குருதி மணக்கும் நிலம்



நிலத்தின் வாசனையை
ரயில் ஜன்னல் வழியாக
முகர விரும்புபவர்களுக்காக
குட்டி குட்டியாகக் கிழித்த
அம்மாவின் புடவையில்
மண்ணைக் கட்டி விற்பேன்.

நாற்றமடிக்கிறது என்று
தூக்கி வீசாமல் இருப்பதற்காக
மல்லிகை மொட்டுகளை நசுக்கி
புதைத்து வைத்திருப்பேன்.

மண்ணைக் கிளறி
முகர்ந்து பார்த்தவர்கள்
வயல் சேற்றில் கால் புதையும்
கனவுக்குள் மிதந்தார்கள்.
அதற்குப் பிறகு
குறிப்புகள் எழுதத் தொடங்கும் போது
எல்லா மூட்டைகளையும்
கொட்டிக் காட்டச் சொன்னார்கள்.

அதில்
தெரியாமல் வந்து நுழைந்து விட்ட
நெல்லைப் பார்த்ததும்
கோபம் வந்து விட்டது அவர்களுக்கு
"நாங்கள் வேண்டுவது
தானியங்களற்ற
தூய நிலத்தின் வாசனையை "
என்றபின்
என்னை அடித்து வெளியேற்றினார்கள்.

அதற்குப் பிறகு
நிறைய ரயில்கள்
வந்து வந்து செல்கின்றன.
நான்
இப்போது விற்கும் மூட்டைகளில்
யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி
மண்புழுக்களை நசுக்கிச் சேகரித்த  குருதியைக் கலக்கின்றேன்.

ரயில் ஜன்னல் வழியாக
என்னைப் பார்ப்பவர்கள்
குருதி மணக்கும் நிலத்தை
விரும்பி முகருகிறார்கள்.
தாங்கள் எழுதவிருக்கிற குறிப்புகளில்
நிலம் குருதியால் மணக்கும் போது
தானியங்களற்று இருப்பது
அதன் வாசனையை
இன்னும் அதிகரிக்கிறது
என்று எழுதவிருப்பதாகவும்
சொல்லிச் செல்கிறார்கள்.

நான்
அடுத்த ரயிலுக்காக
அப்பாவின்  வேட்டியை
குட்டி குட்டியாக வெட்டுவதற்காக
வயல் நோக்கி
ஓடிக் கொண்டிருக்கிறேன்.

வாசகசாலை.காம் அக்டோபர் 2019 இதழ்

Comments