பிரெய்லியின் ஜெல்லி மீன்கள்

 


அருகிலிருந்தும் 

காண முடியாத இருளில்தான் 

ஏறிக்கொள்ள முடிகிறது 

அப்பாவின் மடியில் 

தாடிமுகம் 

தொட்டுத் தடவியதும் 

வழிந்து நிரம்பும் 

சிரிப்புக் கனவு 

மழையை 

ஆழத்துக்கு இழுக்கும் பூவாகிறது 

மடியாட்டு முடிவடைந்தும் 

விசும்பிக்கொண்டே இருக்கும் குழந்தை 

நெஞ்சைத் தட்டச் சொல்கிறது 

தட்டத் தட்ட 

தாவும் 

பிரெய்லியின்  ஜெல்லி மீன்கள் 

சொல் தோன்றும் கணத்தில் 

உடைகின்றன 

இருளில் சுடரும் பாடலோ  

"ஏற்கனவே 

இருப்பதையே 

அறிவேன் "

உடைவதைப் 

பாட முடியாதென்கிறது 

மடியிலிருந்து 

பூமிக்கு

குழந்தையை 

நகர்த்துகிறான்

தொடங்கிவிடுகிறது 

அந்நியமாதல்.



புரவி - ஜனவரி -2022


Comments