நாளைக்குக் காணாமல் போகிறவர்

நாளைக்குக்
காணாமல் போக இருக்கிறவர் 
எவ்வித பதட்டமுமின்றி தேநீர் குடிக்கிறார்
சலூன் கடையில் நாளிதழ் புரட்டுகிறார்
ஒருவர் கூட அவரைக் கூர்ந்து பார்க்க வில்லை
புகைப்படம் எடுத்துக் கொள்ளும்படி
அவர் தோன்றவும் இல்லை.
"சாவு கிராக்கி" என்று யாரோ  ஒருவன்
அவரைப் பிரியமாகத் திட்டுகிறான்
நாளைக்கு விலைமதிப்புள்ளவராக
அவர் மாறப் போவது தெரியாமல்.
சப்தமற்ற இலையாக
சிசிடிவி கேமிராக்களில்
வெவ்வேறு தெருக்களில்
நகர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் காணாமல் போவதற்கான நேரம்
கடைத்தெரு முக்கத்தில் வருகிறது.
அதற்குப் பிறகு அவர்
சுவரோட்டிகளில் நன்றாக சிரிக்கிறார்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில்
பத்து லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்படுகிறது அவருக்காக.
சாவு கிராக்கி என்றவன்
அவரை அடிக்கச் சென்ற கணத்தின் கதவுகளை உதைக்கிறான்.
தேநீர், சலூன் கடைகளில்
அவர் உட்கார்ந்த இடங்களில்
மிதக்க ஆரம்பிக்கிறது பத்து லட்சம் ரூபாய்.
அந்தக் கடைத்தெரு முக்கத்தின் வழியாக
அவர் இப்போது
எங்குதான் சென்று கொண்டிருக்கிறார்.


மலைகள்.காம்.  மே -2019



Comments