விரும்பி அழியும் எறும்புகள்



வெளிச்சப்புள்ளிகளை பச்சை குத்தியபடி
உறுமியலையும் பயந்த மிருகம்
நள்ளிரவில் வானடையும் போது
வீண்மீன்கள் சுமக்கும் கூடென மிதந்தது

அதிகாலையில் கீழே விழும் எறும்புகள்
முன்னிரவில் எப்போதும்
விண்மீன்களாகவே இருந்திருக்கின்றன

பூட்டிய அறைக்குள் ஒடுங்கும் எறும்பு
சுவரை அரிக்க ஆரம்பிக்கிறது
தோண்டிய மணலுக்குள் புதைவதென
அதன் தலையில் எழுதுகிறவன்
மை தீர்ந்த கடைசி எழுத்தில் மறைகிறான்.

அடங்காத எறும்பு
இதயத்திலிருந்து பிடுங்கும்
துளி உதிரத்தால்
தானே எழதி முடிக்கிறது.

அகழ்வாராய்ச்சி செய்பவர்கள்
மண்டையோடுகளை மட்டுமே
துடைத்து ஊதுகிறார்கள்.
எறும்புகளின் எலும்புகள்
தோண்டும் போதே சிதறுகின்றன.

சர்க்கரைத் துகள்களை
செரித்து வெளியேற்றும் பாக்டீரியாக்கள்
எறும்புகளின் கண்களை
உப்பு உருண்டைகளாக்கி
ஆழத்துக்கு நகர்த்துகின்றன.

கடித்தவுடனே தேய்த்தழிப்பது
அவசரப் பாதங்களுக்கு பிடித்திருக்கிறது.
கறை அகற்றுதலை
நீருக்கு முதலில் சொல்லித் தருகின்றன.

தெரியாத துளி உதிரம்
பரவுகிறது பூமியின் முகத்தில்
நெஞ்சிலடித்துக் கொண்டு
முகர்ந்து செல்லும் எறும்புகளின் கால்கள்
நடுங்கி உடைகின்றன
எலும்புகளின் மூச்சில்.


நடு இணைய இதழ் ( பிரான்ஸ் )


புரட்டாசி 2019

Comments