11. ஆனந்த இலைகள் அலையடிக்கும் வனத்தில் கண்ணீர் கரும்புடன் நிற்கும் யானைக் கன்றுகள். –ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள் குறித்து

 


 



நள்ளிரவு ஒரு மணிக்குக் கிளம்பிய பேருந்தில், மொத்தமாக இருபது பேருக்கும் குறைவாகவே இருந்தார்கள். ஜன்னல்களை மூடியும் கதவின் வழியே நுழைந்த குளிர்காற்று, விடாது தாக்கிக் கொண்டே இருந்தது. நண்பன் " மிகவும் குளிர்கிறதா ? " எனக்கும்தான்" எனக் கேட்டது போலிருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிய போது அடுத்த இருக்கையிலிருந்தவர் உறங்கியிருந்தார். பேருந்துக்கு முன்பு சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரங்கள் அபாயகரமானவையாகத் தோன்றின. "  காலை பத்து மணிக்குள் எடுத்து விடுவார்கள். சீக்கிரம் வந்துவிடு " என்று அழுத அவனது அப்பா போனை வைத்துவிட்டார். மூன்று மணிக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த பேருந்துகள் மோட்டலில் சிறிது  ஓய்வெடுக்க ஆரம்பித்தன. வீண்மீன்கள் பூமியை நோக்கி வருவது போலவும், தொலைதூரத்திற்கு   விடைபெற்றுச் செல்லும் போது கையசைப்பது போலவும் மின்னிக் கொண்டிருந்தன. பாதி உறக்கத்தில் விழித்தவர்கள் செல்லுமிடம் புரியாமல் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிறுநீர் கழிக்கச் சென்றவர்களை கட்டணக் கழிப்பிடத்திற்கு செல்லுமாறு மிரட்டிக் கொண்டிருந்தவன் பெரிய சுருட்டை பற்ற வைத்தபடி திட்ட ஆரம்பித்தான். தனது மகளுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தபடி பரபரப்பாக இருந்தவர் கட்டைப் பையிலிருந்த ஸ்கேனைத் தொட்டுப்பார்த்தார்.மகளின் நுரையீரலைத் தடவிய விரல்கள் உட்புறமாக நடுங்கிக் கொண்டிருந்தன. அவளது தலையைத் தடவிக் கொடுத்தவர், மாநகரத்தின் மருத்துவமனையில் தெரிந்த டாக்டர் இருப்பதாகவும் இனிமேல் எல்லாமும் சரியாகி விடும் தங்கம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். வாழ்வின் வெவ்வேறு திசைகளுக்குச் செல்லும் வாகனங்கள் விநோதமான புள்ளியொன்றில் சந்தித்து மீளவும் அதனதன் திசைகளுக்குச் செல்ல ஆரம்பித்தன. 



ஒரு உணவத்தின் வாசலில் நின்றபடியே வாழ்வின் வெவ்வேறு பயணங்களைக் காண்பதற்காக அழைக்கும் ஷங்கர்ராமசுப்ரமணியனின்  இக்கவிதை ஒவ்வொரு காட்சியின் வழியாகவும் இறுக்கமான வெறுமையை ஊட்டுகிறது.





