அகாலத்தில் இறந்துவிட்ட கவிஞனைத் தீண்டுதல்


 


அகாலத்தில் இறந்துவிட்ட 

கவிஞனை 

தொட்டுப்பார்ப்பதற்காக 

கவிதைகளுடன் 

மூழ்குகிறேன்  

கூடவே 

வந்துகொண்டிருக்கிறது 

எழுதிய பொழுதுகளில் 

அவன் வாழ்ந்த 

ஒவ்வொரு இடமும் 

தொடமுடியாத ஆழத்தில்

அவன் இருப்பதாகக் 

கூவுகின்றன 

எழுத்துக் கூட்டத்தில் 

உடைந்து முறியும் 

சப்த எலும்புகள் 

மூழ்கிய சப்தங்களுக்குள் 

குடிபுகுவது 

சுக்கு சுக்காக 

உடைக்கிறது மனத்தை

படிக்கட்டுகள் 

கீழிறங்கும் பாதையில் 

மூளையைத் திருகிய 

வலிகளையெல்லாம் 

இசைக்க விட்டிருக்கிறான் 

குருதிதானா அது 

இருப்பை உடைத்து 

மெய்யைத் தோண்டும் போது 

அழகாகப் 

புன்னகைக்கும் நதி 

கூடவே வந்த இடங்களெல்லாம்  

குமிழிகளாகிக் 

கையசைக்கின்றன 

அவன் எழுதி முடிக்காமல் விட்ட 

கவிதைகளை  நிரப்புவதற்காக 

எழுதிய கவிதைகளின் 

சொற்களை 

ஊற்றிக்கொண்டே இருக்கிறேன் 

இறந்தபடியே 

எழுந்து பார்க்கும் 

அவற்றின் கண்களுக்கு 

என்ன ஆறுதல் உரைப்பது 

நினைவுகளின் பாலத்தை அறுக்கும் 

அகாலத்தின் 

நிச்சலனத்தில்   

கடைசியாக இருக்கும் வாய்ப்பு 

கையிலிருக்கும் 

அவனது 

கவிதைகளின் தொகுப்பைக் குலுக்குவதுதான் 

பிரவேசிக்கவே முடியாத 

ரகசியக் கிணற்றுக்குள்

தடையவிழ்த்து 

ஊடுருவுகிறது 

பிடித்தமான கவிதை 

பேரமைதியின் முத்தம் வாங்கி 

மிதந்து வரும் 

சொற்களில் எல்லாம் 

அள்ள அள்ளக்  

குறையாத 

கைவிரல்கள்.  


புரவி - ஜனவரி -2022

Comments