2.அலையில் தெறிக்கும் உப்பு அத்தனையும் புதிது -- க. மோகனரங்கன் கவிதைகள் குறித்து

 



உடல்நலமின்றி இருந்த ஒருநாளில் மருத்துவமனையில் டோக்கன் அழைக்கப்படும் ஓசைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அங்கு வைக்கப்பட்டிருந்த காலண்டரில் வான்காவின் The starry night ஓவியம் படபடத்துக் கொண்டிருந்தது. வான்கா எங்கு நின்று இதை வரைந்திருப்பான் என்று அவன் கண்களின் தடம் ஊர்ந்திருக்கும் வண்ணங்களைத் தடவியபடி  தேடிக்கொண்டிருந்தேன். கனவில்தான் கண்டடைய முடிந்தது.  அன்றைய இரவு 

வான்காவுக்கு மிகவும் அச்சமூட்டுவதாக  இருந்தது. மனநல மருத்துவமனையின் ஜன்னல் வழியாக வான் நோக்கினான். முதலில் மேகங்கள் நதியெனப் பாய்ந்து விண்மீன்களை சுழலச் செய்தன.மஞ்சளில் பொங்கியது  பிறை நிலவு. சைப்ரஸ் மரம் அடர்ந்த இரவில் வெவ்வேறு கரங்களுடன் நெளிந்து வளர்ந்து கொண்டிருந்தது. உறங்கும் ஊரின் மேலே எல்லாமும் சுழன்று கொண்டிருந்தன. எதுவும் தன்னிலையில் இல்லை. வான்காவுக்குள் கோடி வண்ணங்களில் கொந்தளித்துக் கொண்டிருந்தது கடல். இயற்கைக்குள் நுழைந்து காணாமல் போவதற்காக தத்தளித்துக் கொண்டிருந்தான். பிரிந்திருந்த 

நண்பனும் ஓவியனுமான பால் காகினின் எதற்காக இவ்வளவு கொந்தளிப்பு , நிதானமாக அமைதியாக வரை அப்போதுதான் ஓவியம் சிறப்பாக வரும் என்று சொல்வது  காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது . "இதயத்தில் கொந்தளிக்கும் வண்ணங்களை நான் ஆவேசத்துடன்தான் வரைவேன். தீவிரம் பற்றி எரிக்கிறது,  இயல்பாக இருக்க முடியாது " என்றான் வான்கா. கலைஞனின் பித்து நிலை படைப்பாக மாறுவதற்கும்,  இருப்பின் நிர்ப்பந்தங்களுக்குள் பொருந்திக் கொள்ள முடியாமல் மனப்பிறழ்வுற்றவனாக மற்றவர்களுக்குத்  தோன்றுவதற்கும்  இடையிலுள்ள காலம் மிக மிக நீண்டது. யாருமற்ற அப்பாதை அபாயகரமானதும் கூட. தனிமை மட்டுமே அணைத்து கூட்டிச் செல்லும் அப்பாதையில் மோகனரங்கனின் இக்கவிதையைப் பிடித்துக் கொண்டு  நடந்து செல்கிறேன். 



 நெடுவழித் தனிமை 


யுகங்கள் வேண்டாம் 

ஊழிக்கூத்து 

நாழிகளில் 

சுவாதீனத்திற்கும் 

பிறழ்விற்குமிடையே 

கால் மாற்றியபடியிருக்கிறான் 

கலைஞன் 

நேசம் கற்பித்தவளுக்கு 

காதிலொன்றை வெட்டிக் கொடுத்தவன் 

கட்டுப்போட்ட முகத்தோடு 

காட்சிக்கு இருக்கிறான் 

சுயசித்திரத்தில் 

வர்ணங்களின் இசையைப் 

பார்க்கத் தெரியா யெனது 

குருட்டுக் காதுகளினருகே 

தயங்கி நின்ற 

சவரக் கத்தி முனையில் 

கடந்தே னென் 

சித்தத்துக்கும் செயலுக்குமான 

தொலையாப் பாழ்வெளியை


       (நெடுவழித்தனிமை தொகுப்பிலிருந்து)  


