தூக்க மாத்திரை

தேநீர்க்குவளைக்குள்
கரையாமல் திணறுகிறது
மூழ்கடித்தவனின் தூக்க மாத்திரை.

மாத்திரையை

பலூனாக்கி
பறக்க விடுகிறது  குழந்தை.
துருப்பிடித்த ஆணிகளொடு
காத்திருப்பவர்களுக்காக
மூச்சை அடக்குகிறது
பலூன்.

தலையணையாக்கி
நெஞ்சில் சேர்க்கிறாள் தலைவி
துளையிட்டு வெளியேறுகிறது
கள்ளப் பருத்தியின் பஞ்சு

காலுறையாக்கி
குடல்புரட்டும் வீச்சத்துடன்
நசுக்குகின்றன ஏவல் கால்கள்.
விடுதலை வேண்டி
எலிகளிடம் கெஞ்சும்போது
நஞ்சு கேக்குகள்
அடுக்கப்படுகின்றன.

இனிப்பு மிட்டாயாக மாற
மிகவும் விரும்பிய
மாத்திரையின் மீது
குருதியில் துப்பிய எச்சிலை
தினமும் பூசுகிறார்கள்

மாத்திரையின் கனவுக்குள்
தூக்கம்
ஒரு கனவாக
வந்து வந்து செல்கிறது.

மாத்திரையின் உடலைக்
கிழிக்கும் தேநீரில்
பலூன்
தலையணை
காலுறை
மிதந்து கொண்டே இருக்கிறது

குவளையை உடைத்தவன்
மாத்திரைகள் இல்லாத
தேநீரை அளிக்கும்
இரவுகளைப் பற்றி
கனவு காண ஆரம்பித்தான்

மலைகள்.காம் மே - 2019 

Comments