மாலை முதல் இரவு வரை



நீளும் தண்டவாளங்களில்
காத்திருப்பின் தீக்கணங்களை
நேர்க்கோடுகளாக வரைகிறேன்

உன்னைச் சேருமிடத்தில்
குளிர்வித்து நசுக்குகின்றன
நீ அமர்ந்து வரும் ரயிலின் சக்கரங்கள்

"ரயிலேறி விட்டேன் "
குறுஞ்செய்திக்குப் பிறகு
மாலையைத்
தேநீர் போல குடிக்க ஆரம்பிக்கிறாய்

தொட்டுக் கடிப்பதற்கென
ஒரு கவிதை
ஒரு இசை
கட்டை விரல் தேயும்
தொலைபேசி நகர்த்தல்
எல்லாம் இருக்கிறது

நிறுத்தங்கள் தெரியாத பருகுதலில்
ஒரு மழை வேண்டியிருக்கிறது
நினைவுகளை நெய்யும் வாசனை
உன் உறக்கத்தை அவிழ்ப்பதற்கு

மழைக்குப் போட்டியாக
நீ உருக ஆரம்பிக்கிறாய்
தோண்டியெடுக்கிறாய் காதலை
முத்தங்களால் துடைக்கிறாய் முகத்தை

மல்லிகைப் பூக்கள் வேண்டுமென
என் நினைவில் கத்துகிறாய்.
சூடான சமோசா விற்கிறார்கள்

பூக்களைத் தின்று விடுகின்றன
சமோசாக்கள்.

இங்கு
என்னைத் தேநீராக்கிக் குடிக்கிறது
மாலை

உயிர் கொதிக்கும் ஆவியின் நறுமணம்
அடங்கிக் காலியாகி இருக்கும் இரவில்
உன்னைத்தான்
நினைத்துக் கொண்டே வந்தேன்
என்று
தூக்கம் துடைக்காத முகத்தால்
பொய்யை ஊற்றுவாய்.

இரவு உணவுக்குத்
தொட்டுக்கொள்ள இருக்கட்டும் என்றே வாங்கிக்கொள்கிறேன்.

காற்று வெளி ஆடி 2019 

Comments