பின்பக்கமாகத் திரும்பி அமர்ந்திருப்பவள்

பின்பக்கமாகத் திரும்பி அமர்ந்திருப்பவளின்
நிர்வாண ஓவியத்தில்
எப்போதுமே தெரிவதில்லை முலைகள்

துருத்திக்கொண்டிருக்கும் முதுகெலும்புக்குள்
ஆர்வமுடன் துழாவும் கண்கள்
நூறு முறை ஆயிரம் முறை
இல்லாத முலைகளின் அளவுகளை
வரைந்து கொண்டே இருக்கின்றன.

அவள்
இடுப்புக்குக் கீழே
மணலுக்குள் புதைந்திருக்கிறது
எலிகளாக மாறும் விரல்கள்
கொறித்துக் கொண்டே இருக்கின்றன
நுண்சதை வண்ணங்களை.

முன்பக்கத்தை
வேடிக்கை பார்க்கும் சூரிய ஒளிக்கு
எந்தவிதக் கற்பனையும்
வரப்போவதில்லை.
தங்கமென மின்னும் உடலில்
ஒரு நீர்த்துளியாக உருண்டு சுற்றி வர
தவமிருக்கும் மணற்துகள்கள்
வயிற்றுக்கு அடியில்
வெறுமனே அமர்ந்திருக்கின்றன.

அவளின்
தலை குனிந்திருப்பது
கைகள் ஒடுங்கியிருப்பது
இடுப்பை விரித்திருப்பது
எல்லாமும் உங்களுக்கு
புணர்ச்சிக்கான அழைப்பாகத் தோன்றுகிறது

ஒளியைப் போல
பயணித்துக் கொண்டே இருக்கும்
முடிவற்ற அவளது முன்பக்கம்
தொடமுடியாத இருளால்
நிரம்பியிருக்கிறது.

ஒரு ஆப்பிளை உருட்டி
அவளைத் திரும்புமாறு அழைக்கிறீர்கள்
முன்பக்கத்திற்காகக்  கெஞ்சி அழுகிறீர்கள்.

திரும்பாமல்
அவ்வளவு பிடிவாதமாக
என்னதான் செய்கிறாள்

ஒருவேளை
இறந்து கொண்டிருக்கும் அவளது உடலை
வேடிக்கை
பார்த்துக்  கொண்டிருக்கிறாளோ.

--
கீற்று அக்டோபர் 2019

Comments