. 




தொடுதிரை - அறுவடை 


ஒரே வயலில் 

விளைகிறது 

கோதுமை 

தக்காளி 

அரிசி 

லெட்டூஸ்

ஸ்ட்ராபெரி 

உருளை 

வியந்து வியந்து வளர்க்கிறார் தாத்தா 

தண்ணி உரம் வேண்டாம் 

தொடுதிரையினை தேய்த்தால் போதும் 


நாத்து நட 

களை பறிக்க வேண்டாம் 

மீளத் தேய்த்தால் 

முடிந்துவிடும் அறுவடை 



பச்ச பட்டன தேச்சு 

பேசத்தெரியாத கெழவனுக்கு

எங்கருந்துடா வெளயாடத் 

தெரிஞ்சது 


மனசுலயே பயிர் நட்டு 

உயிர அறுவடை 

செஞ்சுக்குவான் தாயே 

வெவசாயி 


( வைன் என்பது குறியீடல்ல தொகுப்பிலிருந்து )



"வியந்து வியந்து வளர்க்கிறார் தாத்தா 

தண்ணி உரம் வேண்டாம் 

தொடுதிரையினை தேய்த்தால் போதும்"

எப்போதும் ஆற்றில் நீர் பெருகி வருகிறது. வயல்களில் நெற்கதிர்கள் பொங்கி வளர்கின்றன. விளையாட்டில் எல்லாமும் பொன்னிறத்தில் மின்னுகின்றன. வாங்கிய கடனுக்காக வங்கியில் திட்டுகிறவர்கள் யாருமில்லை. கடனைக் கட்ட வழியின்றி பூச்சி மருந்தைக் குடித்து நுரைதள்ளிக் கிடப்பவர் யாருமில்லை. 

ஃ போனில் ஒரு தொடுகையில் எல்லாமும் சாத்தியம்தான்.

"மனசுலயே பயிர் நட்டு ,உயிர அறுவடை 

செஞ்சுக்குவான் தாயே 

வெவசாயி ".  விவசாயம் தேசத்துக்கு முதுகெலும்பு. விவசாயி தேசத்துக்கு செத்த எலும்பு.  ஒரு பருவத்திலாவது கடன் வாங்காமல் விவசாயம் செய்தது கிடையாது. வயலை நம்பி வானத்தை நம்பி காத்து காத்து ஏமார்ந்து வெறுத்துப் போய் மாநகரத்துக்கு கூலி வேலைக்கு செல்வது இல்லாவிடில் நாதியற்று செத்துப் போவது. ஃ போன் விவசாயத்தில் எங்கும் வளமை. எல்லாம் வளமை. மீண்டும் மீண்டும் விளையாடி பெருமூச்சு விடுகிறார்கள். 




🔘🔘🔘 


வேளாங்கண்ணியில் இறங்கிய போது கோடைவெயில் உச்சி மண்டையில் சுத்தியல் அடித்துக் கொண்டிருந்தது. மகளுக்கு முடியிறக்கிய பிறகு வெயில் தாங்க முடியாமல்  நிச்சயமாக அழுது கொண்டே  இருப்பாளென்று நினைத்தாள். பழைய வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்வதற்கு கிளம்பிய போது கிணற்று வடிவில் சுருங்கியிருக்கும் மாதா குளம் நினைவுக்கு வந்தது. மூடிய கிணற்றின் சல்லடைத் துளைகள் வழியே உள்ளே பார்க்கும் போது நீர் தளும்புவது இலைகள் அசைவது போன்று வெவ்வேறு வண்ணங்களில் தெளிவற்ற காட்சியாக இருக்கும். மண்டியிட்டபடி பிரார்த்தனை செய்து கொண்டே நிறைய பேர் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். பேருந்திலிருந்து  பார்த்த போது கை நீட்டி அழைப்பது போன்று  இருந்த ஏசுவின் தோளில்  பின்பு சிலுவையை கொடுத்திருந்தார்கள். 'பாவமில்லமா ! வலிக்காதா"   என்றாள் மூன்று வயது மகள். அம்மாவின் பையில் ஒரு  முழங்கால் வடிவத்திலான சிறிய வெள்ளித்தகடு இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு 

