14. குழந்தைகளின் படகுகள் கொந்தளிக்கும் கடலில் காற்றை நிறுத்தக் கரையிலெழும் கீர்த்தனைகள் – யூமா வாசுகி கவிதைகள் குறித்து

 






விளையாடிய இடத்திலிருந்து ஆணியால் குத்தி செதில் செதிலாகப் பிளக்கும் இடத்துக்கு அடித்து நகர்த்திச் சென்றார்கள். கைகளில் சுழல வைத்து மோதியும், நேரடியாக அடித்து விரட்டியும் கொண்டு சென்றார்கள். பத்து பம்பரங்கள் புதிய பம்பரத்தை நகர்த்திச் சென்ற வழியெங்கும்  அவமானத்துடன் கண்ணீரும் கட்டிக் கொண்டு நின்றது. அன்றைய விளையாட்டில் பம்பரத்தை சுழற்றி கைகளில் ஏந்துவதற்கு தாமதமாகி விட்டதால் தோற்றுப் போய்விட்டான். பம்பரம் மாட்டிக் கொண்டது. பாதி விளையாட்டில் வெளியேற முடியாது. ஓடிவிட்டாலோ தோத்தாங்கோலியெனச் சொல்லி வெறுப்பேற்றுவார்கள். அன்றைக்கு பொங்கலென்பதால் கரும்புடன் நின்று கொண்டிருந்த மற்றவர்களும் விளையாட்டை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற சிறுவர்களின் பம்பரங்களால்  அடிவாங்கி துவண்டிருந்த அவனது பம்பரத்தின் வண்ணமே மாறியிருந்தது. ஜெயித்த பம்பரங்கள் தோற்ற பம்பரத்தை ஆணியால் குத்தி, அவமானப்படுத்தி செதுக்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது. அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த அவனது அப்பா ஒரு பெரிய பாட்டில் வைக்கும்  அளவுள்ள  நீல வண்ணப் பையில் இருநூறு ரூபாய் வைத்துக் கொடுத்தார். ஒரு பீர் வாங்கி வரும்படி சொன்னார். விளையாட்டு முடியாமல் போக முடியாது என்றவனை முறைத்தார். ஏற்கனவே அவமானத்தில் இருந்தவனுக்கு எரிச்சல் அதிகரிக்கவே "நீயே போய் வாங்கிக்க வேண்டியதுதான ? சிகரெட்டுக்கும் பீருக்கும் நான் ஒரு ஆளா ? " என்றான். கோபத்தில் அவனது கன்னத்தில் அறைந்தவர் " டெய்லியா போகச் சொன்னேன்.வீட்டுக்கு வா பாத்துக்குறேன்  "  என்று சொல்லிவிட்டு குளத்துக்கு சென்று விட்டார். இதைக் கவனித்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அப்பாவின் நண்பர்கள் குளத்தின் எதிர் கரையிலிருந்து குரல் கொடுத்தார்கள். பம்பரத்தை செதுக்கும் போட்டி உற்சாகமாக நடந்தேறியது.ஒருவன் ஓங்கி குத்தியதில் பம்பரம் உடைந்தே விட்டது.எல்லோரும் கத்திக் கூச்சலிட்டார்கள்.  குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது எதிர் கரையில் பீர் குடித்துக் கொண்டிருந்த அப்பாவின் நண்பர்கள் "புது பம்பரம் வாங்கிக்கலாம் விட்றா " என்றார்கள். கோபத்துடன் உடைந்த பம்பரத்தை குளத்தில் வீசியெறிந்தான். தோற்றதின் அவமானம் மீளவும்  புதிய பம்பரத்தை  எடுக்க விடவே இல்லை. அப்பா எப்போதும் குடிப்பவர் இல்லையெனினும் அன்று அந்த நேரத்தில் எல்லோர் முன்பும் பீர் வாங்கி வரச் சொன்னது, எப்போது நினைத்தாலும் கோபமாகவே இருந்தது. இன்று வளர்ந்து முப்பத்தைந்து வயதில், ஏ.சி பாரின் கதவைத் திறக்கும் அவனுக்கு, தினமும் குடிக்க வேண்டியிருக்கிறது. பம்பரங்களை கைவிட்டுவிட்டு பாட்டிலை சுழற்றுவது மிக விருப்பமானதாக ஆகிவிடுகிறது. அது உடைந்தாலும் எந்தவொரு அவமானமும் இல்லை. 




