13. பலி கேட்கும் முள் வேலிகளை கடித்துப் பிரிக்கும் மேஜிக் மான்கள் --நரன் கவிதைகள் குறித்து

 










நடிப்பால் அழ வைத்த  நாயகியின்  குரலை மட்டும் முற்றிலுமாகத் துடைத்தெடுத்து  விட்டார்கள். காட்சிக்காக சொல்லிக் கொடுத்த மொழியை சுக்குநூறாக உடைத்திருந்தாள். அதை நிரப்புவதற்காக அதே அழுகையுடன் பேச வேண்டியவளை அழைத்து "அந்த உடல் நடித்ததற்கு  உனது குரல்தான் உயிர் கொடுக்க வேண்டுமென்று " சொன்னார்கள். ஸ்டூடியோவில் டப்பிங் ஒலிப்பதிவு செய்யும் அறைக்குள் நுழைந்தவுடன் சிறு பதற்றம் தொற்றிக் கொண்டது. குரலை அழ வைக்க வேண்டும். மண்ணில் கிடந்து அரற்றும்படி மாற்ற வேண்டும். திரையில் அசையும் உடலுடன் ஒத்திசையும் வண்ணம் உருமாற வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு இடைவெளியற்று அழுகையோடும் வார்த்தைகளோடும் கரைந்து காணாமல் போயிருந்தாள். காட்சி முடிந்தும் அழுத நடுக்கம் குரலில் மிச்சமிருந்தது. வெளியில் வந்ததும் கை தட்டினார்கள். அந்த காலகட்டத்தில் அவள் குரல் கொடுத்த அந்த நாயகி  முன்னணியில் இருந்தாள். எல்லாத் திரைப்படங்களும் வெற்றி பெற ஆரம்பித்திருந்தன. அவளுக்காக குரல் கொடுத்தவள் தொண்டையில் ஏற்பட்ட தீவிர நோய்த்தொற்று காரணமாக யாருக்கும் குரல் கொடுக்க முடியாதவளாக மாறியிருந்தாள். நாட்கள் மாதங்கள் ஆண்டுகளென மாறியிருந்த போது

அவள் , தான் டப்பிங் பேசிய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஓடும் போது மியூட் செய்து விட்டு பேசிப் பார்த்தாள். பின்பு புதிய குரல் பிடிக்காமல் போகவே பழைய குரலை ஆர்வத்துடன் கண்களை மூடிக் கேட்க ஆரம்பித்தாள்.ஒரு கவிதையில் 

"குரலுக்கு ஒரு உடலுண்டு

அதற்கு ஒரு மடியுண்டு,அதில் கிடந்து விம்மினேன் " என்பார் இசை. அவளுக்கு குரல் மீளவும் சரியான போதும் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. வெற்றிபெற்ற படங்களில் பேசியவள் எனத் தெரிந்தும், அவளது குரலுக்கு வயதாகி விட்டதாகவும் யாருக்கும் பொருந்தாது எனவும் திருப்பி அனுப்பினார்கள்.புதிய குரலில் மட்டுமே நாயகி பேசுவதாகவும் சொன்னார்கள்.  வீட்டுக்கு வரும் வழியில் குரல்வளையை கைகளால் இறுக்கமாகப் பிடித்தவள், பின்பு பிடித்தமான பாடலொன்றை அழுதபடியே பாடிக் கொண்டிருந்தாள். 



முதலில் மெல்லிய புன்னகையை அரும்ப வைக்கும் நரனின் இக்கவிதை பிறகு வெவ்வேறு குரல்களால் வாழ்வை நடித்துக் கொண்டிருப்பவர்களை அடையாளப்படுத்தும் போது இறுக்கம் சூழ்கிறது.


ஷீ  .' ....இன் வார்த்தைகளை

' கா '  ....பேசினாள் 


காலை வணக்கம் ஐயா ,

எங்களை வங்கியிலிருந்து தங்களுக்கு 

கடன் அட்டை வழங்குகிறோம் 

உங்களுக்கு விருப்பமா ?