நெடுஞ்சாலை உணவகம் 


பயணிகளின் 

மூத்திரத்தால் உப்பேறிய நிலங்களில் நிற்கும்

நெடுஞ்சாலை உணவகங்கள் 

அவை 

அகாலத்தில் இசைக்கும் 

பாடல்கள்

யாரொருவர் துக்கத்தையோ 

யாருக்கோ 

அவசர அவசரமாய்

பட்டுவாடா செய்துவிடுகின்றன 

இளநீர் இல்லாத இளநீர் ஒன்றைப் பருகுகிறீர்கள்

உணவு இல்லாத உணவொன்றைப் புசிக்கிறீர்கள் 

நிலவற்ற ஒரு நிலவை வெறிக்கிறீர்கள் 

இரவற்ற ஒரு இரவில் 

குறுக்குமறுக்காக 

காதலுக்கு இலக்கற்று அலையும் 

நம் மூட்டத்தின் மனச்சித்திரமா 

இந்த நெடுஞ்சாலை உணவகம் 


( அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பிலிருந்து



"அகாலத்தில் இசைக்கும் பாடல்கள் யாரொருவர் துக்கத்தையோ ,யாருக்கோ 

அவசர அவசரமாய் ,பட்டுவாடா செய்துவிடுகின்றன " அங்கு நின்று கொண்டிருப்பவர் எவராயினும் மற்றொருவர் துயரத்தால் சூழப்படுகிறார். முன்பதிவு செய்யமுடியாமல் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டும் கீழே அமர்ந்தபடியும் வந்தவர்களுக்கு எல்லாமே பாதி உறக்கத்தில் விசித்திரமானதாக இருக்கிறது. உடல்வலியுடன் பருகும் சுவையற்ற பானத்தின் விலை அதிக கசப்பைக் கூட்டுகிறது." நிலவற்ற ஒரு இரவை " இரவுமற்ற ஒரு இரவை " அப்படியென்றால் அது  என்ன காலம். அது எந்த ஊர். "மூட்டத்தின் மனச்சித்திரமா இந்த நெடுஞ்சாலை உணவகம் " . ஷங்கர்ராமசுப்ரமணியன் உருவாக்கும் மனச்சாலையில் ஆயிரமாயிரம் பேருந்துகள் எதிரெதிர் திசையில் வலியுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.





🔘🔘🔘 


கோரஸில் "க ங ச ஞ"ஒவ்வொரு குழந்தையின் வாயிலிருந்தும் வரிசையாக வெளியேறி காற்றில் கலந்து கொண்டிருந்த போது அவள் மட்டும் மௌனமாக இருந்தாள். சிலேட்டில்  "க" எழுத முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது குச்சி. மீறி எழுதியதையும் கண்ணீர் அழித்துக் கொண்டிருந்தது. டீச்சர் அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றியும் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.  பள்ளிக்குச் செல்ல முடியாதென அடம்பிடித்தவளை திட்டியபடியேதான் காலையில் விட்டுச் சென்றிருந்தான் அவளது தந்தை. பள்ளி வளாகத்திலிருந்த சரக்கொன்றை மரத்தில் துள்ளியபடி ஓடிக்கொண்டிருந்தது அணில். சிறிது நேரம் அழுவதை நிறுத்திக் கவனித்தாள். ஆனாலும் தந்தை திட்டியது வலித்துக் கொண்டேதான் இருந்தது. அழுது கொண்டேதான் வீட்டுக்குச் செல்ல வேண்டும், அப்போதுதான் தாத்தா  தந்தையைத் திட்டுவாரென காத்திருந்தாள். வீட்டுக்குச் செல்லும் மணியடித்ததும்,  குழந்தைகள் குதூகலத்துடன் வெளியேறினார்கள். தந்தை மிகவும் குள்ளமானவனாக மாறியிருந்தான். மகளைப் பார்த்து வணக்கம் தெரிவித்து முதுகில் அடிக்கும்படியும், காலையில் திட்டியதற்கு மன்னிப்பு கோரியும் மண்டியிட்டான். காதைத் திருகினாள். முதுகில் பத்து அடி  கொடுத்தாள். கோபம் போகவே இல்லை. கையையும் கடித்தாள். ஆஆவென அலறியபடியே ஓடியவனைப் பார்த்துச் சிரித்தபடியே கலைந்து சென்றார்கள் ஆசிரியர்கள். வண்டியில் கண்ணாடியைப் பார்த்தவள் முகத்தில் அழுகையின் தடமே இல்லையென  மீண்டும் கோபம் கொண்டாள். " உன்னைத் தாத்தாவிடம் மாட்டிவிட முடியாதா " என்று கேட்டுவிட்டு  வண்டியின் முன்பக்கம் இளவரசியைப் போல அமர்ந்து கொண்டாள்.  "போலம் ரைட் ! "என்று ஆணை வரவே பவ்யத்துடன் ஓட்ட ஆரம்பித்தான். மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டான். காலையில் திட்டியதில் திரண்டிருந்த கோபம் மொத்தமாகச் சேர்ந்து அவன் உதடுகளைச் சுட்டது. " எங்க அப்பா ! " என்று அவள் சொல்லும் போது மீண்டும் உச்சந்தலையில் முத்தமிட்டான். சுட்ட கோபம், குளிர்ந்து காற்றடிக்கத் தொடங்கியது. இருவரும் பறக்க ஆரம்பித்திருந்தார்கள்.



