9.மருதாணிக் காடுகளில் நடனமிட்டு ஒளிந்து கொள்ளும் பொன்மயில்கள் --அனார் கவிதைகள் குறித்து


 





"கடைசியாக எச்சரிக்கிறோம் ! உடனே கலைந்து செல்லுங்கள். இங்கு போராட்டம் நடத்த எப்போதுமே அனுமதியில்லை" ஊதி ஊதிப் பெரிதாகிய தீ போன்று வளர்ந்த மிரட்டல் ஒலி ஒவ்வொரு செவியையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. சிறியவரும் பெரியவருமாக முந்நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்தார்கள். கைகளை உயர்த்தி அவர்கள் தொடர்குரல் எழுப்புவது சாலையை மிகவும் கலவரப்படுத்திக் கொண்டிருந்தது. இருபுறமும் தூரத்தில் நின்ற வாகனங்கள் ஒட்டு மொத்த வசைச் சொற்களாலும் கூட்டத்தினரைத் தூற்றியபடியே ஹாரனை விடாது அழுத்திக் கொண்டே இருந்தன. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருத்தியிடம் பசியில் அழுத குழந்தை பிறகு  தண்ணீர் கேட்டது. காலியான பாட்டிலை உதைத்து இன்னும் வேகமாக அழ ஆரம்பித்தது. நின்ற இடத்திலிருந்து மிக அமைதியாக இரண்டு அடிகள் நகர்ந்து முன்னே சென்ற நீர் பிரங்கிகள் கண்களை மூடியபடியே விஷமமாகச் சிரித்துக் கொண்டிருந்ததன.எவ்வளவு சமாதானம் சொல்லியும் கூட்டம் கலைவதாக இல்லை. எங்கிருந்தோ பறந்து வந்த உத்தரவு 

நீர் பீரங்கிகளின் கண்களைத் திறந்துவிடச் சொன்னது. ராட்சதப் பாம்புகளாகப் பாய்ந்த தண்ணீர், கூட்டத்தினரை வயது வித்தியாசம் பார்க்காமல் அடிக்க ஆரம்பித்தது. ஒட்டு மொத்தக் கூட்டத்தின் குரல்வளையையும் நசுக்கிய தண்ணீர்,  குடும்பங்களை தனித்தனியாக சிதறி ஓடச் செய்தது. மழையை மட்டுமே பார்த்திருந்த குழந்தைகள் மழைப்பாம்புகளாக தண்ணீர் பாய்ந்து கடிப்பதைக் கண்டு பயத்தில் சிறுநீர் கழிந்தனர். தண்ணீர் ஒவ்வொரு முதுகையும் துவைத்துப் பணிய வைத்தது. நெஞ்சு நிமிர்த்திச் சென்ற இளைஞர்களைத் தூக்கி வீசியது. டம்ளரில் பருகும் நீரும், பீரங்கியிலிருந்து பாயும் நீரும் ஒன்றுதானா என்று யோசிப்பதற்குள் அந்த சாலை இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. போராடியவர்களை  ஒழித்துவிட்ட மகிழ்ச்சியில் நீர் பீரங்கிகள் கம்பீரத்துடன் செல்ல ஆரம்பித்தன.



அனாரின் இக்கவிதையின் தொடக்கத்தில் மெல்லிய சாரலாகத்  தோன்றும் தண்ணீரின் முகம் ஊழிக் கூத்து நிகழ்த்தும் கொடூரத்தை அணியும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.



தண்ணீர் 


தொய்வற்றதும்

அடங்காததுமான களியாட்டம் 


நித்தியம் . . .

கீழ்ப்படியும் அழகு . . . 


மறைவில் . . .

முனைதீட்டிய தன் கூர்மையால் பிளந்து

மிருதுவாய்த்தொடங்கி

மூர்க்கமாய் முடித்து வைக்கிறது 


கொல்லவும் கொல்லப்படவும்

துணை புரிகின்றது 


வாதும் சூதுமான

இச்சையின் பெருக்கு 


தனது குற்றத்தை ரசிக்கின்றது 


பயங்கரத்தை உள்ளே செலுத்தி

தோலை நக்கிடும் சாதுவான மிருகம் 


தண்ணீர்

எதனாலும் தண்டிக்கமுடியாத கடவுளாகிவிடுகிறது //


( பெருங்கடல் போடுகிறேன் தொகுப்பிலிருந்து )