வானத்துக்கு தாவிக் கொண்டிருக்கும் போது கால் விரல்களில்  குளிரும் மோதிரங்களை அணிவித்து கீழே விழச் செய்யும் அதிசயத்தை நிகழ்த்துகிறது யூமா வாசுகியின் இக்கவிதை. 




மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள் 


குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து

அலைக்கழிந்த சிறுவன்

நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்

இறைஞ்சிய சில்லரை

கை நழுவி விழுகிறது தரையில்.

எடுக்கக் குனிகையிலோ

நிகழ்கிறதொரு அற்புதம்....

அவன் சட்டைப் பையிலிருந்து தவறி

கலீரிட்டுச் சிதறின கோலிக் குண்டுகள்.

அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு

நெடுக ஓடுகின்றன அவை.

கடந்த காலங்களில் மிதந்து

பார்த்திருப்பவர்களின் பால்யத்தில்

தட்டி நின்றன.

தயங்கித் திகைத்த சிறுவனிடம்

கருணை கூர்ந்து ஒருவன்

தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.

போதை மிகைத்த அன்புடன்

மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.

தாளாக் குற்றவுணர்வில்

நெகிழ்ந்த கரங்கள் பல

ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்

பொறுக்கிச் சேர்த்தன அவனிடம். 


( யூமா வாசுகி கவிதைகள்  முழுத் தொகுதியிலிருந்து ) 



"அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு

நெடுக ஓடுகின்றன அவை". ஆமாம் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து மதுவருந்துபவர்களை, அவர்களுக்குள்  கொன்று புதைக்கப்பட்ட சிறார்களை, அவர்களது பால்யத்தை  இணைத்துக் கொண்டு ஓடுகிறது ஒற்றை கோலிக் குண்டு. திடீரென எல்லோரும் அவரவர் ஊர்களில் கோலி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் இருக்கும் குவளையில் ததும்பும் மது குழப்புகிறது. தலையிலடித்துக் கொண்டு அருந்துகிறார்கள். ஓடி வருகிறான் குற்றேவல் சிறுவன். கோலிக் குண்டுகளைத் தொடுகின்ற கரங்கள் சிறுவனின் கரங்களாக மாறுகின்றன. சிலர் அழுகிறார்கள். சிலர் புன்னகைக்கிறார்கள். சிலர் தங்களுக்குள் இருக்கும் இறந்துவிட்ட சிறுவனை பார்த்துக் கண்களை மூடிக் கொள்கிறார்கள்." தாளாக் குற்றவுணர்வில்

நெகிழ்ந்த கரங்கள் பல

ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்

பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்."தாளாத குற்றவுணர்வு அவனை ஏவல் செய்ய வைத்ததினாலா அல்லது பால்யத்தை மறந்து விட்டதினாலா ?.  அவர்கள் விளையாட நினைத்தாலும் அவன் விரும்ப மாட்டான். போதையும் புகையும் மணக்கும் பாரை விட்டுவிட்டு தனிமையில் மட்டுமே விளையாடுவான். வாசிப்பவருக்குள் ஓடும் கோலிக்குண்டுகளை நிறுத்த முடியவில்லை. கைகளில் எடுத்து தராமல் பின்னாலாயே ஓட வைக்கிறார் யூமா வாசுகி.




