அறுவடை

மரவள்ளி பிடுங்கிய வயிற்றை
தடவிப்பார்க்க விடாமல்
நிரம்பிக் கொண்டது மழை.
வேலிக்கு வெளியே நின்ற என்னிடம்
புதுக்கிழங்கை நீட்டினாள் மகள்.
சுட்டுத்தருவதற்குள்
வேப்ப மரத்தை மோதியபடி
ராட்சதக் குழாய்களை இறக்கியது லாரி
மூங்கில் வேலியை உடைத்தவர்கள்
வரப்புகளை அகழ்ந்தபடியே
அறிவிப்பினை செதுக்கினார்கள்
"இன்றிலிருந்து இந்நிலத்தில்
வேர் விடும் தானியங்களை
பயிரிடக் கூடாது 
மரங்களை வேருடன் பிடுங்குங்கள்
குழந்தைகள்
நிலம் தோண்டி விளையாடக்கூடாது
கூழாங்கற்கள் சேர்வது
அபாயத்திற்கான அறிகுறி
கட்டளைகளை மீறினால்
குழாய்க்குள் திணிக்கப்பட்டு
ஆழ்கடலில் புதைக்கப்படுவீர்கள் ".
முன்பொரு நாளில்
குழாய்கள் பொருத்தும்
வரைபடம் வரைந்தவனுக்கு 
திடீரென சிறுநீர் முட்டிய போது
அவசரத்தில் பென்சில் வளைந்து
என் நிலத்தில் கோடு போட்டிருந்தது.
செந்நிற வயிற்றைக் கிழித்துச் செல்லும்
குழாய்களின் வாயின் ஓரம்
அழமுடியாத நிலத்தின் ரத்தம்
வழிந்து கொண்டிருந்தது.
குழாய்களின் மீது
கழியாமல் இருப்பதற்காக
காகங்களைக் கொல்ல ஆரம்பித்தோம்.
அகதிகளான மண்புழுக்கள்
முன்பே
சுடுவெயிலில் பொசுங்கியிருந்தன.
தவறுதலாக முளைத்துவிட்ட
பழைய தானியங்களின் வேரை
குழாய்களை நெருங்கும் முன்பு
தேடித் தேடி
அறுக்க ஆரம்பித்தோம்
ஆம் !
செந்நிற வயிற்றில்தான்.

--வாசக சாலை இணையதளம்
அக்டோபர் 15 இதழ்

Comments