"தொய்வற்றதும் அடங்காததுமான களியாட்டம்". தண்ணீருக்கு அதிகாரங்கள் வந்து விட்ட பிறகு அதை யாரால் அடக்க இயலும். அது மட்டுமே எல்லோரையும் அடக்கும். வீடுகளை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் தண்ணீரிடம் யாரும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்க முடிவதில்லை. குழந்தை, பெரியவர்  பாகுபாடின்றி கொன்று மிதக்கவிடும் தண்ணீரிடமிருந்து தப்பித்துப் பிழைத்தோடுவது தவிர வேறு வழியில்லை. "தண்ணீர் எதனாலும் தண்டிக்க முடியாத கடவுளாகி விடுகிறது".அவ்வளவுதான், இதற்குமேல் சொல்ல ஏதுமில்லை. வாயை மூடிக் கொண்டு பின்னோக்கி நடக்க  வேண்டியதுதான். அனாரின் இக்கவிதையை வாசித்து விட்டு ஒரு டம்ளர் நீரைப் பருகுவது கூட அத்தனை வலி மிக்கதாக இருக்கிறது.


🔘🔘🔘 


அவளுக்கு அப்போதுதான் பதினேழு  தொடங்கியிருந்தது.ஹெர்பேரியத்துக்கு சங்குப்பூக்களைப் பறிப்பதற்காக தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தாள். பூக்களின் நீலத்தில் கரைந்து போவது அவளுக்கு மிகவும் பிடித்தமானது. பதப்படுத்தியதில் நீலம் பழுப்பாகி, 

புதிய மணத்தில் பூவைப் பார்த்ததும்  துயரப்பட்டாள். சிங்கப்பூரிலிருக்கும் அவளது மாமனுக்கு வயது முப்பத்தைந்தாகியும் திருமணமாகவில்லை. ஊருக்கு வந்திருந்த போது, அவளது தந்தைக்கு கோடாரி தைலத்துடன் வெளிநாட்டின் நறுமணத்துடன் கூடிய ஆடைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான். தந்தைக்கு அவளை டீச்சராக்க  வேண்டுமென்ற விருப்பமிருந்தது. நெருங்கிய  உறவினரின் வற்புறுத்தலில் அவளை அவனது மாமனுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அன்று மாலை பள்ளி விட்டு வந்தவள் சைக்கிளை நிரந்தரமாகப் பூட்டி வைத்தாள். "நீ தாரளமாகப் படிக்கலாம். மாமனுக்குப் பெண் தர யாருமில்லை. அவன் சிங்கப்பூர் சென்று விடுவான் " என்றெல்லாம் குடும்பத்தின் குரல்கள் அவளை நெருக்கி அழுத்த ஆரம்பித்தன.  சங்குப்பூவை மறந்தவள், சம்பங்கி மாலையை அணிந்து கொண்டாள். பள்ளித் தோழிகள் சூழ்ந்திருந்த மண்டபத்தில் தாவரவியல் வகுப்பு குறித்தெல்லாம் கேட்பதற்கு அவளுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. சொன்னது போலவே அவள் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மாமன் திரவியம் தேடி சிங்கப்பூர் சென்று விட்டான். குழந்தை பெற்றதும் அவளுக்கு எல்லாக் கதவுகளும் பூட்டிக் கொள்ளும், வைக்கோல் எடுத்து வைக்கவும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதிலும், பால் கறக்கும் வாளியுடனும் அலைவாள் என்றே பாட்டி நினைத்திருந்தாள். தூளி ஒரு கையில் இருக்கும் போதுதான், அந்த ஹெர்பேரியத்தை தூசி தட்டி எடுத்தாள். சங்குப்பூ பழுத்திருந்தாலும் அதன் நறுமணத்தை புதிதாக்கிக் கொண்டவள், கூந்தலை அள்ளி முடித்து, சைக்கிளைத் திறந்து மிதிக்க ஆரம்பித்தாள். இளவேனிற் காலத்தில் எல்லா மரங்களும் அவளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தன




அனாரின் இக்கவிதையில் வரும் கறிவேப்பிலை மரம் தொடும் போது ஒரு மணத்தையும் இலைகளில் தனித்தனி நறுமணத்தையும் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அவை சமைப்பதற்கானவை அல்ல.



கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல் 



//கொழுத்த மழைக்காலத்தின் பிறகு 

செழித்து அடர்ந்திருக்கும் 

இலைகள் மட்டுமேயான கறிவேப்பிலை மரத்தினை 

எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

அன்பின் பெருவிருட்சமாக 


சமையலறை இடது பக்க மணலில் 

மிகவும் துணிச்சலுடன் நிற்கிறது

அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப

ஆய்ந்து செல்கின்றனர்

இலைகள் மணமாகவும் ருசியாகவும் 

இருப்பதில் மகிழ்வுடனும் திருப்தியுடனும் 


விபரம் அறியாதவர்கள் 

திருடியும் 

கந்துகளை முறித்தும் விடுகிறார்கள் 

குருத்து இலைகளை ஆய்கின்றனர்

குருத்துகள் எளிதில் வாடிவிடக்கூடியன 


பேராசை மிக்க வியாபாரி வருகிறான் 

அவனது தோற்றத்தில் பேச்சில்

எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் 

எந்தவொரு இலையையும் விடாமல் 

உருவிச் செல்வதே அவனது குறி 


பின்பு 

அதே மரம் 

அவனே வியந்து மிரளும் அளவுக்கு 

துளிர்த்து அடர்ந்து செழித்துவிடும்

எதையுமே இழக்காத மாதிரி 


கறிவேப்பிலை மரக்கந்துகளில் 

சிறு குருவிகள் அசைந்து விளையாடின

இலைகளுக்குள் புகுந்து, மறைந்து 

தாவித் தாவி ஏதோவெல்லாம் பேசின 


மரத்தின் ஒளிரும் முகம் 

பளிச்சிடும் பிரகாசம்

வேறு ஒரு போதுமே காணமுடியா 

புது அழகுடன் இருந்தது//



( பெருங்கடல் போடுகிறேன் தொகுப்பிலிருந்து )



"பேராசை மிக்க வியாபாரி வருகிறான், அவனது தோற்றத்தில் பேச்சில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு இலையையும் விடாமல் உருவிச் செல்வதே " எல்லாமும் வியாபாரமாகவே பார்க்கப்படக் கூடும். ஒவ்வொரு மனிதனும் சந்தையில் விற்பனைப் பண்டம்தான்.                                 " துளிர்த்து அடர்ந்து செழித்து விடும் " இயற்கையில் ஒன்றை முற்றாக அழித்து விடவே முடிவதில்லை. 

"என்னை அழித்தாலும்

என்னை அழிக்க இயலாது, அழிப்பது இயல்பு,தோன்றுதல் இயற்கை" என்பார் ஆத்மாநாம். கறிவேப்பிலை மரங்களில் அன்பைப் பழக்கும் அனார், வாசிக்கும் போதெல்லாம் அந்த இலைகள் அன்பின் நறுமணத்துடன் நடனமாடுவது போன்ற உவகையை நமக்குள் உருவாக்குகிறார். 


🔘🔘🔘 


அம்மியில்  அரைக்கும் போதே அம்மாவின் கைகள் சிவந்திருப்பது கண்டு "எனக்கும்மா ! எனக்கு "என்று குதிக்கத் தொடங்கியிருந்தாள். பக்கத்து வீட்டு அக்கா வேண்டுமென்றே அவளது இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினாள். பச்சை வண்ணம் எப்படி சிவப்பாக மாறுகிறதென இரவெல்லாம் கவனிக்கப் போவதாக தந்தையிடம் சொல்லியிருந்தாள். அவளால் அடிக்க முடியாதெனத் தெரிந்து கொண்ட கொசுக்கள் விடாது கடித்துக் கொண்டிருந்தன.  தங்கையை கொசுக்களை அடிக்கவும், சிறிய குச்சியால் முதுகு சொறிய தம்பியையும் நியமித்திருந்தாள். உள்ளங்கைகளில் ஏறிய குளுமை கண்களைச் சுற்றி படரத் தொடங்கியிருந்தது. மணி பத்தாகவும் உறங்கச் சொல்லி ஆணையிட்ட தந்தை போர்வையை போர்த்தி விட்டபடியே, இரவில் எழ வேண்டுமென்றால் அழைக்கும்படியும் சொல்லிச் சென்றார். இரவில் பச்சை சிவப்பாக மாறுவதை கவனிக்க முடியாதென யோசித்தவள், நாசியைத் தெரியாமல் தொட்டுவிடவும் தொடர் தும்மலில் எல்லோரையும் அலற வைத்தாள். "என்னாச்சு ? " " ஒன்னுமில்லை" இரண்டு வார்த்தைகள் மட்டுமே மாறி மாறி உரையாடிக் கொண்டன. இருளில் யாரையும் தெரியவில்லை. வெளியே திண்ணையில் தெரு விளக்கின் ஒளி எப்போதும் வீசிக் கொண்டிருக்கும். தந்தையிடம் அடம்பிடித்து வெளியே அவர் உறங்கும் இடத்திலேயே உறங்க வேண்டுமென்று வெளியேறினாள். கைகளை தெருவிளக்கின் ஒளி படரும் இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். உறக்கம் தர வந்த காற்று அவளை விடாது சுற்றி இமைகளைத் தாழ்த்திக் கொண்டே இருந்தது. பச்சையிலிருந்து சாணத்தின் வண்ணத்திற்கு தாவிக் கொண்டு இருந்ததன உள்ளங்கைகள். நள்ளிரவு கடந்து ஒரு மணி ஆகிவிட்டது. எல்லாவற்றையும் உதிர்த்துக் கழுவிவிட்டால் சிவப்பு வந்துவிடுமா ? ஒரு வேளை வராவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் கண்களை மிரட்டிக் கொண்டிருந்தாள். ஆழ்ந்து உறங்கிய  நேரம், உள்ளங்கைகளிலிருந்து  துளித்துளியாகக் காய்ந்து உதிர ஆரம்பித்தன,அவளது முகத்திலும் சிறிது அப்பியிருந்தது. சூரிய ஒளி எழுப்பவே கைகளைத் தேய்த்துப் பார்த்தாள். அடர்சிவப்பை அணிந்து புன்னகைத்துக் கொண்டிருந்தன இரண்டு உள்ளங்கைகளும். கடைசிவரை பச்சை சிவப்பானதை பார்க்கவே முடியவில்லை.