🔘🔘🔘




வறண்டிருக்கும் மார்பை நோக்கி நகர்ந்த கை, புடவையை விலக்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் யாரும் பார்க்காதபடி  விலாவில் அழுத்திக் கிள்ளினாள் தாய். கை மலர்ந்து விரல்கள் விரிய வீறிட்டு அழத் தொடங்கினாள் குட்டித் தங்கை. கண்ணீருடன் விரிந்த விரல்கள் காசுகளைத் தேடி அமர்ந்திருந்தவர்களை நோக்கி  நகர ஆரம்பித்ததும்  கையிலிருந்த இரு குச்சிகளால் சிறிய மேளத்தை இசைக்க ஆரம்பித்தாள்.இரும்பு வளையத்தை தலைக்கு மேலே வைத்து காத்துக் கொண்டிருந்த குட்டித் தங்கையின் அக்கா, தாயின்  இசைக்கேற்ப அதைத் தலையில் மாட்டி கைகளிரண்டையும் லாவகமாக மேலே தூக்கி வெளியே எடுத்தாள். அப்போது நெஞ்சில் நின்றது இரும்பு வளையம். குட்டித் தங்கையின் விரிந்த கை ஐந்து ரூபாய் நாணயத்தைத் தாங்காமல் விழுந்து விடும் என்பதாலோ என்னவோ சட்டைப்பையிலும்,பர்ஸிலும் துழாவியோர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சில்லரையை கையில் வைத்தார்கள். அழுக்கடைந்திருந்த ஆடையுடன் அந்த புறநகர் ரயில் பெட்டியெங்கும் கையைக் குலுக்கிக் காசு கேட்டாள். அக்கா இடுப்பில் கை வைத்து வளையத்துடன் ஆடுவதும்,  வளையத்துக்குள் உடலை நுழைப்பதுமாக இருந்தாள். இடுப்பைத் தாண்டியதும் வளையத்தை கால்களால் எடுத்து மீண்டும் மாட்ட ஆரம்பித்தாள். தாயவளின் இசை குறையாது வந்து கொண்டிருந்தது. இசை நின்றால் மட்டுமே ஆட்டத்தை நிறுத்த வேண்டும் . அழுதபடியே இருந்த குட்டித் தங்கையோ, வயிற்றில் கையை அடித்து வாயில் வைத்து எதிரிலிருக்கும் பயணியிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தாள். பெரும்பாலான செவிகளில் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் இசை காதைக் கிழித்துக் கொண்டிருக்கவே குட்டித் தங்கையை கவனிக்க வில்லை. அக்காவின் இரும்பு வளைய நடனத்தையும் சலிப்புடன் பார்த்து மீண்டும் ஃபோனுக்குள் புகுந்து கொண்டார்கள். ஒவ்வொரு முறை வளையத்தை மாட்டி எடுக்கும் போதும் விடுதலையைத் தான் தேடிக் கொண்டிருந்தாள் அக்கா. தாய்க்கு பாலைப் போலவே  சிறிதும் இரக்கம் ஊறவேயில்லை. முகத்தில் சலனமே இன்றி மேளத்தை அடித்துக் கொண்டிருந்தாள். மிஷினைப் போல குட்டித் தங்கையின் கையில் சேரும் சில்லரைகளையே கவனித்துக் கொண்டிருந்தாள். செம்பட்டைத் தலையுடன் இருந்த அக்காவும் தங்கையும் அருகருகே வந்த போது இசையை நிறுத்தியிருந்தாள் தாய். பிறகு அக்கா ஒரு சிறு வாளியை எடுத்துக் கொண்டு காசுகளைக் கேட்டுக் கெஞ்சினாள். பெட்டியை விட்டு இறங்கியதும் தாய் அழுத்தமாகக் கிள்ளிய தங்கையின் விலாவைத் தடவிக் கொடுத்து " ச்சேரி ச்சேரி ! பாப்பாக்கு சரியாகிடும்! அம்மாவ அடிச்சுடலாம் ! அம்மாவ அடிச்சுடலாம் ! " என்று சொல்லி முத்தமிட்டாள்.இரும்பு வளையம் கைகளை அழுத்திக் கொண்டிருந்தது. 



யூமா வாசுகியின் கவிதை நெஞ்சைக் கட்டிக் கொண்டு அழுகிறது. கை நீட்டி ஆயிரம் குழந்தைகள் அழுகின்ற பெருஞ்சத்தம், வாழ்ந்த வாழ்க்கையையும் வாழும் வாழ்க்கையையும் ஒன்றாக உதைத்து வலியெடுக்கச் செய்கிறது.




தீராத கணக்கு


எதையோ நினைத்தபடி

எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது

சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து

பிச்சை என்று கேட்டாய்.

தெய்வமே அந்தக் குழந்தை

என்னமாய்ச் சிரித்தது....

அதற்கு மாறாக நீ என்

சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்

ஓரிரவில் சாக்கடையோரம்

கொசுக்கள் குதறும் வதையில்

துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி

அய்யா என யாசித்தாய்

உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது

எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....

அதற்குப் பதில் நீ என்னை

அடித்துப் பிடுங்கியிருக்கலாம்

பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படிச் செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது...