இனிய மென்மையான குரலில் வினவினாள் காவ்யா 

இரண்டு மாதமாக 

தங்களின் கடன் அட்டைத் தொகை     செலுத்தப்படவில்லை 

தொகையை வட்டியோடும் , அபராதத்தோடும் 

உடனே செலுத்துங்கள் 

காட்டமான குரலில் பேசினாள் 

ஷீலா ப்ரியதர்சன். 

' ஷீ….. ' விடுமுறையில் போயிருந்தாள்

' கா…..' வை அவளிடத்தில் அமர வைத்திருந்தார்கள் .

' ஷீ ' .....இன் வார்த்தைகளைக்  

' கா'  ....பேசினாள்

இனிய மென்மையான குரலில் 

பொம்மைத் துப்பாக்கியால் 

சுட்டுடுவேன் …….சுட்டு…..டு….வேனென 

தந்தையை மிரட்டும் 4 வயது பெண்குழந்தையின் 

குரல் போலிருந்தது . 


(உப்பு நீர் முதலை தொகுப்பிலிருந்து )



நேரில் வட்டிக்கு வாங்கியவரிடம் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிபவர்கள், கிரெடிட் கார்டுக்காக போன் செய்யும் பெண்ணிடம் கோபமாகப் பேச முடிகிறது. தொலைபேசியில் கடனைச் சொல்லி அழைப்பது அவமானமாகப் படுகிறது. "தவணை தவறாமல் கட்டிவிடுங்கள்" என்று சொல்பவள் முகம் தெரியாத நபருடன்தான் உரையாடுகிறாள். கடன் வாங்கியவனுக்கு குரலில் இருந்து அழகான முகம் தோன்றினால்  கோபம் குறைத்துக் " கட்டி விடுகிறேன் மேடம்" எனக் குழைகிறான்.  காலியான குரலின் இருக்கையில் எதிர்பாராமல் வந்தமரும் புதிய குரல் குழந்தை போலப் பேசுகிறது. அது மிரட்டுவதும் கொஞ்சிப் பேசுவது போலவே இருக்கிறது. இன்னும் கோபமாகப்  பேச வேண்டுமென நிர்வாகம் நிர்பந்திக்கிறது. புதிய கடனை வழங்குவதற்கான மென்குரல், வசூலிப்பதற்கான வன்குரலுடன் பொருந்தாது என்கிறது. கவிதையில் வார்த்தைகளையும் மனிதர்களையும் பதலீடு செய்வது போலத் தோன்றினாலும், உலகம் அப்படித்தானே இயங்குகிறது என்கிறார் நரன்.