விபத்தில் அடிபட்டிருந்த கணவனின் கால் சரியாகி விட்டிருந்ததால் நேர்த்திக் கடன் தீர்க்க வந்திருந்தாள். கடலுக்கு சென்ற போது, சிறு வயதில் தனக்கு காது வலி வந்த போது அம்மா காது போன்ற வெள்ளித் தகடு வாங்கி வைத்தது நினைவுக்கு வந்தது. மகளுக்கு மொட்டையடித்து புத்தாடை அணிந்த பிறகு ஆலயத்துக்கு சென்றார்கள்.  ஒரு காலை ஊன்றியபடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவரிடம் " நீங்களும் வெள்ளித் தகடு வாங்கி வையுங்கள். சரியாகி விடுமென்றாள் " மகள்.  "தெரியாமல் அடிபட்ட கால்களே சரியாகும். தெரிந்தே இழந்த கால்கள் சரியாவதில்லை "என்றார். ஒவ்வொருவருக்கும் தகடுகளை வைத்த பிறகும் நிறைய நிறைய பிரச்சினைகள் உதித்துக் கொண்டேதான் இருக்கின்றன. கால் சரியாகி விட்ட தனது கணவன் தற்போது குடித்து உடலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான். இரைப்பை என்ன ஆகுமோ தெரியாது. வாழ்வு மொத்தமுமே பிரச்சினையாக இருக்கிறதே. வாழ்வுக்கென்று ஒரு தகடு செய்து விடுதல் சாத்தியம்தானா ? என யோசித்தாள். வாழ்வை முழுமையாக சரிசெய்து விட்டால் நாம் இறந்த பிறகு எவ்வாறு நேர்த்திக் கடன் செய்வது என்றும் தோன்றியது. மாலையில் சூரியன் கையசைத்து விடைபெறும் நேரம் வரவே ஊருக்குச் செல்லும் பேருந்தைத் தேடி வேக வேகமாக நடந்தாள். 



அழுகையை யாரிடமாவது கொடுத்து விட்டு சிரிப்பை அணிந்து கொண்டிருக்கும் கண்களை கண்ணாடியில் பார்க்கும் போது கழுவியது போலிருக்கும் முகத்தின் மினுமினுப்பை மனத்தில் பூசுகிறது இக்கவிதை.



ஆயிரத்தோராவது கண்ணு 


தனிமைய மட்டுமே சொல்லுற 

இரண்டு கண்ணு இருக்கு 

எங்கிட்ட 

அது அழும் போது 

தொடைக்க வழியில்லாம 

ஆத்து ஆத்து போவேன் 

அழுதுட்டு  அதுபாட்டுல 

கேலியா விரக்தியோட 

சிரிச்சிக்கிரும் 

எப்பயாச்சும்  கொஞ்சங் கோவமா 

பாக்கும் 

இந்த வாட்டி  என்ன பண்ணுனே 

அந்த ஆயிரம் கண்ணுடையா 

கோயிலுக்கு போனேன் 

போனவ 

அங்க ஒரு சோடி கண்மலர 

நாப்பது ரூவான்னு வாசல்ல வாங்கிட்டு 

ஆத்தாகிட்ட போயி சொன்னே

ஆயி மகமாயி இந்தா 

உன் ஆயிரத்தோராவது 

கண்ணு 

பிச்சு கிச்சு பாத்துராத 

பொத்தி வெச்சு பாத்துக்கன்னு 

இனி உம்பாடு அவம்பாடு 


( வைன் என்பது குறியீடல்ல

தொகுப்பிலிருந்து ) 


"அது அழும் போது ,

தொடைக்க வழியில்லாம 

ஆத்து ஆத்து போவேன் "

பொங்கி வழியும் மனத்தைத் துடைக்க முடியாமல்,கண்களை எவ்வளவு துடைத்தும் ஆற்றுதல் கிடைப்பதே இல்லை. அழுது 

அழுது பிரச்சினைகள் உடலில் எழுதும் கிறுக்கு வரிகளை அழிப்பதே தொடர் வேலையாக மாறிவிடுகிறது. அன்னைகள் அழும் போதெல்லாம் தீர்க்க முடியாமல் தவிக்கும் பிரபஞ்ச பேரன்னையின் கதறலை யார் கவனித்து சரி செய்யப் போகிறார்கள். "ஆயி மகமாயி இந்தா 

உன் ஆயிரத்தோராவது கண்ணு ,

பிச்சு கிச்சு பாத்துராத 

பொத்தி வெச்சு பாத்துக்கன்னு 

இனி உம்பாடு அவம்பாடு ". அவனை அடித்தாலும் இவள்தான் துடிப்பாள். அவனாகவே எல்லாவற்றையும் உணர்ந்து திருந்த வேண்டும். பேரன்னைக்கு தினமும் குவியும் அழுகை விண்ணப்பங்களை சரி பார்த்து நடவடிக்கை எடுப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறது. கண்களை மூடி தவம் செய்தாலும் அழுகின்ற அன்னையர் கலைத்து விடுகிறார்கள். கவிதை கண்களை மட்டுமல்ல பூட்டிக்கிடக்கும் வீட்டின் இருளில்  சிறைப்பட்டிருக்கும் நெஞ்சங்களையும் ஒரு சேர மலர்த்துகிறது. 