இக்கவிதை வழியே ஒவ்வொரு கையையும்  தொட்டு மருதாணி வைக்கிறார் அனார். அடர்வண்ணமும் குளிர் மணமும் நித்தியமானதாக மாறுகின்றன.



மருதாணி இளவரசி 


//இரண்டு உள்ளங்கைகளிலும் 

மருதோன்றிக் காடுகளை 

விரித்துக் காட்டுகிறாய் 


விரல்களில் ஊன்றிப் பதிந்த 

சிவப்புப் பயத்தம் விதைகளை 

கொறிக்கும் குருவிகளின் கீச்சொலிகள் 

உரத்து மோதுகின்ற வேளையில் 

திருப்பி 

கைகளை மடித்து மூடுகிறாய் 


மருதோன்றிக் கைகளில் மறைந்துள்ள 

சாத்திரக் குறிகளை 

நீ உறங்கும் வேளை வாசித்தறிகிறேன் 


மருதாணிச் சாயமேறிய கைகளில் 

ஒளிந்து கொள்ளத்தக்க 

ரகசியத் துளைகள் உள்ளன 


மலைப்பாம்பு 

மண்குவியலில் ஓய்வெடுக்கிறது 


எறும்புப் புற்றுகள் கட்டிய 

'மசுக்கொட்டை ' மரத்தில் 

கருநாவலாய்க் கனிந்திருக்கிற 

மசுக்கொட்டைப் பழங்களை 

அங்குதான் ஆய்கிறேன் 


உயரமான கால்களால் 

வெட்டுக் கிளிகள் 

வலது கைக்கும் 

இடது கைக்குமாய்த் தாவுகின்றன 


ரேகைகள் நீர் சுரந்து 

வால் ஆமைக்குஞ்சுகள் தெத்தும் 

மூன்று பூச்சந்திக் கரைகளையும் 

கண்காணிக்கின்றனர் 

வெண்குருத்து நகங்களை மூடி 

சிவப்புத் தொப்பிகள் போட்ட சிப்பாய்கள் 


சித்திரப் புதையலை 

கண்மூடாது காவல் செய்கிறாய் 


இறைவனைத் தொடுவதும் 

மருதாணி இடுவதும் 

ஒன்றென்கிறாய் //



( பெருங்கடல் போடுகிறேன் தொகுப்பிலிருந்து )



"மூன்று பூச்சந்திக் கரைகளையும் 

கண்காணிக்கின்றனர், வெண்குருத்து நகங்களை மூடி சிவப்புத் தொப்பிகள் போட்ட சிப்பாய்கள் " விரல்களை மூடி அணியும் மருதாணிக் குப்பிகள் மூன்று கரைகளையும்  கண்காணிக்கின்றதாம். இந்த சிப்பாய்கள் நிச்சயம் இதயமுடையவர்களாகத்தான் இருப்பார்கள். துப்பாக்கியால் காடுகளில் வசிக்கும் பறவைகளை  சுட்டுத்தள்ளுபவர்களாக இருக்கமாட்டார்கள். 

"இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்றென்கிறாய்". கவிதை மருதாணியின் பச்சையிலிருந்து 

சிவப்புக்குத் தாவி மேலே உயரத்தில் பறக்கிறது.நமக்கும் ஒரு சிறகில் பச்சையையும், மறு சிறகில் சிவப்பையும் அணிவித்து பறக்கச் செய்கிறது. கைகளில் நிகழ்ந்தாலும், இயற்கையின் அதிசயத்தைத் தொட மட்டுமே முடியும், ஒரு போதும் காண முடியாது எனச் சொல்லி தீராத தேடலை உருவாக்குகிறது.



கவிஞர்: அனார் 


கவிதைத் தொகுப்புகள் : 


1.ஓவியம் வரையாத தூரிகை 


2.எனக்குக் கவிதை முகம்


3.உடல் பச்சை வானம் 


4.பெருங்கடல் போடுகிறேன்


5. ஜின்னின் இரு தோகை 


Comments