"ஊழிக்கூத்து நாழிகளில்"  ஆம் படைப்பு நிகழும் காலம் அப்படிக் கொந்தளிக்கும் கடலில் மூழ்கி தப்பித்துக் கரையேறி கரையில் உள்ள கத்திப்பாதையில்  கால்களை மாற்றி மாற்றி நடப்பதே.அதில் நடந்து செல்லும் கலைஞனின்  தொலையாப் பாழ்வெளியை இக்கவிதை வழியே நிரந்தர ஓவியமாக்குகிறார் மோகனரங்கன். வாசிக்கும் போதெல்லாம் கத்தியில் நடந்து செல்வது போன்று கால்களைப் பின்னிக் கொள்கிறது அச்சம்.



🔘🔘🔘


வேலை கிடைத்து முதல்நாள் அலுவலகம் நுழைபவன் எல்லோருக்கும் வணக்கம் சொல்கிறான். ஒவ்வொன்றும் புதிதாக இருக்கிறது. அதிகாரிகளைப் பார்த்து பயப்படுகிறான். என்ன பேசுவது என்ன செய்வது எல்லாமும் குழப்பமாக இருக்கிறது.  தேவதச்சனின் "நாள் கவிதையொன்றில் "நுனி நாற்காலியில் அமர்ந்தபடி கோப்புகளைத் திறக்கிறான்  …….நுனி நாற்காலியில் அமர்ந்தபடி கோப்புகளை மூடுகிறான் " என்று வரும். அவ்வளவு பதற்றத்துடன்  கோப்புகள் நிறைந்த தனது மேஜையைத் துடைக்கும் போது இது  தூசியில்லாத இடமாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொள்கிறான். ஒவ்வொரு வருடமும் இங்கிரிமெண்ட் வரும் போதெல்லாம் கொண்டாட்டமாக இருக்கிறது. பதவி உயர்வு வரும்நாளில் வாழ்வே விழாக்கோலம் பூண்டதென இருக்கையில் உட்கார முடியாமல் பறக்கிறான். கோப்புகள் கோப்புகள் கோப்புகள் நாள் முழுதும் கோப்புகள்தான் வீட்டிலும் ரயில் பயணத்திலும் எல்லாமும் எப்போதும் கோப்புகள்தான் அவனக்கு. இங்கிரிமெண்ட் வர வேண்டிய ஒரு ஆண்டின் மாதத்தில் வேலை முடிந்து விட்டது வீட்டிற்கு கிளம்பலாம் உங்கள் வயது ஐம்பத்தெட்டு என்கிறார்கள். நம்ப முடியாமல் சந்தன மாலையை அணிந்து கொண்டு புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறான். கடைசியாக ஒருமுறை இருக்கையை மேஜையைத் தடவிப்பார்த்த படி வீட்டிற்குக் கிளம்புகிறான்.  நண்பர்கள் கையசைத்து விடை தருகிறார்கள். 58  மாபெரும் உருவமாக அன்று இரவு வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மறுநாள் வீட்டுக்குள்ளிருக்கும் பழைய கோப்பு ஒன்றில் புதிய கையெழுத்தை இடுகிறான். ஆனால் அது செல்லாததாக மாறி இருக்கிறது. 




