அந்தியின் மறுகரையிலிருந்து அலையெழுதுதல்

 


    அந்தியின் மறுகரையிலிருந்து 

     உன் பெயரில் எழுதி எழுதி 

     அலைகளை விடாமல் 

     அனுப்பிக் கொண்டிருக்கும் நான்தான் 

     இக்கரையில் 

     குளித்துக் குளித்து வாசிப்பவர்களை

     மர்மமாக ஒற்றறிந்து விகசிக்கிறேன்.

     நான் இப்போது 

     கடற்கரையில் உலவுவதில்லை 

    என் அடையாளமிட்ட வளையத்தை 

    மீண்டும் மீண்டும் 

    தூக்கி எறிகிறார்கள் 

   ஒருபோதும் விழாத உருவத்தின் மீது.

   உன் பெயர் அவ்வளவு ருசியுடன் 

   மணலெல்லாம் தித்திக்கிறது

   உன் பெயரில் எழுதப்படுவதெல்லாம் 

  தூரத்து மலைப்பாறைகளில் 

  மழையில் அழிந்துவிடாதவாறு 

  செதுக்கப்படுகிறது.  

 விசிலடிக்க நூறு ரசிகர்கள் 

 போஸ்டர் ஒட்ட ஆயிரம் பேர் 

 காற்றலையில் வான்வெளி பரப்ப

 கோடி கோடி பேர்.

 அத்தனை வசீகர கிரீடத்தை 

நீயில்லாத 

 உன் கவிதைகளுக்கு 

 யார் அணிவித்தது?

எத்திசையிலிருந்து நோக்கினாலும் 

சுடர்விட்டுப் பொலியும் 

வைரமாகி விட்டது. 

உன் பெயரில் எழுதுவது 

யாரெனக் கண்டறிய 

சிவப்பு இதயங்களை 

பூவின் அலட்சியத்துடன்

பறித்து வைப்பவர்கள் 

காணாத தேசங்களில் உலவி 

ஆராய்ச்சி செய்கிறார்கள்.

கவிதைகளின் முகம்தான் 

உன்னுடையதென்று 

கடற்கரையில் ஒருநாள் 

குரலை மட்டும் 

ஒலிபரப்பினேன்.

ஒலிப்பெருக்கி உடைக்கப்பட்டு

சுக்கு சுக்காக

அந்தியின் மறுகரைக்கு வந்து 

கொண்டிருப்பதைப் பார்.

இப்போது நானும் 

எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

அந்தியின் இன்னொரு கரையில் 

உன்னைப் போலவே

நானும் புதைந்து விடட்டுமா?

நம்முடைய கவிதைகளை 

நான் என்றும்

நீ என்றும் 

வைத்து விளையாடிக் கொண்டே 

இருப்பார்கள் 

தீராத அலைவிளையாட்டாக.






Comments