ஓரிதழ்ப் பூக்கள்



ஒரு முறுக்கு மீசைக்காக
மழிக்கப்படுகிறது
இன்னொரு மீசை.

எதிரெதிர்க் கண்ணாடிகளின் அளவுகள்
சரியாகப் பொருந்தும் போது
அச்சமூட்டும் பிம்பங்கள்
நேர்க்கோட்டிலிருந்து வளைகின்றன.

தலையைக் கழற்றிக் கொள்ளும் உடல்கள்
சுவற்றில் உருண்டு தெறிக்கும்
புதிய நிறத்தைக் கண்டு
விலகியே நிற்கின்றன பல்லிகள்.

பாதி இரவை
பாதிப் பகல்
கூடும் போது
வானம் குழம்புவதால்
தத்தளிக்கின்றன மேகங்கள்.

அறை வாசலில் காத்திருக்கும்
சூரியனும் நிலவும் விண்மீன்களும்
பின்னோக்கி நடந்து அழிகின்றன
கருங்குழியின் பாழ் வாய்க்குள்...

மூலைக்குள்  ஒளிந்து
கேலி செய்யும் குறும்பற்களை
உடைத்துப் பதுங்கும் ஆயுதங்கள்
படுக்கைக்கு அடியில் பெருகுகின்றன.

எங்கிருந்தோ கசிந்து
பின் வெள்ளமாகப் பெருகும்
நாற்றமடிக்கும் நீரூற்றின் திறப்பை
அடைக்கமுடியாமல் மிதப்பவர்கள்
ஒவ்வொன்றாக நுழைத்துத் தோற்றபின்பு
ஆடைகளற்ற உடலைத் திணிக்கிறார்கள்.

 கணையாழி அக்டோபர் 2019 இதழ்

Comments