நீண்ட நேர அழுகைக்குப் பிறகு முதல் சிரிப்பு உதடுகளில் மலரும் போது தோன்றும் உவகையை அளிக்கும் கவிதை நமது பால்யத்துக்கு புது வண்ணத்தைப் பூசுகிறது 



உப்பு முத்து 


ஸ்கூட்டரின் 

முன்புறத்தில் ஏறி 

குழந்தை 

பிடிவாத முகத்துடன் 

நிற்கிறது

அப்பா வண்டியை 

முடுக்குகிறார் 

குழந்தையின் கன்னத்தில் 

ஈரத்தின் சுவடு 

முந்தைய கணத்தின் கண்ணீருக்கு

இப்போது

அர்த்தம் உண்டா 

அவள் போகும் பயணத்தின் போது

கண்களின் திரண்ட அழுகை உலரப்போகிறது 

இப்பொழுது ஆனந்தமே 

இப்பொழுது ஆனந்தமே 


( ராணியென்று தன்னையறியாத ராணி தொகுப்பிலிருந்து )



" முந்தைய கணத்தின் கண்ணீருக்கு இப்போது அர்த்தம் உண்டா " கண்ணீர் நிகழும் போது காலம் மறைந்து விட்டது போன்று தோன்றுகிறது. கண்ணீர்த்திவலையில் மெல்ல மறைகிறது உலகமும்.சொற்களை விழுங்கியபடியே விழும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் அத்தனை கனமானதாக இருக்கிறது. " அவள் போகும் பயணத்தின் போது உலரப் போகிறது திரண்ட அழுகை. ஆமாம் இப்பொழுது ஆனந்தமே. இப்பொழுது ஆனந்தமே. இப்பொழுதில் அவள் நிற்கிறாள். கடந்த காலத்தின் கண்ணீர் சுத்தமாகவே மறைந்து விட்டது. இந்தப் பொழுது மட்டுமே இருக்கும் போது,  இலைகளில் ஆனந்தம் பொங்கி சலசலக்கும் மரங்களின் அடியில் நிற்கிறோம். ஆயிரம், லட்சம், கோடி இலைகளில் ஆனந்தக் கிளிகள் பாடும் பாடல் "ஆனந்தம் ஆனந்தமே !. "


🔘🔘🔘 


ஆழமான தண்ணீரைத் தவிர அதனிடம் வேறு எதுவும் எப்போதும் இருந்ததில்லை. வயல்களுக்கு நடுவிலிருந்த அந்தக்   கிணற்றை யாரும் நெருங்காத வண்ணம்  கருவ மரங்களை வெட்டிப் போட்டிருந்தார்கள். மாலை நேர மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்பவர்களும் கிணற்றினருகே யாரும் போய்விடாதவாறு கண்காணிப்பார்கள். அச்சுமூட்டும் விஷக் கதைகளை கிணற்று நீரில் கலந்து கொண்டே இருந்தார்கள். அந்த ஊரிலிருந்த குளத்தை, ஏரியை விடவும் குறைவான நீரே இருந்த போதிலும் கிணற்றின் ஆழம் அச்சமூட்டுவதாக மாறியிருந்தது. வானம் முழுவதுமாக மூடியிருந்த மாலை நேரமொன்றில் பசுவையும், நான்கு மாதக் கன்றையும் அழைத்து வந்திருந்தவன் மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு புல்லறுக்கச் சென்றுவிட்டான். பசுவுக்கு கழுத்து மணி அசையும் ஒலி இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். கன்று தாயைத் தாண்டி எங்கும் செல்லாது என்று கவனிக்காது விட்டிருந்தான். கருவேலமரங்கள் மட்கியிருந்த இடத்தில் நுழைந்து விட்டது கன்று. தாய்ப்பசு "அம்ம்ம்ம்மாஆஆஆஆ"  வெனக் கதறி முடிப்பதற்குள் கிணற்றுக்குள் குதித்துவிட்டது. மிக விரைவாகப் பாய்ந்து ஓடியவன் பாதிக் கிணற்றில் தத்தளித்த கன்றை நோக்கிக் குதித்தான். மேலிருந்தவர்கள்  தூக்கி  எறிந்த கயற்றால் கன்றின் வயிற்றில் இறுக்கிக் கட்டி மேலேற்றிவிட்டான்.  கைப்பிடித்து ஏறும் படிகளை நோக்கி அவன் நீந்த ஆரம்பித்த போது  நெஞ்சுவலி வந்துவிட்டது .  மூன்றாவது முறை என்பதால் இதயம் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. அவனது கால்களைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது பூமி.  அப்போதும் ஆழமான நீரைத் தவிர கிணற்றிடம் எதுவுமே  இல்லை. 



