நீளமான உருளைக்கிழங்கு

வயிற்றிலிருந்து முளைக்கும் வேர்
நீளமான உருளைக் கிழங்கு ரகம்தான் என
உறுதி செய்து மகிழ்கின்றன
தூரத்துக் கண்காணிப்புத் திரைகள்.
நிலத்தைக் கடந்து சென்ற பறவைகளின்
கண்களுடன் சேர்த்து நீக்கப்படுகிறது
நீளமான உருளைக் கிழங்கு பற்றிய
ரகசியக் குறியீடு.
ஒடிக்கப்பட்ட கால்களுடன்
குளத்துக்குள் மூழ்கி இறக்கும் பறவைகள்
உருளைக் கிழங்குகள் எதற்காக
நீளமாக மாறின என்று
கீச்சிட்டுக் கொண்டே குதிக்கின்றன.
உருளைக் கிழங்குகளின் கண்களில்
வேற்று ரகங்களைக் கொல்லும் வாயு
சமிக்ஞைகளுக்காகக் காத்திருக்கிறது.
மேகத்தில் தலையையும்
நிலத்தில் காலையும்
புதைத்து
உழுபவர்களின் இரைப்பையில்
சுடச்சுட வறுத்தெடுக்கப்படும்
மொருமொருப்பான உருளைச் சீவல்களை
விருப்பமுடன் வாங்கிச் செல்கிறார்கள்
பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள்.
எங்கோ கசிகிறது
புளிக்குழம்பில் கரையும்
நீளமான உருளைக் கிழங்கின் நறுமணம்
நுட்பமாகக் கண்டறிந்த செயற்கைக்கோள்
வீடுகள் தோறும் போர்த்தொடுக்க
பிசைந்த சோற்றோடு
கைது செய்யப்படும் மகளிரின்
வயிறு வீங்கத் திணிக்கப்படுகிறது
உருளைச் சீவல்கள்.
நிலமதிர்ந்து உள் வாங்கும் பொழுதில்
உருளைக் கிழங்குகள் திண்பதற்கல்ல
மொருமொருப்பான சீவல்களுக்காக
என்று
ஒவ்வொரு  கிழங்கின் நெற்றியிலும்
ரகசியமாகப் பச்சை குத்தப்படுகிறது.
நீளமான உருளைக் கிழங்குகள்
குட்டையான உருளைக் கிழங்குகளை
உண்டு உண்டு
இன்னும் பெரிதாக
நீளமாகிக் கொண்டே இருக்கின்றன.

மலைகள்.காம் மே-2019

Comments