10.அருள் பொழியும் சாரங்கியில் உயிரை ஊற்றும் வேங்குழல் --வெய்யில் கவிதைகள் குறித்து

 







குகைக்குள் ரயில் செல்லும் போது சூழ்ந்து கொள்கிறது கருப்பையின் இருள். பதின்வயதில் தாயானவளுக்கு பிறந்ததால்,  அன்றே ரயிலில் ஏற்றிவிடப்பட்டவன் அழுகையை நிறுத்தி மிரளுகிறான். யாருமற்ற இருட்டில் தத்தளிக்கிறான்.  சாரங்கியிலிருந்து அருளைப் பொழிகிறார் இளையராஜா. செவிகள் மலர விழித்துக் கொள்கிறான். ரயில் இப்போது தாயாக மாறியிருக்கிறது. வேகமாகச் சென்றாலும் விழாது பிடித்துக் கொள்கிறது. "அம்மா வா ! அம்மா வா" என்று கூவியபடியேதான் புகைமூட்டம் மணக்கும் கண்ணீருடன் கிளம்பியிருந்தது அந்த ரயில். ரயில் மறைந்ததும் அழுது கொண்டே மாட்டுவண்டியைத் தேடி நகர்கிறாள் தாய். தண்டவாளங்கள் செல்லும் வழியெல்லாம் காற்றாகி நிறைந்திருக்கிறார் ராஜா. வழி மாறாது, தடம் புரளாது செல்வதற்காக குழல் வழியாக இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார் நீளமான ரயிலை. ரயிலை ஓட்டிச் செல்பவன், குழந்தை இருக்கும் பெட்டி குறித்த பிரக்ஞையின்றி வழக்கமான வேகத்துடன் செல்கிறான். அருளைப் பொழிந்து கொண்டே இருக்கிறது ராஜாவின் இசை. நெல் மூட்டைகளுக்குப் பக்கத்தில் வைக்கோலுக்கு மேலே கிடத்தப்பட்டிருக்கிறவன் அழுகையை நிறுத்திவிட்டு நிம்மதியாக மூச்சுவிடுகிறான். தூரத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது வெயில். 


மிக வேகமாகச் செல்லும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகேயுள்ள வீடுகளை அதிரச்செய்வது போல பாய்ந்து தாக்குகிறது இக்கவிதை. 




சொல்லவா ஆராரோ 


ஆம் அம்மா! அந்த ரயில்தான்

உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்

தொப்புள்கொடி

வலிக்கிறது ராஜா... வெட்டிவிடுங்கள்

ரணமான அவளின் உயிர்ப்பாதையில்

வேங்குழலின் சாற்றைப்பூசிக்கொண்டிருப்பது யார்? 


( கொஞ்சம் மனது வையுங்கள்

தோழர் ஃபிராய்ட்

தொகுப்பிலிருந்து )



" வலிக்கிறது ராஜா ... வெட்டிவிடுங்கள்" ரணமான அவளின் உயிர்ப்பாதையில் வேங்குழலின் சாற்றைப் பூசிக்கொண்டிருப்பது யார்? " ஆமாம். பிரசவ வலியை உருவாக்குகிறது கவிதை. பிரசவம் நிகழ்கிறது. குழந்தையைப் பெற்ற பிறகும் ஆறாது வலிக்கிறது. அடிவயிற்றிலிருந்து புறப்படும் வலி தலையெல்லாம் சூழ்ந்து உடல் முழுவதும் பரவுகிறது. வெய்யிலின் கவிதையிடமும் " போதும் இவ்வரியுடன் நின்றுவிடு ! வலியைத் தாளமுடியவில்லை" என்று கெஞ்சுகிறது மனம். ரயிலின் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவனும்,

அவனது தாயும் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பெட்டிக்குள் அழுது கொண்டிருக்கிறது அந்த குழந்தை. தடதடக்கும் ஓசைக்கு நடுவே குழல் எடுத்து வந்து உயிரைப் பிடித்து இழுக்கும் ராஜாவை என்ன செய்வது ?  அதைக் கவிதையாக எடுத்து வந்து வலியைப் பரப்பும் இந்த வெய்யிலை 

என்ன செய்வது ? குழல் உயிரை உருக்கும் நேரத்தில் தப்பிப்பதற்காக இக்கவிதையை 

ஊற்றிக் கொள்கிறேன் "சின்னத்தாயவள்" கேட்கும் போதெல்லாம்.





