கொல்லும் சொல்



அந்தச் சொல்லைப் படித்தவுடன்
குமட்டுகிறது
ஒவ்வாமையால் வாந்தி எடுத்தபின்பு
கழுவிய கைகளில்
சோப்பை நுகருகிறார்கள் தெருவாசிகள்.

அந்தச் சொல்லுக்குள் மூழ்கியவன்
இறந்து மிதப்பதைப் பார்த்தவுடன்
அவனது தலையைப்
பாறையால் மூடுகிறார்கள்.
இறந்தவனைத் தேடி எடுப்பதற்காக
வெளிநாட்டிலிருந்து வருகின்றன
பாதாளக் கரண்டிகள்.

தெரு முழுவதும்
கதவுகள் அடைக்கப்பட்டு
சுவாசிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது.
வீடுகளிலிருந்து பூக்களை
வேருடன் வெட்டித்தரும் அரிவாள்கள்
அவனுக்காக
மலர் வளையங்கள் செய்கின்றன.

வாசனை திரவியங்களை
லாரியில் ஏற்றிக் கவிழ்த்து விடுகிறார்கள்
நறுமணத்தில் மிதக்கும் தெருவில்
நகர்ந்து செல்கிறது அவனது உடல்.
மெதுவாகத் திறக்கின்றன கதவுகள்.

உடலைச் சுமந்து செல்லும்
வாகனத்திற்கு அடியில்
சாலைகளுக்கு அடியில்
பூமிக்கு அடியில்
ஓடிக்கொண்டே இருக்கும் நதியில்
பிணங்களாக மிதக்க ஆரம்பிக்கிறது
அந்தச் சொல்.

கணையாழி செப்டம்பர் 2019

Comments