16. உடைக்கப்பட்ட மலையின் பெருவெடிப்பு உறைந்திருக்கும் கல்லின் அமைதி --சமயவேல் கவிதைகள் குறித்து

 




அவசர அழைப்பு வந்ததிலிருந்தே

பரபரப்பாக்கிக் கொண்டிருந்தார்

மொத்த வீட்டையும். அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கம் கலைந்ததால் அழுது கொண்டே தாயிடம் ஓடினார்கள்.  ஒரு ஷூ வைக் காணவில்லை என்பதால்   உச்சகட்ட கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார். ஃபைல்களை எடுத்து காரில் வைத்துக் கொண்டிருந்த போது டிரைவரை "சீக்கிரம் வா " என்று திட்டினார். மிக விரைவாக ஃபைல்களைப் பார்ப்பவர் என்ற பெயர் கிடைத்தபிறகு அதைத் தக்க வைப்பதற்காகவே வாழ்வெல்லாம் ஓடிக்  கொண்டிருந்தார்.இரண்டு இட்லிகள் கூட சாப்பிட நேரமின்றி, பழச்சாறு அருந்தி விட்டு செல்வார்.  வீட்டில் இருந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை,  படித்துக் கரைத்துக் குடித்துவிட்டதால் அத்தனை கர்வமுடன் இருந்தார். வீட்டில் யாரையும் எதற்காகவும் பேசவிடமாட்டார். குழந்தைகளைக் கொஞ்சியதும் இல்லை. அஞ்சி நடுங்கினார்கள் உறவினர்களும். உயரிய பொறுப்பில் இருந்ததால் அதையே வாழ்வாக, தனது அடையாளமாக ஆக்கிக் கொண்டார். ஒவ்வொரு இரவும் சட்டையைக் கழற்றிவிட்டு குளிக்கும் போது கூட உடலைக் கவனிக்க மாட்டார்.  தண்ணீர் ஊற்ற ஊற்ற அது இளப்பாறுதலுக்கு கெஞ்சும். மனம் இரங்கவே மாட்டார். குளிக்கும் போதும் மொத்த ஃ பைல்களையும் மூட்டை கட்டி மூளையில் ஏற்றியிருப்பார். பாரம் தாங்காமல் கவிழ்ந்து விழும் லாரியைப் போல சமயங்களில் ரத்த அழுத்தம் அதிகமாகி நாற்காலியில் அமர்ந்து விடுவார். அப்போதும் காலிங் பெல்லை அழுத்தி மாத்திரைகளை வர வைத்து 

ஃ பைல்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஊரிலிருந்து வருபவர்கள் அந்த மிகப்பெரிய அலுவலகத்தில் அவரது பெயர்ப்பலகையுடன் உள்ள அறைக்குள் நுழைந்து அவரைப் பார்த்துப் பேசியதை பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சொந்த ஊருக்குச் சென்றாலும், காரிலிருந்து இறங்காமல்தான் பேசுவார். "இன்றே ! இப்பொழுதே ! உடனே !" என்பதுதான் அவரது மந்திரமாக இருந்தது. ஒரு மணி நேரம் ஓய்வு கேட்டு கெஞ்சிய உடல் இயந்திரம் பிறகு ஒரு நாள் கொடுங்கள் என்று மன்றாடியது. அவர் அதன் இதயத்தில் ஓங்கி உதைத்தார். " எவ்வளவு முக்கியமான பணிகள் இருக்கின்றன! வாய்ப்பே இல்லை " என்றார். பல ஆண்டுகள் கேட்டு  சலித்துப் போன இயந்திரத்தின் பாகங்கள் குழம்பி ஒழுங்கற்று வேலை செய்ய ஆரம்பித்தன. முதலில் மாத்திரைகளை அனுப்பி மிரட்டியவர், பிறகு மருத்துவர்களை வைத்து இயங்கும்படி மிரட்டினார். யார் பேச்சையும் கேளாத நிலைக்கு வந்தது இயந்திரம். மொத்தமாக சோர்ந்து, தன்னை அழித்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்து ஆசனவாயில் புற்று நோயாக மாறியது. கழிப்பறை சென்றால் திரும்புவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும் சூழல் வந்தது.கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தார். அந்நிலையிலும் வீட்டில் உள்ளவர்களைத் திட்டுவதை மட்டும் விடவே இல்லை. அவருக்கு பதவி உயர்வு வந்திருந்த நாளில் மருத்துவமனை படுக்கையில் ஒவ்வொரு மணி நேரத்தையும், கடிகாரத்தில் மிக நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஊரிலிருந்து வந்திருந்த அவரது அக்கா கண்ணீர் மல்க திருநீறு பூசினார். பதவி உயர்வுக்கான ஆணை ஆரஞ்சு பழங்களின் பக்கத்திலேயே படபடத்துக் கொண்டிருந்தது.