🔘🔘🔘 


இரண்டு வீடுகளாக பிரிந்திருந்த பெரிய ஓட்டு வீட்டை வயிற்றோடு சரிபாதியாக அறுத்தது போன்று உடைத்திருந்தார்கள். சுவர் உடைந்திருந்ததால், உடுக்கை இழந்த உடலாகத் துடித்துக் கொண்டிருந்தது வீடு. வீதியில் செல்வோர் வேடிக்கை பார்த்தபடியே  சென்றதால் பெரிய படுதாக்களை கடன் வாங்கி வந்து வீட்டை மறைத்தார் அப்பா. படுதாக்களைப் பிடுங்கி வீசுமளவுக்கு ஆடிக்காற்று தாண்டவமாடிக் கொண்டிருந்தது.  "இன்னும் இரண்டு நாட்களுக்குள் காலி செய்து விடுங்கள். நாளைக்கு முழுவதுமாகத் தகர்த்து விடுவார்கள்" என்று சொல்லிச் சென்றார்கள் இடத்தை வாங்கியவர்கள்.அவனது அக்காவின் திருமணத்துக்கு வாங்கிய கடனுடன், அம்மாவின் அறுவைக்கிகிச்சைக்கு வாங்கியதும் சேர்த்து வீட்டை மொத்தமாக விழுங்கிக் கொண்டது. பக்ககத்துத் தெருவில் சிறிய வீடொன்றில் வாடைகைக்கு  குடியிருப்பதற்காக பொருட்களை மூட்டை கட்டி நள்ளிரவில் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பா வானொலியின் பின்பக்க வயிற்றைத் திறந்து பேட்டரிக்கட்டைகளை நிரப்பினார். F.M. ல் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. . அடுத்த வாரத்திலேயே, பத்தாம் வகுப்பு முடித்திருந்த அவனது அண்ணன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றான். சிறியவனான அவனோ அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததால், பள்ளி முடிந்து மாலை முதல் இரவு ஒன்பது மணி வரை மளிகைக் கடையொன்றில்  பணிபுரிந்தான். அம்மா காலையும் மாலையும் வயல் வேலைக்கு செல்ல  ஆரம்பித்தாள். அப்பாவின் தையல் மிஷினின் நாடா அறுந்திருந்தது. சிறிய சக்கரத்தை இடைவிடாது சுற்றியபடியே இருந்தவர்,  பெடலை மிதிக்கும் போது வானொலியை இலங்கையின் தமிழ்  அலைவரிசையில் வைத்தார். " நம் ஊர் போன்று குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் வேலை மிகவும் கஷ்டமாக இருக்கிறதெனவும்,  புதியவனென்பதால் அடிக்கடி திட்டுகிறார்கள் ஊருக்கு வந்து விடலாமென்று தோன்றுவதாகவும்" அவனது அண்ணன் கடிதம் எழுதியிருந்தான். தினமும்  வெகுநேரம் நின்று கொண்டே இருப்பதால் கால் வலிக்கிறது "வேலையை விட்டுவிடலாமா அப்பா ! " என்றான் சிறியவன். ஆரஸ்பதி இலைகளை எரித்து வெந்நீர் வைத்துக் கொண்டிருந்த அம்மா இருமிக் கொண்டே இருந்தாள். வானொலியில் பாட்டொலியை அதிகமாக்கியபடியே நாடாவை இணைத்து வேகமாக பெடலை மிதிக்க ஆரம்பித்திருந்தார் அப்பா. சிறிய சக்கரமும் பெரிய சக்கரமும் இணைந்து வேகமாக சுழல ஆரம்பித்தன. 




இக்கவிதையை தன்னையறியாமல் பாடிக் கொண்டே இருக்கும் மனம், வரிகளில் பொங்கும் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் ததும்புகிறது.


தன்னையறியாமல் பாடும் நா

//அப்பா,

அறுவடை நாளில்

அதுவும் வயலின் நடுவே நான் பிறந்தேன்

கழனியில் தாமரைகள் பூத்திருந்தனவாமே?

பனியில் கழுவிய கதிர் அரிவாளால்தான்

சூல்கொடி அறுத்தீர்களாம்...

களிப்பின் ரத்தச்சகதியில் மீன்கள் துள்ளி விளையாட

சூரியன் முதல் முத்தமிடட்டும் என்று

சிரசுக்கு மேலே எனை ஏந்திப் பிடித்தீர்களாமே

அச்சமயம் குலவையிட்டவர்களுக்கு

சீனிக்கிழங்கும் பருத்திப்பாலுமா ருசிக்கக்கொடுத்தீர்கள்?

அப்பா...