கிணற்றுக்குள்  விழுந்துவிட்ட வாளி ஆழத்தில் உருண்டு மண்ணிடம் சொல்லும் கதையை மேலே தளும்பும் அலைகள் புதிய வாளியிடம் சொல்லும்போது உண்டாகும் பரிதவிப்பை அளிக்கிறது இக்கவிதை 


நல்ல தங்காள் 


எட்டுவயதில்தான் 

முதன்முறையாக அவன்

கிணற்றைப் பார்த்தான் 

அவர்கள்  மாறிவந்த 

ஊரின் 

வீதிகள் நடுவிலும் 

தெருமூலைகளிலும் இருந்த 

கிணறுகளை 

எட்டிப்பார்த்துக் கொண்டே 

பள்ளிக்குப் போவான்.

சில கிணறுகள் ஈரவாசனையுடன் 

தலையில் பூச்சூடி பின்னலிட்ட  பெண்போல 

சகடைச் சக்கரம் 

கயிற்று வாளியுடன் நிற்கும்.

சில கிணறுகள்  அடி தெரியாத 

ஆழத்துடன் 

இருட்டுக்குரலாய்  அவனை அழைக்கும் 

சில பாழுங்கிணறுகளில் 

முயல் பழிவாங்கிய 

சிங்கத்தின் பிம்பத்தையும் 

அவன் உற்றுத்தேடினான்...

பள்ளிவிடும் சமயம் 

ஊரின் எல்லாக் கிணறுகளும் 

அவனுக்காகக்  காத்திருக்கும் 

அவன்  அவற்றைப்பார்த்து 

விசாரித்தபடியே

புத்தகச் சுமையுடன்  மெதுவாய் நடந்து 

தன் வீடு திரும்புவான் 

கிணறுகள் அவனுக்கு அறிமுகமான

நாட்களில் ஒன்றில்தான் 

கோவில்சுவரில் 

நல்லதங்காள் படத்தின் சுவரொட்டியைப் பார்த்தான் 

வழக்கமாய்

சினிமாவுக்கு அழைத்துப் போகும் 

அம்மா

அவனைக் கூட்டிப் போகவில்லை 

பின்னொரு நாள் 

அம்மா சொன்ன கதையைக் கேட்டபிறகு 

கிணறுகளின் பக்கம் 

அவனை யாரும் பார்க்கவேயில்லை 


( ராணியென்று தன்னையறியாத ராணி தொகுப்பிலிருந்து


வீட்டுக்  கிணற்றோடு பேசியபடி ஒவ்வொரு முறையும் வாளி, தண்ணீரைத் தொட்டு அள்ளியபடி வரும் போது தள்ளாடி சுற்றுச் சுவரில் முட்டி ஏறும்  அழகைக் காண்பதற்காகவே அடிக்கடி கிணற்றில் நீரிறைத்தோம்.  கிணறுகள் காணாமல் போக ஆரம்பித்த வருடங்களில் அதை மறந்துவிட்டு  நன்கு வளர்ந்து கொண்டிருந்தோம். "சில கிணறுகள் ஈரவாசனையுடன் ,தலையில் பூச்சூடி பின்னலிட்ட  பெண்போல ,சகடைச் சக்கரம் 

கயிற்று வாளியுடன் நிற்கும்."  நல்ல தங்காளின் ஏழு குழந்தைகளும் பசியில் துடித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த கிணறும் அழுது கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு குழந்தையையும் வாங்கியபோது மிதக்கவிடுவதற்காகத்தான் அலையடித்துத் துடித்தது." வேண்டாம் வேண்டாம் " எனவும் கெஞ்சியது  கடைசியாக அவள் குதித்த போது கிணறு தன்னிலை இழந்து கதற ஆரம்பித்தது. எட்டு மரணங்களுக்குக் காரணம் கிணறாகிய நான் மட்டும்தானா என்று கேட்டுவிட்டு கண்ணை மூடிக் கொண்டது. கவிதை அதிராத குரலில்தான் பேசுகிறது. ஆனாலும் உள்நுழைந்தவுடன் ஆழத்தில்  உருவாக்கும் விசும்பலை என்ன செய்தும் அடக்க முடியவில்லை. 










கவிஞர் : ஷங்கர்ராமசுப்ரமணியன் 


கவிதைத் தொகுப்புகள்: 


1. மிதக்கும் இருக்கைகளின் நகரம் 


2. காகங்கள் வந்த வெயில் 


3.சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை 


4. அச்சம் என்றும் மரணம் என்றும் 

இரண்டு நாய்க்குட்டிகள் 


5. ராணியென்று தன்னையறியாத ராணி 


6. ஞாபக சீதா 


7. கல் முதலை ஆமைகள்

Comments