🔘🔘🔘 


அவளுக்கு பத்து  வயது இருக்கும் போது தந்தை ஒரு பெரிய கண்ணாடி வாங்கி வீட்டில் மாட்டியிருந்தார். அவளைத் தவிர வேறு யாரையும் அதைப் பார்க்கவிட மாட்டாள். அதைப் பார்க்கும் போதெல்லாம் வளர்வதாக நினைத்து பூரிப்பாள். அபார்ட்மெண்டில் விளையாடும் போதும், சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் போதும் ஏதோ ஒரு புதிய கண்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றும். அவளிடம் பேசுபவர்களிடத்திலும் வித்தியாசத்தை கவனித்தாள். பள்ளியில் அவளது தலையை நான்கு முறை தடவி வாழ்த்து சொன்னவரின் கைகளை எடுத்து விட்ட போது தலையில் முட்கீரிடம் அணிந்தது போல வலித்தது. லிப்டில் அருகிலிருந்தவர் வேண்டுமென்றே இடித்துக் கொண்டு நின்றதும் உறுத்தியது. கடைகளில், திரையரங்குகளில் எங்கு சென்றாலும் யாராவது ஒருவர் உடலைக் கவனிப்பதும், சந்தர்ப்பங்களில் தீண்டிக் கொண்டே இருப்பதும் எதற்காக என குழம்பிக் கொண்டே இருந்தாள். தொலைக்காட்சியில்" குட் டச் பேட் டச்  " குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள் " "எல்லாமும் பேட் டச் " என்றாள். கண்ணாடியில் உடல் வளர்வதை கவனிக்கவே தோன்றவில்லை. உடலை வளராதே என்றாள். கண்ணாடியைத் தூக்கி அறையின் மூலையில் வைத்தாள்.  வெளியே செல்லும் போதெல்லாம் "பத்திரமாக இரு ! " என்று அம்மா சொன்னால் " உடலைக் கழற்றி வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றால் பத்திரமாக இருப்பேனா அம்மா? " என்று கேட்டாள்.




தேள் கொட்டுவது போன்று திடீரெனத் தாக்குவது மட்டுமல்லாது விஷத்தின் வீரியத்தை அலையலையாய் நெஞ்சில் பரவச் செய்யும் கவிதை நிம்மதியற்று நம்மை நாமே அடித்துக் கொள்ள வைக்கிறது.




கலாம்கள் 


ஏதோ ஒரு மேம்பாலத்தில் 

சப்பனமிட்டு முட்டிகள் உரச 

அமர்ந்திருக்கும் 

அழுக்கான இருவரை 

எதேச்சையாய் 

பாராதிருக்கலாம்.

ஆதூரமாய் அவள் தலையை தடவிய 

கரங்களின் அனுசரனை 

வினாடியில் கீழிறங்கி 

தோளிரண்டை அழுந்தப் பற்றின 

அத்தோடு விட்டிருக்கலாம் கடவுள் 

என்னை 

சிக்னலாவது கருணையினை 

பச்சையாய் ஒளிர்ந்திருக்கலாம் 

கருமம் நானாவது  தலையை 

திசை திருப்பி 

காதைப் பொத்தி இருக்கலாம் 

சற்றே மனநிலை தவறிய  அவளின் மார்பு 

வெறித்தனமாக கடிபட்டதை 

அவள் உயிர் வாதையில் 

அலறியதை

காணாமலே கடந்திருக்கலாம் 

இத்தேரும் நானும் 


( வைன் என்பது குறியீடல்ல

தொகுப்பிலிருந்து


காணாவிட்டாலும் கேளாவிட்டாலும் கூட குற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆதரவான கைகள் என்று நம்பி அடைக்கலம் புக முடியவில்லை. எல்லாக் கரங்களும் உடல் தேடியே நகர்கின்றன.  கண்கள் மூடி உறங்கும் போதும் கூட உடலெங்கும் விழித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தேவசீமாவின் கவிதைகள் வாதையை நேரடியாகச் சொல்லும் போது கசையால் அடித்து இருதயத்தில் குருதியை பெருக்குவது போலிருக்கிறது. வாசிப்பின் முடிவில் எழும் உள்ளாறாத ரணங்கள் கண்ணீர் மல்க உரையாடுகின்றன. 




கவிஞர் : தேவசீமா 


கவிதைத் தொகுப்புகள் : 


1. வைன் என்பது குறியீடல்ல 


2. நீயேதான் நிதானன்




Comments