பாற்கடல்



பிஞ்சு நிலாவின் வாயை
பசியோடு தூரத்தில்
யார் கட்டிவைத்தது

பல்லில்லாப் பிறைவாய்
கடித்துப் பருகாமல்
குளிர்பிஞ்சு வெண்கதிர்கள்
நகங்கள் கீறாமல்
உறைந்து கட்டிக்கொண்டு
வலியில் குதிக்கிறது பாற்கடல்

மேகக் கொட்டகைக்குள்
தேம்பியழுது துள்ளுகிறது நிலா
அழுகையைத் தூக்கமாக்க
தூக்க மாத்திரைகளான விண்மீன்களைக்
கரைத்து ஊற்றுகிறது வானம்

ஒவ்வொரு இரவிலும்
நிலவின் வாய் நனைக்கப் பாய்ந்து ஒடிந்து விழுகின்றன
பாற்கடலின் அலைகள்

தோற்றுப்போய்
தூர்ந்து போக ஆரம்பிக்கிறது
உறைந்த பாற்கடல்

கோள்கள் சுற்றி விளையாட
பாலை மறந்த பிஞ்சுநிலா
மேகத்தட்டில் சூரியன் வைக்கும்
ஒளிச்சோறள்ளி உண்ணக்
கற்றுக் கொள்கிறது

பால் குடிக்காமலேயே
வளர்கிறது நிலா
பூமியின் வயிற்றில்
புதைபடிமமாகிறது பாற்கடல்.

Comments