சுவரொட்டி

சுவரொட்டிகளை வீதியெங்கும் பார்ப்பது
பரவசமாக இருக்கிறது
நள்ளிரவில் நான் ஒட்டியது
யாருக்கும் தெரியாது

கடந்து செல்லும் ஒவ்வொருவரும்
என்னைப் போலவே பூரிப்பார்கள் என்று
அடுத்தடுத்த சுவரொட்டிகள் தயார் செய்தேன்

மாடுகள் சுவரொட்டிகளுக்கு அருகே
பசியோடு நிற்கும்போது
உடனடியாக என்னால் விரட்ட முடிவதில்லை
சுவரொட்டியில் என்னைப் பற்றி
நான் எழுதிய வாசகங்களை
மாடுகளுக்குப் படித்துக் காண்பித்து
சுவரொட்டிகளைக் காப்பாற்ற வேண்டும்

மாடுகளின் மொழியைக் கற்றுக் கொள்ள
எங்கு செல்வதெனத் தெரியவில்லை
என்னுடைய படத்தினருகில்
மாடுகளையும் வரைந்து விட்டதால்
நாவால் என்னைத் தடவி விட்டு
நகர்ந்து விடுகின்றன

காகங்களுக்கு நான் என்ன செய்வது
அவற்றினுடைய படங்களும் வரையப்பட்டன
கொஞ்சம் கொஞ்சமாக
பூச்சிகள் கரையான்கள் புகுந்து கொண்டன
இப்போது எனது சுவரொட்டிக்குள்
விலங்குகள் நடுவே
எனது தலை மட்டுமே தெரிகிறது
என்னை அதற்குப்பிறகு
விலங்கு என அழைக்கிறார்கள்

நான் இப்போது
நள்ளிரவில்
எனது சுவரொட்டிகளை
மேய்ந்து கொண்டிருக்கிறேன்


ஆனந்த விகடன் ஜூன் -2019

Comments