🔘🔘🔘 


பிள்ளைகளிரண்டையும் அணைத்தவாறே உறங்கிக் கொண்டிருந்தவள், நள்ளிரவு ஒரு மணிக்கு வந்த வீடியோ அழைப்பில் கணவன் அழைக்கவும் பயந்தபடியே ஃபோனை எடுத்தாள். மிகப் பதற்றத்துடன் பேசியவன் "ஆடிட்டிங் முடிய இரண்டு நாட்களுக்கு மேலாகும் போலிருக்கிறது ஊருக்கு வரத் தாமதமாகும்" என்றான். பிள்ளைகளைக் காண்பிக்கும்படிச் சொன்னவன் அலமாரியில் முக்கியமான அக்ரீமெண்ட் கவர் இருப்பதாகவும் பிரிவில் எடுத்து வைக்க வேண்டுமென்றும் சொன்னான். கவர் ஏதும் அகப்படவில்லை. தேடும் போது  ஃபோனில் காட்டச் சொன்னான். வீடெங்கும் போன் சுற்றிய போதும்,  கவர் இருக்குமிடம் தெரியாதது அவளுக்கு வியப்பாக இருந்தது. உறங்கியவளுக்கு தாமதமாகவே எல்லாமும் புரிந்தது. தான்  "பிள்ளைகளுடன் மட்டுமே உறங்குவதாகவும், நிம்மதியாக பணிபுரியவும்" என்றும் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை புன்னகையுடன் அனுப்பி வைத்தாள். எதிர் முனையில் கோபம் வெடிக்கத் தொடங்கியிருந்தது. வீட்டுக்கு வந்தவுடன் அவளது ஃபோனை சோதனையிட்டான். அவளது பிறந்த வீட்டில் உள்ளவர்களுடனும் பேசக் கூடாது என்றான். வேலை செய்கிறதா என அழைப்பு மணியைத் தொட்டுப்பார்த்தான். சமையலறைக் குப்பைத் தொட்டியில் புதிதாக வந்த கடிதங்கள் ஏதேனும் கிழித்துப் போடப்பட்டிருக்கிறதா அல்லது எரிக்கப்பட்டிருக்கிறதா என்றும் கவனித்தான். அன்றிரவு நிர்ப்பந்திக்கப்பட்ட கூடலின் போது கண்களை மூடிக்கொண்டிருந்தவள்  சிரித்து விட்டாள். கோபத்துடன்  " கண்களை மூடி யாரை நினைத்துச் சிரித்தாய். யாருடன் கூடுவதாக நினைத்துக் கொண்டாய் " என்று அடித்தான். அப்போதும் நிதானத்துடன் கூந்தலை அள்ளிச் சேர்த்துக் கட்டியவாறு புன்னகைத்தவள், அவனது ஃபோனை எடுத்துக்  காண்பித்தாள். டெலிட் செய்யாமல் விடப்பட்டிருந்த வாட்ஸ்சப் சாட்டில் அவனது அலுவலகத்தில்  பணிபுரியும்  பெண்ணுக்கு "  என்னென்ன ஆடைகள் உடுத்தியிருக்கிறாய் "  " உடனடியாக உன்னை போட்டோ எடுத்து அனுப்பு" என்று எட்டு முறை அனுப்பப்பட்டிருந்தது.   



இடைவெளி விடாமல் கன்னத்தில் அடித்து, மூக்கில் குத்தி, நெஞ்சில் உதைப்பது போல தாறுமாறாகத் தாக்கும் நரனின்  இக்கவிதை நிலைகுலையச் செய்வதுடன் மீண்டும் எழாதபடிக்கு கால்களில் விலங்கு மாட்டுகிறது  


பூட்டு 

   


வாழ்வெங்கிலும்  துணையும்  பாதுகாப்பாகவுமிருப்பேன்  என்றவன்தானே நீ  ..      


வெறுமனே யோனியினருகிலேயே அமர்ந்திருந்திருக்கிறாயே  ..

" தகரச்சேர் " - "கையில்  லத்தி" - "Eveready "டார்ச்  லைட் வேறு. 


யோனிக்கொரு பூட்டு .... 

அதன்  சாவி  

வளைந்த  உன்  ஆண் குறியில் முடிச்சிட்டு  தொங்குவது   தெரியும் ..      


சக  ஹிருதயனே .... 

தொடையிடுக்கில் ஒரு  வளர்ந்த  சவ்வு  

தொடையிடுக்கில் ஒரு கிழிந்த சவ்வு

இதற்கு ஏன்  ?.

1 1/2 கிலோ  பூட்டு  - 1 அடி  துலாக்கோல்           

பூட்டியப்பின்  பூட்டை  பல  முறை இழுத்துப்  பார்த்து  சோதிக்காதே. 

வலிக்கிறது....பூட்டை பிடித்து  தொங்காதே. 


சக  ஹிருதயனே....

உன்னை  நடுநடுங்க வைக்கும் ஒரே  ஒரு  பொய்யுரைக்கவா ?  

தற்போது  மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக இருக்கிறான்.                 