பிறகு நிலம் வறண்டது

பித்தளைப் பாத்திரங்களை அடகுவைத்து வீடு திரும்பும்போது 

அம்மாவிற்கு பரோட்டா வாங்கிவந்தோமே

அந்த ராத்திரியில் தழுதழுக்கும் குரலில்

பட்டுக்கோட்டையின் பாடலை

எவ்வளவு நம்பிக்கையோடு பாடினீர்கள்

அது தோற்றுப்போகிறவர்களின் பாடலா அப்பா?

மகள் பிறந்திருக்கிறாள்

உங்களின் புதைமேட்டில் அவள் வளர்க்கும் பனை வடலிப் பருவத்திலிருக்கிறது

கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்

கடிதங்கள் எழுதுகிறேன்

எனக்கு வாய்விட்டு அழத்தெரியும் என

உங்கள் மருமகளுக்கு தெரியாது

நம்பிக்கையோடுதான் இருக்கிறேன்

ஆனாலும் வெப்பமடங்காத அந்திச்சாலையில்

பெரிய பெரிய கட்டடங்கள் வெறித்தபடி நடக்கையில்

என்னையறியாமல் என் நா அந்தப் பாடலை ஏன் பாடுகிறது?

அந்த ராகத்திற்கு இந்த மனம் ஏன் அலைகிறது?

உண்மையைச் சொல்லுங்கள்

அது தோற்றுப்போகிறவர்களின் பாடலா அப்பா//



( கொஞ்சம் மனது வையுங்கள்

தோழர் ஃப்ராய்ட்  தொகுப்பிலிருந்து )



"அப்பா ! 

கழனியில் தாமரைகள் பூத்திருந்தனவாமே ! "குலவையிட்டவர்களுக்கு சீனிக் கிழங்கும், பருத்திப்பாலுமா ருசிக்கக் கொடுத்தீர்கள் " " அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா ! " வாழ்க்கையிலிருந்து நேரடியாக எழுகின்ற கவிதைக்கு யாதொரு பூடகமும் தேவையில்லை. 

"அழுகை வராமலில்லை

ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால் அழக்கூடாது" என்பார் மனுஷ்யபுத்திரன். "நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். " பெரிய பெரிய கட்டடங்கள் வெறித்தபடி நடக்கையில் என்னையறியாமல் என் நா அந்தப் பாடலை ஏன் பாடுகிறது " அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா " . இதற்கு மேல் சொல்ல முடியாது. சிறிது நேரம் அழ வேண்டுமானால் செய்யலாம். 






🔘🔘🔘




மெடிக்கலில் விக்ஸ் பாட்டில் மொத்தமாக வேண்டுமென்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி. ஐந்து மிட்டாய்களை மட்டும் அள்ளிக் கொடுக்குமாறு சொன்னாள் அவளது அம்மா. பிளாஸ்டிக் வளையல்கள் அணிந்திருந்தவளின் கை மிட்டாய் டப்பாவின் வாயில் மாட்டிக் கொண்டு எளிதில் வெளியேற முடியாமல் சத்தமிட்டுக் கொண்டே இருந்ததால், ஓனர் திட்ட ஆரம்பித்தார் . இரவு வீடு திரும்பியதும் அறைக்குள் சென்றவள், தொடையில் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்த போது அவளது தம்பியும், அம்மாவும் மருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு முப்பத்தெட்டு வயதாகியிருந்தது. ஜாதகம் சரியில்லையெனவும் , செய்வினை செய்து விட்டதாகவும் இரண்டு முறை வீட்டை மாற்றியும் வேறு ஊருக்கு சென்றும் வாழ்ந்து பார்த்தார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுமே கூடியிருந்தது. எல்லா தெய்வங்களிடமும் வேண்டி சலித்த பிறகு, கண்ணற்ற தெய்வங்களை திட்ட ஆரம்பித்திருந்தார்கள். மொத்தக் குடும்பமும் மீளவும் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தது. எங்கு சென்றாலும் நோய்மையின் அடையாளத்தை விட முடியவில்லை. யாராவது ஒருவர் முதுகின் பின்னால் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.  மெடிக்கலில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத நோய்க்காக எத்தனை எத்தனை மருந்துகள்  என்று சலித்தபடி எண்ணிக் கொண்டே இருப்பாள். சர்க்கரை நோயிலிருந்து முழு விடுதலை பெற்று விட்டதாக ஒரு நாள் கனவு கூட வந்திருந்தது. அக்கனவை பறவையாக்கி பறக்கவிட்டபடியே சாலையில் நடந்து கொண்டிருந்தாள். வெளிநாட்டிற்கு டூரிஸ்ட் விசாவில் வேலைக்காகச் சென்ற தம்பி ஒரு மாத காலத்திலேயே ஊருக்கு திரும்பியிருந்தான். என்ன செய்தும் வாழ்க்கையை அவர்களால் மாற்றவே முடியவில்லை. எல்லாவற்றிலும் கொடுப்பது போல வந்து தட்டிக் கொண்டே சென்றது. நோயைத் தாங்கமுடியாமலும், வாழ்வை நீட்டிக்கும் மருந்துகளை வாங்க வழியின்றியும் பயங்கர குழப்பத்தில் சிக்கியிருந்து மொத்தக் குடும்பமும். வெறுப்பும் கசப்பும் வீடெங்கும் ஊறிக் கொண்டிருந்தது. " இருந்து என்ன 