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்

இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்

அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று

இரந்து நிற்கிறாய் இன்று

புவி சுமக்க முடியாத பாரமாக இது

எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....

அய்யோ அய்யோ என்று

பதறி அழிந்தபடியே

ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து

உன்னைக் கடந்து போகின்றேன்

தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க

ஏன் உனக்குத் தெரியவில்லை. 


( யூமா வாசுகி கவிதைகள் முழுத் தொகுதியிலிருந்து ) 



"தெய்வமே அந்தக் குழந்தை

என்னமாய்ச் சிரித்தது...." "உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படிச் செய்தாயே ! " குழந்தைகள் களங்கமின்மையால் கைகளை உயர்த்தி யாசிப்பதை விளையாட்டைப் போலச் செய்கிறார்கள். அழுது கொண்டே இருக்கும் குழந்தைக்கு நிறைய சில்லரை சேருமென்றே அதைத் தூக்கி வைத்திருப்பவள் அழ வைக்கிறாள். காலையிலிருந்தே குழந்தை சாப்பிடவில்லை என்று கேட்கும்போது சாப்பிட்ட பூரி நெஞ்சை அடைக்கிறது. குழந்தைக்கு இரங்காத மனங்கள் இன்னும் பிறக்கவில்லை. ஆனாலும் கவிஞன் பிச்சையெடுக்கும் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் யாராவது அவனைக் கொன்று போட்டு விட்டால் தேவலாம் என்று நினைக்கிறான். இவ்வளவு கொந்தளிப்பை வரிகளில் நிறைக்கும் யூமா வாசுகியிடம் மெய்யாகவே பதறி அழிகிறது  நெஞ்சம். பிச்சை எடுக்கும் குழந்தைகள் நேரிலுமல்லாது கனவிலும் விடாது துரத்துகிறார்கள். அழுது கொண்டே ஓடும் போது அலறியபடியே அவர்களைத் துரத்தும் கால ஓநாய் அலட்சியமாக நடந்து வருகிறது.  ஒவ்வொரு வரியும் சட்டையுடன் இதயத்தையும் மூச்சையும் சேர்த்து இழுக்கிறது. 




🔘🔘🔘 




நள்ளிரவில் மழைநின்று விட்ட பிறகும்  குளிர் அதிகமாக இருக்கவே நடுக்கமாக இருந்தது. போர்வையை நன்கு போர்த்தி விட்ட அம்மாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். கிரிக்கெட் விளையாடும் வயலில் தென்னை மரத்தருகினில் நான்கு நாய்க்குட்டிகள் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன. அதன் அம்மாவைக் காணவில்லை. ஒரு குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். வீட்டுத் திண்ணையில் கட்டி வைத்த போது புதிய இடம் அதற்குப் பிடிக்க வில்லை. வேளை தோறும் சோறு கிடைத்தது.ஆனாலும் வெளியே செல்ல முடியவில்லை. வெளியில் சென்றால் பசியில் அலைய வேண்டியதும், அதன் அம்மாவை மீண்டும் காண்பது உறுதியில்லை என்பதும் அதற்குத் தெரிந்திருந்தது போல எல்லாவற்றையும் மறந்துவிட்டு மகிழ்ச்சியுடன் இருந்தது. நாய்க்குட்டி வந்த பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அது என்ன செய்கிறது எப்படி விளையாடுகிறது என்பதே அவனது சிந்தனையாக இருந்தது. அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்கியவன் வெளியே திண்ணைக்கு வந்து பார்த்தான். கோணி சாக்கைப் பிடித்தபடியே சுருண்டு கிடந்தது. தலையைத் தடவிக் கொடுத்தவனை மெல்லக் கடித்தது. சாரல் விழாதவாறு சிறிய படுதா ஒன்றை எடுத்துக் கட்டினான். நாய் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது. குட்டியாக இருந்த போது அதனை எப்போதும் கொஞ்சிக் கொண்டிருந்தவனுக்கு வளர்ந்த பிறகு அலட்சியம் வந்து விட்டிருந்தது. சில இரவுகளில் உறங்காமல் குரைத்துக் கொண்டே இருந்ததை தொந்தரவாக உணர்ந்தார்கள். திட்டியபடியே கதவை நன்கு சாத்தியபடி உறங்கினார்கள். பகலிலும் குரைத்துக் கொண்டே இருந்ததால், கோபத்தில் ஒரு நாள் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டான். பள்ளிக்குச் சென்றவன் மாலையில் வீடு திரும்பிய போது " உன் நாய் காரில் அடிபட்டு செத்து விட்டது என்றார் அப்பா. செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அதையும் ஒரு முக்கியமற்ற செய்தியாகவே சொன்னார். அடிபட்ட இடத்தில் நிறைய ரத்தம் கிடந்தது.ரத்தம் சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான் " வீட்டிற்கு என்னை தூக்கி வராமல் இருந்திருக்கலாம் " . நாயைக் காணவில்லை. வீட்டுக்குத் திரும்பியவன் திண்ணையில் அமர்ந்து நாய் கட்டியிருந்த இடத்தைப் பார்த்தான். வெறுமை குரைப்பதைத் தாங்க முடியாமல் அழத் தொடங்கினான்.