கைகளைப் பார்த்து  விரல்களுக்கு நன்றி சொல்லும் போது கால்களும் முக்கியம்தான்  எனச் சொல்லும் சமயவேலின் இக்கவிதை  அலட்சியங்கள் சேர்ந்து இருப்பதை இல்லாமலாக்கும் தீவிரத்தையும் மறைமுகமாக அறிவிக்கிறது.



விடுமுறை வேண்டும் உடல் 


எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு

தன்னைப் பற்றியே

பெரும் கவலை கொள்கிற உடல்

முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு

நச்சரிக்கிறது

பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என

எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது

சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்

முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது

வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் 

புரளும் எருமை

என எப்படியும் இருப்பேன் என்கிறது

விடுமுறை விடுமுறை எனும்

யாசகச் சொற்களை 

பரப்பிக் கொண்டே அலைகிறது

எதுவும் செய்யாமல் அக்கடா என்று

சும்மா கிடக்கும் ஆனந்தம்

பற்றிய அனேக நிறமிகளை

மூளைக்கு 

அனுப்பிய வண்ணம் இருக்கிறது

மிகுதியும் கனவு காணும் விருப்பத்துடன்

வெண்சிவப்பு மதியங்களில் 

கொட்டாவி விடுகிறது

எனது உடல் என்னைவிட்டு 

வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்



(மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பிலிருந்து )



"எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு

தன்னைப் பற்றியே

பெரும் கவலை கொள்கிற உடல்" . உடல் இயங்க உணவு தேவை. ஓய்வு தேவை. அவரசங்களின் குப்பை அதற்குத் தேவை இல்லை. சோம்பலில் வெகுநாட்கள் தூங்குவதற்காக அது ஓய்வு கேட்பதில்லை. சிறிது கண்கள் மூடினால் உடலின் பாகங்களை அது தடவிக் கொடுக்கிறது. "எதுவும் செய்யாமல் அக்கடா என்று

சும்மா கிடக்கும் ஆனந்தம்" . சும்மா இருக்க விடுவதில்லை. ஆனந்தம் என்னவென அறியவும் ஆவலும் இல்லை அவசர உலகத்துக்கு. காதுகளுக்குப் பூட்டு அல்லது கண்களுக்குப் பூட்டு, ஃ போனுடன் படுக்கையில் இருப்பதே ஓய்வென உலகெங்கிலும் அறிவிக்கப்படுகிறது. இளைப்பாறுதல் என்பது உடலின் கட்டுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தல். "எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்

கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்" காலம் காலமாக கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அலட்சியம் செய்து விரட்டுவதுதான் நடந்து வருகிறது.  உடல் குறித்த பிரக்ஞையைச் சொல்லும்  இக்கவிதை விடுமுறை என்பதன் அர்த்தங்களை நாளிலிருந்து உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் என்பதாக மாற்றுகிறது.









