அணையாத அடுப்பு



எரிந்து கொண்டே இருக்கிறது
அடுப்பு

தேநீராக மாறிய பசும்பால்
பொங்கி வழிந்து கிடக்கிறது

தட்டைத் தூக்கியெறிந்து
கொதிக்கிறது உலை
கோபத்தை வடிகட்டி
ஆற்றுப்படுத்துகிறார்கள் 
சோற்றை

நேற்றைய குழம்பின்
சுண்டிய நறுமணம்
புதிய குழம்பின்
நறுமணத்தை மறைக்கிறது

அம்மா பசிக்கிறது என
குழந்தைகள் ஓடும் போது
அடுப்படியில்
தாய்
ஏதாவது தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறாள்

மழையில் நனைந்த அடுப்புகளில்
சருகுகளைப் பற்ற வைக்க
நெருப்பை வாசிக்கிறது
ஊதாங்குழல்

கண்ணீரைக் குடித்து நீளும் புகை
நுரையீரலை இருமலில் முக்குகிறது

வெந்நீர் கொதிக்கும் பானைக்காக
மிச்சம் இருக்கிறது
அடுப்பின் நெருப்பு

கொலுசு செப்டம்பர் 2019

Comments