குருவி

செத்துவிடலாம் என்று முடிவெடுத்தபின்
வாழ்ந்து கெட்ட வீடொன்றின்
அறுந்து தொங்கும் தூளிக்கயிற்றில்
உடலைச் சுருட்டி மேலேறியது குருவி.
அடிவயிற்றில் வளர்ந்திருந்த முட்டைகள்
மோதிக்கொண்டு சிரிக்கும் ஒலி
அலகுகளில் மோதி அழிகிறது.
கழுத்துக்கு நகராத கயிறு
வயிற்றை இன்னும் இறுக்கும்போது
உடைகின்றன சிறகுகளின் மெல்லெலும்புகள்
வெளியேயும் உள்ளேயும்.
தொங்கிக் கொண்டிருக்கும் தலை மீது பாறையை வைத்து அழுத்தும்
அலர் தூற்றுபவர்கள்
கயிற்றை கழுத்துக்குக் கொண்டுவர
உதவி செய்கிறார்கள்.
பறத்தல்
இனி இல்லையென்றுத் தெரிந்த பிறகு
துடிதுடிக்கும் வாலிலிருந்து
உதிரும் மயிர்கள்
எரிந்து கருகுகின்றன.
மக்கிய கயிறவிழ்ந்து
பலகையொன்றில் விழுந்த பிறகும்
குருவிக்கு மிச்சமிருக்கும் வாய்ப்பு
குதிப்பது மட்டுமே.
சுட்டுத்தின்பதற்காக
காத்திருப்பவர்களின் நாவில்
முட்டைகளின் சுவையும்
மறக்காமல் சேர்ந்து விடும்தானே.

மலைகள்.காம் மே - 2019

Comments