🔘🔘🔘 


தீட்சை அளித்த நாளில் அவனது முதுகுத் தண்டு முடியும் இடமான மூலாதாரத்தில் நிறைய முறை சுழற்றித் தேய்த்து தட்டிய ஆசிரியர் குருவை நினைந்தபடி தண்டுவடம் வழியாக ஏதோ ஒன்றை மேலே ஏற்றிக் கொண்டு வந்து  தலை வழியாக நகர்த்தி புருவங்களுக்கிடையே வைத்தார். தத்தளித்த எறும்பு செல்லுமிடம் தெரியாமல் கடிக்கத் தொடங்கியிருந்தது. உயிர் துடிப்பதுதான் கடிப்பது போல் உணர்ந்தாய் என்றார். ஆக்கிணையில் கவனித்துக் கொண்டிருந்தவனிடம், நினைவுகளில் அடுக்கிலிருந்து எழுந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாகப் பேசத் தொடங்கின.ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து வேறொன்று என அடுக்குகள் தோறும் தாவிக் கொண்டே இருந்தது எறும்பு. அதை அடித்து புருவங்களுக்கிடையே மீளவும் வைத்த போது தியான வகுப்பு முடிவடைந்திருந்தது. கண்களைத் திறந்த போது எறும்பைக் காண முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தவனை  உள்ளே இருந்த எறும்பு  கவனித்துக் கொண்டிருந்தது. ஒரு  மாதத்திற்குப் பிறகு ஆக்கிணையிலிருந்து உச்சந்தலைக்கு எறும்பை ஏற்றி வைத்த ஆசிரியர் துரியத்தில் கவனிக்குமாறு சொன்னார். உச்சந்தலையில் ஒளிக் கூடையைக் கவிழ்த்தது போன்றிருந்தது. ஒவ்வொரு பின்னலிலும் எறும்பு நகர்வது புதிய அனுபவமாக இருந்தது.  நினைவுகளின் அடுக்குகளுக்கு செல்வதை மறந்த எறும்பு ஆழ்கிணற்றில் விழுவதற்காக தவித்துக் கொண்டிருந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லை, விழுந்தால் வானம் மட்டுமே இருந்தது. வானத்துக்குள் விழுந்து விட்டால் எறும்பு விண்மீனாகி விடுமென புரிந்து கொண்டது. ஆனாலும் எறும்பின் கண்களைக் கவ்வி இழுக்கும் வெல்லத் துண்டுகளை மலையென நிறைத்தன, நினைவின் அடுக்குகளில் திரண்ட புதிய  கனவுகள். என்ன செய்வதெனத் தெரியாமல் சிறிது வெல்லத்தைக் கடிக்க ஆரம்பித்த எறும்பு ஆழ்கிணற்றையும் நினைத்து ஏங்க ஆரம்பித்தது. கண்களைத் திறந்த போது உச்சந்தலையில் ஒரு அடி கொடுத்து எறும்பை மயக்கமாக்கினான். பார்க்கும் இடமெல்லாம் வெல்லமாகவேத் தெரிந்தது. ஒரு முறை விழித்து விட்ட எறும்பை எப்போதும் கொல்ல முடியாது என்பதை உணர்ந்தவன். ஆழ்கிணற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மீண்டும்  வெல்லத்தின் பாதையிலேயே சென்றான். 


தெளிவற்ற அரூபமாயிருக்கும் ஓவியத்தில்  ஓர் இடத்தில் சூரியன் தோன்றியதும் எல்லாக் காட்சிகளும் புலப்படுவது போன்று தீட்சை அளிக்கும் போது நிகழும் பரவசத்தை அளிக்கிறது சமயவேலின் இக்கவிதை.  




உலகின் இமை                      


நடு நெற்றியை மறைத்து

விரிந்த கரும்  பரப்பில் 

ஒரு சிறிய மஞ்சள்  புள்ளி

அருகில் ஒரு  நீலத்திட்டு

இமைகள் மேலும் இறுக

நீலத்திட்டு ஒரு வளையமாகி 

மஞ்சள் புள்ளியை வளைக்கிறது 


மஞ்சள் புள்ளி சுழல்கிறது

நீல வளையம் எதிர்த்  திசையில் சுழல்கிறது.

