கொல்லெனக் கொல்லும் மழை



நடுங்கும் குகையில்
குடைவிரிக்கும் காளான்
கொல்வதற்காக வெளியே அலையும்
புது மழைக்கு பயந்து
வேரை அறுத்துக்கொண்டு அழுகுகிறது.

வழுக்கும் பாறையில்
முத்தத்தால் ஒட்டியபடியே மேலேறுகிறவர்கள்
கொட்டாங்குச்சியால் சுனையை அள்ளி
குளிக்கும் யானைகளுக்கு
பெருங்கிளைகளை முறித்துப் போடுகிறார்கள்.

வேர்களைப் பிடுங்கி
மரங்களை உடைக்கும்
வலிய பாதங்களில் கமழ்கிறது
நசுங்கிய இலைகளின் பச்சை மணம்.

கோடிக்கால்கள் உதைக்கும் பறை
அதிரத் தொடங்குகிறது உச்சியில்
மலையதிர
குகையதிர
கொல்வதற்காக ஆடுகிறது மழை.

குதிப்பதற்கு முன்பு
முத்தத்திற்குள் உடல்களைத் திணிக்கிறார்கள்
வெடித்து வெளியேற்றுகிறது மழை.

கீழே
மலைப்பாதையில் தேயிலை பறிக்கும் சிறுமியை பயமுறுத்துபவன்
மழையில் நனைந்த
மின்வேலிக் கம்பிகளைக் கடிக்கிறான்.
ஓடிக்கொண்டே இருப்பவளை
கனவிலும் துரத்துகின்றன
அடங்காத சாம்பல் பற்கள்.

மழையின் கண்கள்
உடல் மீது ஊர்ந்தலையும் போது
தோலை உரிப்பதற்காக கத்தி எடுக்கிறாள்
உச்சியிலிருந்து விழுகின்றன
முத்த உடல்கள்.

இனிய உதயம் ஆகஸ்ட் -2019

Comments