( லாகிரி தொகுப்பிலிருந்து )



வலியை நேரடியாகச் சொல்வதன் வழி எல்லாவற்றையும் மீறுகிறது கவிதை. இதைத் தவிர என்ன இருக்கிறது உடலில் என்று மருத்துவ அறுவைக் கிகிச்சை நிபுணரைப் போல கிழித்துக் காட்டும் போது போலிப் பாவனைகளால் ஒளிந்து கொள்ளும் சந்தேக மனங்கள் பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து ஆடைகளை உருவியது போல அவமானத்தில் கூனிக் குறுகுகின்றன. அதிர்ச்சியளிப்பது கவிதையின் நோக்கமல்ல எனினும் இதுவரை காணாத இதுவரை சொல்லப்படாத ஏதோ ஒன்றை வாழ்க்கை எங்கேயே எழுதிக் கொண்டுதான் இருக்கிறது எனச் சொல்லுகிறது. மொழி வழியே அந்த அனுபவத்தை  இறக்கி வைக்கும் கவிஞன் நெஞ்சுடைந்து அழுதபடியேதான் எழுதுகிறான். கோபத்தில் சுவற்றைக் குத்துகிறான். " பூட்டியப்பின்  பூட்டை  பல  முறை இழுத்துப்  பார்த்து  சோதிக்காதே. 

வலிக்கிறது....பூட்டை பிடித்து  தொங்காதே." வாசிக்கவே முடியாத அளவுக்கு நம் உடலில் பூட்டைக் கட்டித் தொங்கவிட்டது போன்று வலிக்கிறது. 






🔘🔘🔘





ஹெலிகாப்டர் அந்த ஊரையே அதிரச் செய்தபடி  மேலே பறந்து  கொண்டிருந்தது. குளித்துக் கொண்டிருந்த சிறார்கள் அவசரமாகக் கரையேறி அதைப் பார்ப்பதற்காக ஓடினார்கள். படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் கையில் மண்வெட்டி இருந்தது. அன்று கொல்லையில் கம்பி வேலி அமைத்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட சண்டையாகி விட்டது. மிகவும் நெருக்கமான நண்பனின் தந்தை அவனை ஓங்கி அறைந்துவிட்டார். கையில் இருந்த மண்வெட்டியை அடிப்பதற்காக எடுத்தவன் பின்பு நிதானம் வரவே கீழே வைத்துவிட்டான். வேலிக்காக ஊன்றிய கற்களை பிடுங்கி எறிந்தார்கள்." நீதிமன்ற வழக்கு முடிந்தால்தான் கற்களை நட்டு வேலி எழுப்ப முடியும். நீ பீரங்கியே கொண்டு வந்தாலும் நான் பயப்பட மாட்டேன் " என்றெல்லாம் பேசிய நண்பனின் தந்தை ஒரு காலத்தில் அவனுக்கும் மிக நெருக்கமானவராகத்தான் இருந்தார். தகராறு முற்றி வார்த்தைகள் தாறு மாறாகப் பாய ஆரம்பித்ததால் மண்ணை எடுத்துத் தூற்ற ஆரம்பித்தார். இரண்டு கொல்லைகளுக்கும் இடையே ஒரு அடிக்கும் குறைவான தூரத்தில்தான் எல்லை இருக்கிறது. எல்லைக் கல்லை ஒரு வெள்ளம் புரட்டிப் போட்டதிலிருந்து தகராறு தொடர்ந்து கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் மறைந்ததும் வீட்டுக்குச் சென்றவனுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து அவசர அழைப்பு வந்திருந்தது. ரயில் செல்லும் வழியில் எல்லாம் வீடுகளுக்கு இடையே, வயல்களுக்கு இடையேயுள்ள முள் வேலிகளைப் பார்த்துக் கொண்டே சென்றான். "முள் வேலிகள் சண்டை வந்தால் ரத்த பலிக்காகவே வைக்கப்படுகின்றனவா " என்று கேட்டுக் கொண்டான் . இலைகள் விழுந்து குப்பையாகிறதென பக்கத்துத் தெருவில், இரண்டு வீடுகளுக்கிடையே  போன வாரம் நடந்த சண்டையில்  கடைசியாக மரத்தை வெட்டி அகற்றினார்கள். ஊரிலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாளின் அதிகாலையில் பாலைவனத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிக்கு அசால்ட் ரைபிளுடன் சென்று கொண்டிருந்தான். முள்வேலிக்கு அந்தப் பக்கம் இருந்தவர் கன்னத்தில் அறைந்த நண்பனின் தந்தை போலத் தோன்றவே மண்வெட்டியாக நினைத்து ரைபிளைத்  தூக்கினான். எதிரில்   நின்றவர் ரைபிளால் சுடுவதற்காகக் குறிபார்த்தார்.



ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு   எல்லா நாட்டின் எல்லையிலும் நின்று அமைதியைப் பேசிக் கொண்டிருக்கும் கவிதை வழியே நிறைய நிறைய கேள்விகளை உருவாக்குகிறார் நரன். 


  

எல்லை 


நம்பு . 

இந்த எல்லையை நான் கிழிக்கவில்லை .

எல்லையைத் தாண்டி நிற்கும் 

உனக்கும் எனக்கும் எந்த பிணக்குமில்லை .


எதிரில் நிற்பதாலேயே 

உன்னை எதிரி என அழைக்க ஒப்பவில்லை 

என் எதிரில் உன்னை நிற்க வைத்தவன் நானில்லை .

நண்பனே  !

அவர்கள் ஒரு போதும்  களத்திலில்லை. 

எல்லையில் நம்மை நிற்க வைத்துவிட்டு 

அவர்கள் உள் நாட்டில் பூர்வீக குடிகளிடமிருந்து 

நிலங்களை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் . 


சிறுவயதில் சொந்த ஊரின் 

மண்ணை தின்றிருக்கிறாயா ? 

அவ்வளவு ருசி . 


சூளைக்காரா 

என் நிலம் பிடுங்கப்படுமெனத்  தெரிந்திருந்தால் 

இன்னும் நிறைய அள்ளி அள்ளித் தின்றிருப்பேன்  .

இப்போது  பார் 

மதிய உணவிற்கு என் நிலத்திலிருந்து வேகவைக்கப்பட்ட 

மூன்று செங்கற்கள் வைத்திருக்கிறேன் .



( லாகிரி  தொகுப்பிலிருந்து )



" இந்த எல்லையை நான் கிழிக்க வில்லை " " உனக்கும் எனக்கும் எந்த பிணக்குமில்லை " 

எல்லையை யார் உருவாக்குகிறார்கள்,

சண்டையை யார் விரும்புகிறார்களோ அவர்கள்தான்.  ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படும் இடம் எல்லைதான். ஒரு கல்லை எடுத்து வீசினாலும் அது முக்கியமான பாதுகாப்புப் பிரச்சினையாகி விடும். " உள்நாட்டில் பூர்வீக குடிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ". மலைகள் குவாரியாகவும், சுரங்கங்களாகவும், ஆராய்ச்சிக் கூடங்களாகவும் மாறுகின்றன. பூர்வீகத்தை மலையிலிருந்து பிடுங்கி கழிமுகத்துக்கு அனுப்புவதே முதன்மையான வேலையாக மாறியிருக்கிறது. சர்வதேச நாடுகளின் எல்லையில் இந்தக் கவிதையைத்தான் கல்வெட்டாக செதுக்கி வைக்க வேண்டும். சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு மைனஸ் டிகிரி குளிரிலும் , பாலையில்  உட்சபட்ச வெப்பத்திலும் ரைபிளை ஏந்தியபடி ஓடிக்கொண்டிருப்பவனின் இதயம் நிஜமாகவே போரை விரும்புகிறதா ? பாதுகாப்பது நாட்டுப்பற்று என ஊட்டியிருந்தாலும் எல்லைகளில் இருக்கும் முள்வேலிகளை  பிய்த்தெறியப்படும் நாள் குறித்த கனவுகளையே அவர்களது மனம் விரும்பும். நரனின் கவிதைகள் நம் மனங்களில் ஆழமாக நடப்பட்டிருக்கும் முள்வேலிகளை அசைக்கின்றன. பிடுங்கி எறிவதற்கான துணிச்சலை அளிக்கின்றன. 



கவிஞர் : நரன் 


கவிதைத் தொகுப்புகள் : 


1. உப்பு நீர் முதலை


2. ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் 


3. லாகிரி 


4. மிளகு பருத்தி யானைகள்


Comments