நட்சத்திரங்களைத் துழாவுதல்



இதயத்துக்குள் புகுந்து
நட்சத்திரங்களைத் துழாவுகிறேன்
உடைந்து மேலெழும் பால்வெள்ளித் திரள்கள்
குளிர்புகை வளையங்களாகப்
பிடிக்க முடியாதபடி சுற்றி வருகின்றன.

பேரொளியைத் தரிசிக்கும் கண்களுக்காக
நிலமெல்லாம் புதைக்கிறேன் வெள்ளித்தகடுகளை
முளைப்பதெல்லாம் மின்மனியின் கண்களே.

காற்று புரட்டும் தாள்களுக்கு இடையில்
வாசிக்கும் மின்னல்களை
வரைந்து பார்க்கும் நிறைவற்றப் பெருமூச்சு
வண்ணங்கள் குழைத்த அழுக்குத் தண்ணீரில்
மெல்ல அமிழ்ந்தடங்குகிறது.

அந்த ஒரு கணத்தின்
பட்டாம்பூச்சியைப்  பிடிக்கமுடியாமல்
கைவிரல்களும் வலைகளும்
அவிழ்ந்து சோர்வுறும் பொழுது
சற்றே ஆறுதலளிக்கிறது
கை தீண்டிப் பறக்கும் தும்பி.

ஆழ உழுத நிலத்திலிருந்து
பொங்கும் மழை
வெளியை நிரப்ப முடியாமல்
மண்ணையே அடைகிறது
மீண்டும் மீண்டும்.

நன்றி : இனிய உதயம் அக்டோபர் 2019





Comments