அணில் குஞ்சுகளைப் பிரசவிக்கும் அறை



அந்த
நெடுஞ்சாலையின் மரங்கள்
முட்டிக்கொண்டதில்
கொம்புகளாக முளைத்த
கிளைகளில் இருந்து
உதிர்ந்து கிடந்தன பூக்கள்.

தூரத்தில் ஒரு இலையற்ற மரம்
உடைந்த கிளைகளால்
கிழித்துக் கொண்டிருந்தது காற்றை.

நிறைசூலியைப் போல
பருத்த  நீர்க்குடமாக
தழும்புப் பட்டைகளுடன்
குடைந்தெடுக்கப்பட்டு
வீங்கியிருந்தது வயிறு.

கவர்ச்சியாக இல்லாததால்
பேய் மரமென்று யாரும் நெருங்குவதில்லை அதனிடம்

பட்டை பட்டையாய்
தோலை உரித்தெடுக்கும்
உச்சி வெயில்
சிலுவையாக்கி அறைகிறது
கைவிரல்களை நீட்டி
துடித்தழுகின்றன கிளைகள்.

கட்டிக்கொண்ட தாய்ப்பாலை
பீய்ச்சி எடுப்பதைப் போல
வழிந்து கிடக்கிறது பிசின்.
நாற்றம் தாளாமல் வேகமாகப் பயணிக்கின்றன வாகனங்கள்

அந்த மரத்தின்
அடிவயிற்றுக் கூட்டிலிருந்து 
மெல்ல விழிதிறந்து மூடும்
அணில் குஞ்சுகள்
நேற்று இரவு
அங்கேதான் பிறந்திருக்கின்றன.

காற்று வெளி ஆடி 2019 

Comments