வெடித்து அழுதல்

வெடித்து 
அழ வேண்டும் போலிருக்கிறது 
என்கிறாய் 

தனிமையின் 
ஒவ்வொரு கணத்தையும் 
கண்காணிக்கும் அறைச்சுவர்கள் 
தெறிக்கும் கண்ணீரின் ஒலியை 
நன்றாக உறிஞ்சும் வல்லமை உடையவை

ஒரு சுவரைப் போல மாறுவதற்காகத்தான்  
நீ அடைபட்டிருக்கிறாய்.

எந்த வண்ணம் அடித்தாலும் 
அந்த முகத்துக்கு மாறுவது 

எவ்வளவு அடித்தாலும் 
அழாமல் வாங்கிக் கொள்வது 

கொலை நடந்தாலும் 
அசைவற்று வேடிக்கை பார்ப்பது 

ரகசியங்களைப் பார்த்தாலும் 
ஒரு போதும் வெளியிடாதது 

ஒரு சுவராக மாற
நீ கொஞ்சம் கொஞ்சமாக
பழக்கப் படுத்தப் படுகிறாய்

சுவர் 
உன்னோடு விளையாடி 
நீ தூங்கும்போது 
உனக்குத் தெரியாமல் 
உன்னை மாற்ற நினைக்கிறது 

நீ 
சுவரெல்லாம் படம் வரைகிறாய் 
தோழியைப் போல 
அணைத்துக்
கொள்கிறாய. 
முத்தங்களால் காதலை 
நீந்த விடுகிறாய் 

உன்னை மாற்ற முடியாமல் 
சுவர்கள் வெடித்தழ ஆரம்பிக்கும் ஒரு நாளில் 
கதவைத் திறந்து வெளியேறுவாய்...

கணையாழி   ஜூன்-2019 

Comments