இமைகள் மேலும் இறுக

மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு

பேராழத்துள் ஓடுகிறது

நீலவளையம் விரிந்து விரிந்து

அடர் கருப்பு  இருளாய்ப் போகிறது 


இமை மேலும் மேலும் இறுகுகிறது

தெருவோர சோடியம்  கனியில்

இருள் பூக்கத்  தொடங்குகிறது

எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக

உலகின் இமையாக மாறுகிறது 


எனினும் அது மூடியே இருக்கிறது

பார்த்தலின் பரவசத்தை

ஒத்தி வைத்தபடி

அது மூடியே இருக்கிறது.



(பறவைகள் நிரம்பிய முன்னிரவு தொகுப்பிலிருந்து  )



கண்களை மூடினால் எழும் வண்ணங்கள் முடிவில் எதுவுமற்ற ஆனால் எல்லாமுமான இருளில் கலக்கிறது. மனம் முரண்டு பிடிக்கிறது. முளை குச்சியை அறுத்துக் கொண்டு ஓடும் கன்றுக் குட்டியாகிறது. 

" எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக உலகின் இமையாக மாறுகிறது "  இருக்கும் இமை இல்லாது போய் எல்லாமுமான ஒன்றுடன் கலக்கிறது. 

உடல் கரைந்து பேரரறிவுடன் ஒன்றுகிறது.அமர்ந்திருக்கும் இடம், அமர்ந்திருப்பவன், அமர்தல் எல்லாமும் ஒன்றாகி விடுகிறது. பிரிதலே இல்லை. பிறிதொன்றும் இல்லை.

 " எனினும் அது மூடியே இருக்கிறது 

பார்த்தலின் பரவசத்தை 

ஒத்தி வைத்தபடி 

அது மூடியே இருக்கிறது ". இமைகளை மூடியிருந்தாலும் கண்கள் உள்ளே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. வாய் திறந்திருந்தாலும் பேச முடியாது. மௌனம் கனிந்திருக்கிறது. செவிகளில் ஓசை எழ வில்லை. அமிழ்ந்து அமிழ்ந்து ஆழ் கிணற்றுக்குள் மூழ்வது போலிருக்கிறது. இமைகளைத் திறக்கலாம்தான் ஆனாலும் அது ஒத்தி வைத்தபடியே பரவசமாக உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறது. கண்ணீர் பெருகுகிறது. அகங்காரம் கரைந்தழிந்து எல்லாவல்ல பேரியற்கையுடன் ஒன்றுவதைச் சொல்லும் கவிதை  தியானத்தைக் கையளிக்கிறது. 






🔘🔘🔘


புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடு திடீரென நான்கு கூரான ஜல்லிக் கற்களை விழுங்கி விட்டது. குரல்வளையை அறுத்துச் சென்ற கற்கள் இரைப்பைக்குச் சென்றதும் துடிக்க ஆரம்பித்தது. அது வழக்கமாக கட்டப்பட்டிருக்கும் மாமரத்துக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே  இறந்து விட்டிருந்தது. வயிற்றுப் பகுதியில் பார்த்தான். ஆட்டைக் கடித்த நாயின் பற்கள் ஆழமாகப் பதிந்திருந்த இடம் ரத்தத்துடன் தழும்பாக மாறியிருந்தது. ஆட்டைப் போலவே நாயும் துடிக்க வேண்டும் என நினைத்தான். நான்காவது வீட்டிலிருந்த நாயை, அது  பார்க்காத நேரத்தில் கல்லால் தாக்கினான். கல்  பாய்ந்து வாயைத் தாக்கியது. 

ரத்தம் சொட்டியபடி அலறியது நாய். பற்களைத் தாக்கிய, ரத்தம் படிந்திருந்த கல் சாலையில் அப்படியே 

