அழுத்தமான முத்தம்



கைவிரல்களைக் கழற்றி விடும்போது
அழுத்தமாக முத்தமிடும் குழந்தை
திரும்பிக்கொண்டு கையசைக்கிறது.

ஒரு முத்தத்தில்
அவனைப் பிரியாமல் ஒட்டிக்கொள்ளலாம் என்று நம்பும் குழந்தை
தோற்றுப் போகும் போது
பூமியை உதைக்கிறது

அழமுடியாமல் விடைபெறும் வாதை
இருவர் முன்பும் சென்று
கைகளை நீட்டும் போது
முதலில் நான் என
ஓடும் குழந்தை
"பத்திரமாக இருக்க வேண்டும் "
என்று முந்திக் கொண்டு சொல்கிறது.

தடவும் போதெல்லாம்
விழித்துக் கொள்ளும் முத்தத்தின் கண்கள்
கனவுகளுக்காக காத்திருக்கிறது.
யாரிடமும் பகிர முடியாத அணைப்பை
வெற்றிடத்தில் கரைத்துக் கொள்வதில்
முன்னேறுகிறது குழந்தை.

நேரமாகி விட்டதென்று நகரும் கணத்தில்
பெட்டிக்குள் நெருக்கி அடைக்க
ஏதுவாக இருக்கிறது
குழந்தையின் துயரம்

அவனது ஒவ்வொரு பொருளையும்
வீட்டுக்குள் பாதுகாக்கும் குழந்தை
அழுத்தமாக முத்தமிடும் போது
நகராமல் இருப்பதால்
விடாமல்
அணைத்துக் கொள்கிறது.

கொலுசு - ஆகஸ்ட் 2019

Comments