நிலக்கரி மிட்டாய்



வாயில் வைத்ததும் பிரகாசிக்கிறது
நிலக்கரி மிட்டாய்  திண்ணும் சிறார்கள் முகம்
வண்ணக்கொடிகளேந்தி
அவர்கள் ஒடும் வயலில்
வேகமாக நுழையும் குட்ஸ் ரயில்
நீண்ட ஆழத்திற்கு உள்ளிறங்கி
கொள்ளிக்கட்டைகளுடன் வெளியேறுகிறது.

வேர் முளைக்கும் மண்ணின் கால்களை
தேடி அலையும் விதைகளின் வயிற்றில்
சக்கரங்களை ஏற்றும் ரயில்
கால்கள் வயிறுகளை
ஒன்றாக அள்ளிச் செல்கையில்
தடங்களை அழிப்பதற்காக
வந்து நிறைகிறது கடல்.

எங்கும் ஒரே வெளிச்சம்
கண்களைக் கூச வைக்கும்  கொள்ளிக்கட்டைகளுக்கு
இந்த முறையும் பஞ்சமில்லை.

இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான்
புகையை ஊதுவாயென
வீட்டுக்குள் நுழையும் நிலக்கரி மிட்டாய்கள்
பாத்திரங்களைத் தெறிக்க விட்ட பின்
கூரைகளைப் பறக்க விடுகின்றன
சொட்டு சொட்டாய் கஞ்சி விழும் திசையில்
கையை ஏந்துபவர்கள்
ஓடமுடியாமல் உறைகிறார்கள்.

அறுவடை வயல்களில்
சொக்கப்பனை பார்க்க விரும்பும் ரயில்
தெறித்து விழும் கதிர்களின் ஒளியில்
குளிர்காயும் பெட்டிகளுடன்
கொளுத்து கொளுத்து என்று
வெறிகொண்டு விரைகிறது.

நிலக்கரி மிட்டாய்கள்
பச்சைக் கொடியை
எரித்து  அசைக்கின்றன

நடு இணைய இதழ் (பிரான்ஸ்)

புரட்டாசி 2019

Comments