குழந்தைகளுக்காக வெவ்வேறு உலகங்களை உருவாக்குகிறவன் ஒரு போதும் அந்த உலகத்தைத் திறந்து பார்க்க அனுமதிப்பதில்லை. அந்த உலகத்தில் ஒவ்வொன்றாகவும் அவனேதான் நடமாடிக் கொண்டிருக்கிறான் என்கிறது இக்கவிதை. 


ஒரு மனிதன் முயலாக 



ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி

ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற

சிறுமி புவனா கேட்கிறாள்

‘முயல் என்ன செய்கிறது?’

அவளைக் கவர்வதற்காக

அறையினுள் ரகசியமாக

ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.

‘முயல் சாப்பிடுகிறது’

என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்

விளையாடப் போனாள்

‘எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்’

என்று அடுத்த நாள் வந்தாள்

ஆப்பிள் தின்றபடி.

‘பெரிய முயல் கடித்துவிடும்’ என்று சொல்ல

சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்

அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது

மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது

வாசலில் கூட்டமாய் வந்து நின்று

‘என்ன செய்கிறது முயல்’ என்பவர்களுக்கு

பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து

முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்

நாளாக,

அப்படியொரு முயல் இங்கே இல்லை

எனும் உண்மை புரிந்தாலும்

நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது

என்னையே முயலாக்கி

புவனா கேட்கிறாள்,

‘முயல் எங்கே போகிறது..?’

நீண்ட கைகளை ஆட்டி

பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து

மிரண்ட விழிகளால்

குறுகுறுப்பாகப் பார்த்து

முயல் சொல்கிறது…”



(யூமா வாசுகி கவிதைகள்  முழுத்
தொகுதியிலிருந்து )



குழந்தைகள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள். சாப்பிடுவதற்காக ஜன்னலில் சித்தர் நிற்கிறார் , உறங்காவிடில் சித்தர் வந்து பார்ப்பார் என்றெல்லாம் பொய் சொல்லும் போதும் சித்தர் சாப்பிடுவாரா, தூங்கமாட்டாரா என்றே குழந்தைகள் கேட்கிறார்கள். ஒவ்வொரு தாவரத்தையும் தடவிக் கொடுத்து இலைக்கு முத்தமிடுவார்கள். ஆட்டுக்குட்டியோ, நாய்க்குட்டியோ அன்று பிறந்த குழந்தையோ முதலில் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சுவார்கள். அவர்களோடு இருக்கிறவனும், அவர்களுக்காக இடைவிடாது கதைகள் வழியே புதிய உலகங்களை உருவாக்குகிறவனும் பாக்கியவான்கள். யூமா வாசுகியின் கவிதைகள் சிலுவையின் நீங்காத பாரமாக நெஞ்சில் கனக்கின்றன. கொந்தளிக்கும் கடலில் குழந்தைகளின் படகுகள் சதா காலங்களிலும்  அலறிக்கொண்டே இருக்கின்றன, காற்றை நிறுத்திக் காப்பாற்றுவதற்காக கவிதைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். 




கவிஞர் : யூமா வாசுகி 


கவிதைத் தொகுப்புகள் :


1.உனக்கும் உங்களுக்கும் 


2. தோழமை இருள் 


3. இரவுகளின் நிழற்படம் 


4. அமுதபருவம் வலம்புரியாய் 

அணைந்ததொரு சங்கு 


5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் 


6. சாத்தானும் சிறுமியும் 







Comments