கிடந்தது. கற்களால் இறந்து விட்டிருத்த ஆட்டுக்கு கல் பழி வாங்கியிருந்தது. கல்லுக்கு ஏதும் தெரியவில்லை. கொலை செய்து விட்ட பிறகும் கூட சாந்தமாக அமர்ந்திருந்தது. சாலையில் உருண்டு, பார்க்கும் போதெல்லாம் தொந்தரவு செய்த கல்லைத் தூக்கி கிணற்றில் போட்டான். எல்லாம் முடிந்துவிட்டதென நினைத்தான். கல் விடுவதாக இல்லை. பள்ளி மைதானத்தில் விளையாடிய போது ஏற்பட்ட சண்டை, கல்லால் அடிக்குமளவுக்குப் பெரிதானது. இரண்டு முறை தப்பித்தவன் மூன்றாவது அடியில் மாட்டிக் கொண்டான். நெற்றியில் ரத்தம் சொட்ட, ஆசிரியருடன் பைக்கில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியெங்கிலும் கற்கள் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன. அப்போதும் அவை  அமைதியாகவே இருந்தன.



வானத்தில் எறியப்பட்ட கல் பூமியிலேயே விழுகிறது. விழுகிற காலம் மட்டுமே மாறுகிறது எனச் சொல்லும் கவிதை கல்லின் அமைதியில் உடைக்கப்பட்ட மலையின் பெருவெடிப்பு உறைந்திருப்பதையும் கவனிக்கச் செய்கிறது. 



எதிர்கொள்ளுதல் 


ஒரு கல்

என் முதுகில் விழுந்தது 


வலியோடு நிமிர்ந்து

மரத்தைப் பார்த்தேன்

காற்றில் கிளைகள்

ஆடிச் சிரித்தன 


எவரோ எப்போதோ எறிந்து

சிக்கிப் போன கல்லுக்கு

விடுதலை 


குனிந்து கல்லை எடுத்தேன்

என் வலி, விசாரம்,

வழியற்ற கோபம் எல்லாம்

கல்லின் முழுமுற்றான மௌனத்தில்

கரைந்து போயின

ஒரு குழந்தையெனக்

கல் கைவிட்டு இறங்கிக்கொள்ள

நான் மீண்டும்

பழம் பொறுக்கத் தொடங்கினேன் 


(காற்றின் பாடல்  தொகுப்பிலிருந்து )




"வலியோடு நிமிர்ந்து

மரத்தைப் பார்த்தேன்

காற்றில் கிளைகள்

ஆடிச் சிரித்தன". முதுகில் விழுந்த கல்லை குழந்தை எறிந்து விட்டிருந்தால், பழி வாங்க திருப்பி எறிய முடிவதில்லை. அது விளையாட்டாகத் தூக்கி எறிந்து விட்டு கைகளைத் தட்டி சிரிக்கிறது. கோபம் மறைந்து புன்னகை துளிர்க்கிறது. எதிரிகள் எறிந்திருந்தால் கதை வேறு. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், கல்லுக்கு கல்.  கனிக்காக எறியப்பட்ட கல் கனியைத் தராமல் போன இடத்திலேயே மாட்டிக் கொண்டு உறங்கிவிட்டது. மரம் சிறை வைத்த கல்லை காலம் ஒரு நாள் கீழே விழச் செய்கிறது. எல்லாக் கற்களும் கனியை அடித்து வீழ்வதில்லை என்கிறது மரம்.  கனி வராத கோபத்தில் இருந்தவரையும் இந்தக் கல் சிரிக்க வைக்கிறது. கல்லுக்கு விடுதலை என்கிறார் சமயவேல். "குழந்தையெனக் கைவிட்டு இறங்கிக் கொள்கிறது கல்". கனிகளைப் பொறுக்குவது மட்டுமே நம் வேலை. கற்களைப் புறக்கணித்து விட்டு அதை மட்டுமே செய்யத் தொடங்குகிறோம். வாசிக்கும் போதெல்லாம் குளத்தில் எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் அலைகளாக ஓய்ந்து விடாமல், நிரந்தரமான கடல் அலைகளை உருவாக்குகிறது இக்கவிதை.




கவிஞர் : சமயவேல் 


கவிதைத் தொகுப்புகள் : 


1.காற்றின் பாடல் 


2.அகாலம் 


3.அரைக்கணத்தின் புத்தகம் 


4.மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் 


5.பறவைகள் நிரம்பிய முன்னிரவு 


6.இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 


7.சமகாலம் என்னும் நஞ்சு





Comments