 வாசனை


பைல்கள்  

நிறைந்த மேசை முன் 

உட்கார வைத்துப் போனார்கள் 

பக்கங்களின் நடுவே 

செத்துக் கிடந்த 

அந்துப் பூச்சிகளைத் துடைத்து விட்டுப் 

படிக்கத் துவங்கினான் 

முடிவின்றிப்  புரண்டு கொண்டிருந்தன 

பக்கங்கள் 

திடீரென  ஒரு தினம் 

ஐம்பத்தெட்டைக் காரணம் காட்டி 

பைல்களைப் பிடுங்கிக் கொண்டு 

மாலை போட்டு அனுப்பிவிட 

செய்வதறியாமல் 

திகைத்துப் போனான் 

கிளம்பும் அவசரத்தில் 

கார்பன்  எழுத்துக்களிடையே 

கிடந்த கண்களிரண்டையும் 

பொறுக்கிக் கொள்ளவும் 

மறந்து போயிருந்தது  

தடுமாறியபடி நடந்தவனுக்கு 

ஞாபகம் வந்தது 

எதற்கும் இருக்கட்டும் என்று

அலுவலகத்திலிருந்து

அவ்வப்போது எடுத்துப்போன 

பைல்கள் கொஞ்சம் 

வீட்டிலிருந்தன 

மூச்சு சீராய் வர 

சட்டைப் பையிலிருந்து 

மூக்குக் கண்ணாடியை 

துடைத்தெடுத்து மாட்டியவன் 

நடக்கத் தொடங்கினான் 

நேராக.


( நெடுவழித்தனிமை தொகுப்பிலிருந்து )



58 வயது அலுவலகத்திலிருந்து அவனை விடாப்பிடியாக இழுத்து வெளியேற்றும் போது கார்பன் எழுத்துக்களிடத்தில் கண்கள் மாட்டிக்கொண்டுவிட  அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறான். பழைய கோப்புகளைப் பார்த்ததும்தான் மூச்சே சீராகிறது. பணி ஓய்வு நாளில் மொத்த உலகமும் இருண்டு விடும் துயரத்தை காலத்தின் வாசனையாக்குகிறார் மோகனரங்கன்.




🔘🔘🔘


ஒவ்வொரு முறையும் முத்தமிட வரும்போதெல்லாம்  காதல் சுரக்காது மல்லுக்கட்டும். தானாக மலர வேண்டிய பூவை சுத்தியல் அடித்து திறப்பதாக மனம் அவஸ்தையுறும்.  மலைக்கோவிலில் சுடரும்  அகல்கள் மெல்லத் தொட்டுப் பற்றிக் கொண்டு காடுகளை ஓலமின்றி எரியச் செய்வது முத்தம். இட்டதும் தெரியாது காய்ந்ததும்  தெரியாது இடப்படும் அவசர முத்தங்கள் நெத்தியில் ஸ்டாம்ப் குத்திவிட்டு ஓடிவிடும். முத்தத்தில் என்ன இருக்கிறது வலிந்து முத்தமிடும் உதடுகளில் காயம் இருக்கும்போது வலியாக மட்டுமே  மிஞ்சுகிறது. அதே பழைய அணைப்பு அதே பழைய கதவடைப்பு அதுதானே முத்தத்தில் வேறென்ன இருக்கிறது என்றெல்லாம் யோசித்துக்  கொண்டிருக்கும்போது  மோகனரங்கன் முத்தம்  காய்ந்து விடும் கரையின் ஈரமல்ல  தீராத பெருங்கடல் என்கிறார்.  





ஒவ்வொரு 

முறையும் 

ஒரு 

முத்தத்தின் 

மூலம் 

நீங்கள் பருகுவது 

ஒரே 

கடலின் 

வெவ்வேறு 

உப்புகளை


      ( மீகாமம் தொகுப்பிலிருந்து )



அவனது கடலும் அவளது கடலும் முத்தத்தில்  பெருங்கடலாகிறது.

கடலை முழுவதுமாகப் பருக முடிவதில்லை, ஆனாலும்,  அலையில் தெறிக்கும் உப்பு அத்தனையும் புதிது என்கிறார் மோகனரங்கன். 






கவிஞர் : க. மோகனரங்கன் 

கவிதைத் தொகுப்புகள்: நெடுவழித்தனிமை, இடம்பெயர்ந்த கடல், மீகாமம் மற்றும் கல்லாப்பிழை

Comments