1. பூசுவது வெண்ணீறு பொங்குவது திருச்சாழல் - கண்டராதித்தன் கவிதைகள் குறித்து

 






சிதம்பரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தேன். நடுங்கும் குளிரில் திருநீற்றின் நறுமணம் பரவத் தொடங்கும்போது ஒலித்தது திருச்சாழல். பாடலிலிருந்து  தோன்றிய தோழிகள் இருவரும் மாணிக்க வாசகர் காலத்தில் இல்லை, புடவை கட்டியிருந்தார்கள். கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வந்ததாக சொன்னவர்கள் மிகவும் களைத்திருந்தார்கள். தேநீர் குடித்த பிறகு  விளையாடத் துவங்கினார்கள். தூக்கி எறிந்து விளையாடும் பொருளை அருகில் சென்று பார்த்தால் அது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றால் செய்யப்பட்டிருந்தது. அப்போது, கருவறையிலிருந்து ஒலித்த குரல் எல்லாவற்றையும் காணமுடியாது என்று சொல்லி முதுகில் அடித்தது. தோழிகளிடம் சென்று ஏன் என்னவாயிற்று என்று வினவினேன். எங்களுக்கு நாளை விடுமுறை அதனால் சோர்ந்திருக்கிறோம், ஞாயிறு என்றால் பிடிக்காது என்றார்கள். இதென்னடா இது ஊரெல்லாம் அன்று ஒரு நாள்தானே ஓய்வெடுத்துக் களிக்கும், இப்படி சொல்கிறீர்களே என்றதும், உனக்கு சொன்னாலும் புரியாது என்றார்கள். அவர்களின் கதையை விட்டுவிட்டு எதை வைத்து விளையாடினார்கள் என்பதிலேயே கவனமாக இருந்தேன். கடைசிவரைக்கும் அகப்படவில்லை. கண்டராதித்தனுக்கு மட்டுமே தோழிகள் வைத்து விளையாடும் அந்தப் பொருள் தெரிந்திருந்தது போலும். 


திருச்சாழல் 


//தவிர நீ  யாரிடமும்  சொல்லாதே

பணியிடத்தில்  உள்ளவன்தான்

என்  வெளிர்நீல முன்றானையால்  

நெற்றியைத் துடைப்பதுபோல்  அவனைக் காண்பேன்

அதுவல்ல என்துயரம்  

நாளை  ஞாயிறென்றால்

இன்றேயென்  முன்றானை  நூறுமுறை

நெற்றிக்குப்  போவதுதான்  என்னேடி?

தென்னவன்  திரும்பியிருப்பானோ  

பிள்ளைகள்

வந்ததோ  உண்டதோவென  

ஆயிரம்  கவலைகள்

உள்ளதுதான்

வாரத்தில்  ஞாயிறென்றால் ஒன்றே  

தான்  காண் சாழலோ! //


( திருச்சாழல் தொகுப்பிலிருந்து )



முன்றானை இல்லாத என் கை 

நூறு முறை நெற்றியைத் தீண்டித் தீண்டி திரும்பிக்கொண்டே இருந்தது. பொல்லாத புது நோயை என்னதான் செய்வது பார்ப்பதின் வழியே குணப்படுத்தவா முடியும், இன்னும் இன்னும் பரவிக்கொண்டேதான் இருக்கும். வேலைக்குப் போகாத ஞாயிறு இன்னும் கொடியதாக மாறிவிடுகிறது. 

 "அதுவல்ல என்துயரம்"  வரும் போதே மெலிதாகத் தூக்கி ஒரு பக்கத்திலிருந்து அடிக்கும்   கவிதை "என்னேடி ? " யில் மறுபுறமும் அடித்து வெளியில் மிதக்கவிடுகிறது. "சாழலோ ! " எனும் போது தோழியின் துயரம் மீண்டும் பூமிக்கு இழுக்கிறது. வெளியும் தோழிகளும் ஆடும் ஆட்டத்தில் கண்டராதித்தன் என்னையும் சேர்த்து விடுகிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் பறந்து கொண்டல்லவா இருக்கிறேன்.




🔘🔘🔘


கடந்த ஆண்டு ஊரில் ஒரு துக்க வீட்டிற்கு முன்பாக நின்று கொண்டிருந்தேன். கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பேரனின்  திருமணத்தன்று  இறந்து விட்டார் பாட்டி. தாலி கட்டி முடிந்த கையோடு வந்திருந்த அவனுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தேன். வரிசை வரிசையாக வந்தார்கள். பாட்டி உறங்கும் கண்ணாடிப் பெட்டிக்கு மாலையை அணிவித்து நாற்காலிகளில் அமர்ந்தவர்களுக்கு தேநீரும் குளிர்பானமும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள்.  கூடி அழுவதற்காகக்  காத்திருந்தவர்கள் ஒப்பாரி வைத்துக் கதறினார்கள். பிறகு எதுவுமே நிகழாதது போல இறுக்கத்தொடு  ஆண்களும், துடைத்த கண்களோடு பெண்களும் கலைந்து சென்றார்கள். சென்னையிலிருந்து முக்கியமான உறவினர் வந்த பிறகே பாட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். அப்போது மதியம் ஒரு மணி இருக்கும். அழுது முடித்து புதிதாக வர யாருமில்லையென்ற நேரம் வர ஆரம்பித்தது.பாட்டி உறங்கிக் கொண்டிருந்தார். நாற்காலிகள் காலியாக பேசிக் கொண்டிருந்தன. வெறுமை கணக்க ஆரம்பித்தது. பொழுதை நகர்த்த முடியாமல் அமர்ந்து நிலத்தைத் தேய்த்துத் தேய்த்து புதைக்க நினைத்தார்கள். அது தப்பித்து ஊர்ந்து செல்வது தெரியாவண்ணம் நகர ஆரம்பித்தது. மத்தியானப் பொழுதின் முதற் காலை நகர்த்தினால் மற்ற கால்கள் வேகமெடுக்கும் என பந்தலுக்கு வெளியே சென்று நகர்த்துவதற்காக நின்று கொண்டிருந்தேன். எந்தக் காலும் தெரியவே இல்லை. 



