அணுக்களால் ஆனது இவ்வுலகம்



எரியும் மீன் வயிற்றுக் குருதியில்
வறுக்கப்பட்ட குட்டிக் கருவாடுகள்
கப்பலில் ஏற்றுமதி செய்ய உகந்தவை.
அதோ! கப்பலில் அசையும் கொடி
கரைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது.
உப்பில் அரிக்கப்படாத துப்பாக்கி ரவைகள்
மீன்களின் வயிற்றிலிருந்து  எடுக்கப்பட்டு
பழைய இரும்புக் கடைகளில்
எடை வைக்கும் போது
இடது பக்கத்தில் உட்காருகின்றன அணுக்கள்.
உலகம் அணுக்களால் ஆனது
சுவாசிக்கும் போது நுழைவதும்
உயிர் என்ற சொல்லைச் சுற்றி
கைக்கோர்த்து ஆடுவதும் அவைதான்.
குட்டிக்கருவாடுகளுக்கு
நறுமணமிக்க அணுக்களைப் பூசலாம்.
கொளுத்தப்பட்ட
சங்கு சக்கரங்களை விழுங்கித்
தண்ணீர் குடிக்கும் போது
அணுக்கள்
கதிர்வீசிச் சுழலும் அழகை
ஸ்கேன் செய்து வீட்டில் மாற்றலாம்.
புயல் காற்றில் அழிவதே இல்லை
அணுக்களால் எழுப்பப்படும் கோபுரங்கள்.
வீட்டுக்கு நடுவில் குழிதோண்டி
நாம் ஒன்றாகப் புதைந்து கொள்வோம்
அணுக்களாக சிதையும் நாம்
ஒரு போதும் அழிவதில்லை
நூறாண்டுக்குப் பிறகு
தங்கமாகத் தோண்டியெடுக்கப்படும் போது
நாம் விலைமதிப்பற்றவர்கள்.
நேற்று நம்மை உதைத்தவர்களின் வீடுகளில்
பல அடுக்குப் பாதுகாப்பில்
வருங்காலக் கழுத்துகளில் ஜொலித்திருப்போம்.
சொல்ல மறந்து விட்டேன்
மீன்களின் வயிற்றைச் சிதறடித்த
துப்பாக்கி ரவைகள்
முழுக்கவும் அணுக்களால் மட்டுமே ஆனவை.


வாசகசாலை ஆகஸ்ட் 2019

Comments