ஆகப் போகிறது செத்துத் தொலைக்கலாம்.

செத்து என்ன ஆகப்போகிறது வாழ்ந்து தொலைக்கலாம்" என்பார் வண்ணதாசன். வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் மொத்தக் குடும்பமும் "நோய்மை " என்று சொன்னது. 




கதிர் அரிவாளால் உள் நெஞ்சை அறுத்துவிட்டு மஞ்சள் வைத்துக் கட்டிவிடும் இக்கவிதையின் புன்னகை அபாயகரமானது




லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் ! 


நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் நீலப்படத்தில்

சன்னமாக எரியும் குண்டு பல்பு நான்

சகிக்க முடியாத சாராயக்கடையின் கனத்த கூரையைத்

தாங்கிக்கொண்டிருக்கும் தோலுரிந்த சவுக்குமரம் என் தந்தை

பிரியாணிப் பொட்டலம் சுற்றிய நாளிதழில்

கைப்பை திருடர்கள் பற்றிய செய்திக்குள்

மூச்சிரைக்க ஓடும் நிழல் அம்மாவுடையது

பேருந்துகளில் விற்கப்படும் அகரவரிசைப் புத்தகத்தில்

ஆப்பிளுக்கு அருகிலிருக்கும் அழகிய பூனை என் தங்கை

நீங்கள் நினைப்பதுபோல் அல்ல

இது மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தின் கதைதான்

இதமான பனிப்பொழிவோடு டிசம்பர் பிறந்தது

இளஞ்சிவப்பு நிற கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை

சவுக்குமரத்தின் நெற்றியில் கட்டினார்கள்

கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்

அதற்குள் ஒளிரச் சிரித்துக்கொண்டிருக்கும் குண்டுபல்பு

என்னைப்போலவே இல்லை?

பூனைக்குட்டியின் விரல் பற்றியபடி

கேக் வாங்கிக்கொண்டிருக்கும் அந்த அம்மா

கடைக்காரரிடம் அப்படி என்னதான் எழுதச் சொல்கிறாள் அதில்?

‘லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் !’

எனக்காக மூன்று முறை அதை உரக்கச் சொல்லுங்களேன்.



( மகிழ்ச்சியான பன்றிக்குட்டி

தொகுப்பிலிருந்து ) 


" நீங்கள் நினைப்பது போல் அல்ல இது மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தின் கதைதான் " மகிழ்ச்சியான குடும்பத்தின் கதைதான் என்று சொல்லும் போதே எரியத் தொடங்குகிறது வாழ்வின் முரண். நம்பிக்கைதானே வாழ்க்கை. மனம் தான் எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்றெல்லாம் பேசுபவனையும் அடித்துத் துவைத்து உட்கார வைக்கும் வாழ்க்கையின் விநோதம் எந்த சொல்லாலும் விளக்க முடியாதது. " கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் " என்கிறார் வெய்யில். வாழ்க்கை மிக அழகானது என்று சொல்வதற்கு நான் யாருமற்ற மலைகளின் நடுவே நிற்க வேண்டியிருக்கிறது. அண்ணா சாலையில் சிக்னலில் "வாழ்க்கை  மிக ..... " என்பதற்குள் என்னென்னமோ நிகழ்ந்து விடுகிறது. கவிதைகளால் தொந்தரவு, தீராத காயத்தை உருவாக்கும் வெய்யில் தன்  மொழியால் ஆறாத வடுக்களை உருவாக்குகிறார். தடவிப் பார்க்கும் தோறும் கண்ணீரை ஊற்றாக்குகிறார்.






கவிஞர் : வெய்யில் 


கவிதைத் தொகுப்புகள் : 


1.புவன இசை 


2.குற்றத்தின் நறுமணம் 


3. கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட் 


4.மகிழ்ச்சியான பன்றிக்குட்டி 


5.அக்காளின் எலும்புகள் 


6.பெருந்திணைப்பூ திண்ணும் இசக்கி

Comments