// துக்கம் நிகழ்ந்த நண்பகலது

வெய்யிலும் சோம்பலும்

மிகுந்து கிடக்க

மரவட்டையைப் போல

இந்த மத்தியானம்

தன் லட்சோப

லட்சக் கால்களுடன்

மறுநாள் மத்தியானத்திற்குள்

போனது //



(திருச்சாழல் தொகுப்பிலிருந்து )


மத்தியானம் நகராமல் அப்படியே நிற்பது போலிருந்தது ஆனாலும் நகர்ந்து சென்று மறுநாள் மத்தியானத்துக்குள் மீண்டும் அடுத்த நாளின மத்தியானத்துக்குள் என சென்று கொண்டே இருந்தது. லட்சோப லட்சம் கால்களுடன் நகரும் காலத்தை கடிகாரத்தை வைத்து கண்டறிய இயலவில்லை.காலமாகி விட்ட பாட்டி மட்டுமே பார்த்திருப்பாள். கண்டராதித்தனின் 

இந்தக் கவிதையும் காலத்தின் கால்களை பார்த்துவிட்டு வந்திருக்கிறது.


🔘🔘🔘


பேருந்தில் முன் இருக்கையில் இருப்பவரிடம்  உங்களை நான் பார்த்திருக்கிறேன் எங்கு என்றுதான் நினைவில் இல்லையெனச் சொன்னேன். அவரும் என்னை உற்றுப் பார்த்து விட்டு ஆமாம் நானும் உங்களைப் பார்த்தது போலவே இருக்கிறது எங்கு என்றுதான் நினைவில் இல்லை என்றார். இருவரும் அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டோம். நகுலனின் "ராமச்சந்திரனும்" அதே பேருந்தில் மூன்றாவது இருக்கையில்தான்  அமர்ந்திருந்தார்.  அழைக்க பயந்து அப்படியே நின்றுவிட்டேன். வேறொரு பொழுதில், நீங்கள் அவர்தானே அவரேதான் 

அதே கண் அதே முகம் என்று விசாரிப்பவர்களிடம் "இல்லை நான் இல்லை" என்றும் சொல்ல வேண்டியிருக்கும். முன்பு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த வீட்டில் மூன்றாவதாக பெண்ணுக்கு ஏங்குவார்கள். அப்படியும் ஆண்குழந்தையே பிறக்கும். அந்த அம்மா விடமாட்டாள், அக்குழந்தைக்கு பெண் போலவே அலங்காரம் செய்து குதூகலிப்பாள். பதின்வயதில் பெண்ணுக்கு ஆணுடலும், ஆணுக்குப் பெண்ணுடலும் வியப்பாக இருக்கும். மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். கண்ணாடி அதிகமாகப் பார்க்கும் அக்காலத்தில், ஒரு கணமேனும் தன்னுடலை எதிர் பாலினராக நினைத்துப் பார்க்கவும் பின்பு அதிலிருந்து வெட்கத்துடன்  வெளியேறி  ஓடும் காலமும் இயல்பாக கடந்து செல்லும் ஒன்றே. கண்டராதித்தனின் இளங்கோவுக்கு  ஞானப்பூங்கோதை இவ்வாறாக   கிடைத்திருக்கிறாள்.




// நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்

யாரைப்போல் இருப்பேனோ

நேற்று அவளை நான் பார்த்தேன்

பேருந்தின் கடைசியில் நின்றிருந்த

அந்தப் பெண்ணிற்கு என் வயதிருக்கும்

அந்த நாசி,

அந்தக்கண்கள்,

கருங்கூந்தல்,

மாநிறம்,

சற்றே திமிரான பார்வை

வடிவான தோற்றமென

நான் பெண்ணாய்ப் பிறந்தால்

வடிவெடுக்கும் தோற்றம் தான் அது.

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்த்துக்கொண்டோம்

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்ப்பதைத் தவிர்த்தோம்

இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்

நீங்கள் இளங்கோவா என்றேன்

ஆமாம் என்ற அவள்

நீங்கள்

ஞானப்பூங்கோதைதானே என்றாள் //


(திருச்சாழல் தொகுப்பிலிருந்து )


"வடிவான தோற்றமென நான் பெண்ணாய்ப் பிறந்தால் வடிவெடுக்கும் தோற்றம்தான் அது " என்ற வரியில் கவிதை ஆதியந்தமிலாதவனின் பிரபஞ்சக் குரலுக்கு நகர்கிறது. நானேதான் பெண்ணாகவும் ஆணாகவும் மாறி மாறிப் பிறக்கிறேன். நானேதான் என்னை தனித்தனியாகப் பிரித்து 

விலக்கியும் ஈர்த்தும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.நானே இளங்கோவும் நானேதான் ஞானப்பூங்கோதையும். 




 



கவிஞர்  : கண்டராதித்தன் 

கவிதைத் தொகுப்புகள் : 

கண்டராதித்தன் கவிதைகள் , 

சீதமண்டலம் மற்றும் திருச்சாழல் 

Comments

Post a Comment