நதியெனும் மாலை




நீ
நதியை
மாலையாக அணிந்திருந்த போது
என் வீட்டுக்குள் உன்னை நுழைத்தேன்.
அன்றிலிருந்து இன்றுவரை
உயிர் வற்றவே இல்லை.
நதிக்கு அருகில் இருக்கவே விரும்புகின்றன
பல்வகைத் தாவரங்களும்
குட்டி விலங்குகளும்.
ஒவ்வொரு முறை மூழ்கி எழும் போதும்
உதிரும் மலர்களை
கரையில் காய வைக்கிறேன்.
சருகுகள் எரியும் போதும்
அடியிலிருந்து பாயும் ஊற்றால்
மீளவும் மலர்கின்றன மலர்கள்.
வானக்கருப்பையில் முட்டி மோதும்
உயிர்ப்பட்டத்தின் வால்
அசைந்து கொண்டே இருக்கிறது
நதியின் ஆழத்துக்குள்.
பாசிகளும் மீன் குஞ்சுகளும்
கருத்தரிக்கும் காலம்
வானத்தின் குரலிலிருந்து கசிகிறது
இளவேனில் மரங்களின் குளுமை.
துவைக்கவும் குளிக்கவும் என்று
நீரைப் பயன்படுத்த மட்டுமே
குட்டி விலங்குகள் அறிகின்றன.
கோடையில்
நீ காய்ந்து உறங்கும் போதும்
வரி வரியாக உடலில் ஓடுவது
உயிரின் யாழிசைக் கம்பிகளல்லாமல்
வேறென்ன ?
இதயத்தை ஆழமாகப் புதைத்தால்
உனது இசையை சிறிது கேட்கலாம்.
மாறும் பிம்பங்களை
அழித்தழித்து விரட்டுவதால்
வானத்தைத் தவிர
உனக்கு நிரந்தர முகம் ஏதுமில்லை.
காற்றையும் எடுத்துக் கொண்டு நகருகிறேன்
சிறிது காலம் அலைகளற்று ஓய்வெடு.
உயிர் கெட்டிப் பிடித்தாலும்
உன் இருப்பால்
நாங்கள் நன்றாகவே இருப்போம்.


சொல்வனம் செப்டம்பர் 2019

Comments