3. யாவர்க்குமாம் அன்பின் ஒளிநறுங்கீற்று - இசையின் கவிதைகள் குறித்து




காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டிலிருக்கும் போது  அவரது இரண்டரை வயது மகள் லிப்ஸ்டிக் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர் "வேணாம் பட்டு ! கெமிக்கல்" என்கிறார். " இது போட்டாதான் அப்பா கியூட்டா இருப்பாங்க" என்றதும் விடாது சிரிக்கிறார்.  வைரலான அந்த வீடியோவை ஃபோனில் பார்த்ததும் எனது மகள் எனக்கு தலை சீவி பவுடர் பூசி பொட்டு வைக்கும் காட்சி தோன்றவே சிரிக்கத் தொடங்குகிறேன். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கு அந்த வீடியோ பறந்து செல்ல அவரும் சிரிக்கிறார். அதிகாரியின் சிரிப்பின் ஒளியை நான் வாங்கி பிரதிபலிக்க என்னிடமிருந்து எதிர் இருக்கையில் பிறகு அது லட்சக்கணக்கான போன்களுக்கு பறந்து செல்கிறது. ஃபோன் பார்க்கும் ஒவ்வொருவரும் சிரிக்கும் போது திரளும் காரணமற்ற புன்னகையின் ஒளி வானுக்குச் செல்லும் போது ஸ்தம்பித்து நிற்கிறது  சூரியன். சிரிப்பொளியின் நறுமணம் ஒவ்வொரு பெட்டிக்கும் பரவுகிறது. ரயில் விட்டிறங்கியதும் எப்போதும் நடந்து செல்லும் வீதி அவ்வளவு ஒளி மிக்கதாக மாறியிருக்கிறது. ஃபிரைட் ரைஸ் கடையில் மேல்நோக்கித் தாவும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் சிரித்துத் தளும்புகிறது. ஆத்மாநாமின் கவிதையில் 

"கடவுளை கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி" என்பார். அதைப் போன்றதொரு கொண்டாட்டம் ஆனாலும் சொல்லமுடியாத ஒரு அமைதி.வீட்டிற்குள்  நுழைந்தவுடன் சிரிப்பு மத்தாப்பைக் கொளுத்துகிறேன், மனைவியும் மகள்களும் அதை திசை மணக்கப் பரவ விடுகிறார்கள். வீடு பெரிதாக நெகிழ்ந்து விரிகிறது. யாருக்கும் உறங்குவதற்கு மனமே இல்லை. வெகுநேரம் சிரித்துக் கொண்டே இருக்கிறோம். 


இந்த இசை இருக்கிறாரே அவரை என்ன செய்வதெனத் தெரியவில்லை. இந்தக் கவிதையும் தொற்றிக் கொண்டு பரவும் அன்பின் கொள்ளை நோய்தான். 


போலீஷ் வதனம் 


// நான்குமுனைச் சந்திப்பொன்றில்

ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்

கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.

குடியானவன் வெலவெலத்துப் போனான்

கண்டோர் திகைத்து நின்றனர்

அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்

எல்லோரும் காத்திருக்க

அதிகாரி குடியானவனை நேர்நோக்கி

ஒரு சிரி சிரித்தார்.

அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது.

“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “

 என  வாழ்த்தியது வானொலி.

 போலீஸ் தன் சுடரை

 ஒரு கந்துவட்டிக்காரனிடம் 

பற்ற வைத்து விட்டுப்போனார்.

 அவன்

ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.

கிழவி தலையைச் சொரிந்த படியே

“ நாளைக்கு... “ என்றாள். 

 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை

அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.

அதில் பிரகாசித்துப் போன கிழவி

இரண்டு குட்டி ஆரஞ்சுகளை 

சேர்த்துப் போட்டாள்.

அது ஒரு குப்பைக்காரியின் 

முந்தானையில் விழுந்தது.

எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை

ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க

அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.

சிறுமியின் காலடியில்

நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.

அதிலொரு சுளையை எடுத்து

அவள் அதன் முன்னே எறிய

சொறிநாய்க் குட்டி

அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது. //


           ( வாழ்க்கைக்கு வெளியே   பேசுதல்     தொகுப்பிலிருந்து ) 


போலீஸ் அதிகாரிக்கு அன்று வீட்டில் என்னதான் நடந்தது. அவருக்கு அன்பின் வழியதை உயிர்நிலையெனத் திறந்து விட்டது அவளது மகளாகவும் இருக்கலாம். புன்னகை அணியும் வதனத்தின் ஒளிநறுங்கீற்று பற்களின் வழியே சிதறிப் பரவும் போது எதிர் நிற்பவர் யார் என்று யார் அறிவார். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் உலகின் ஒவ்வொரு இலையையும் முத்தமிட்டு சிரிக்கவிடும்  பேரருளின் ஒளி வரிக்கு வரி குதூகலிக்கிறது இக்கவிதையில். அதனால்தான் வானுலகத்தாரும் ஒன்று கூடிப் பாட ஆரம்பித்து விட்டார்கள். 


🔘🔘🔘 


அவளது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஏழாவது மாதம். கடை வீதியில் மழை நின்ற பள்ளத்தில் இடறும் ஸ்கூட்டியை கூடிய மட்டும் இழுத்து நிறுத்துகிறான் கணவன். வண்டி நில்லாது சரிகிறது. பின்பக்கமாக விழுபவளை யாரோ தாங்கியது போல மெதுவாக இழுக்கிறது பூமி. விழுந்த இடத்திலிருந்து இரண்டடி இடைவெளியில் லாரியொன்றும் அதன் பின்னே நான்கு பேருந்துகளும் விரைவாகக் கடக்கின்றன. திகைத்தவன் அவளைத் தூக்கி நிறுத்துகிறான். வயிற்றில் கை வைத்துப் பார்க்கிறாள், அசைவேதுமில்லை.  மருத்துவமனையில் வெளியே காத்திருக்கும் போது வேண்டுகிறான் குழந்தைக்கு ஏதும் ஆகக் கூடாது என்று. கோவிலுக்கு சென்றாலும் தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வதில் ஆர்வமற்ற அவனுக்கு அன்று எந்தக் கடவுளிடம் வேண்டுவதென்ற மாபெரும் குழப்பம் வருகிறது. மருத்துவமனைக்கு வரும்  குழந்தைகள் விளையாடுவதற்காக உள்ள சிறிய பூங்காவுக்குச் சென்று, சிமெண்ட் பெஞ்சில்  விளையாடும் குழந்தை சிலையைப் பிடித்துக் கொண்டு வேண்டுகிறான். உள்ளிருக்கும் சிசுவின் இதயம் துடிக்கும் ஒலி கேட்பதாக அழைக்கும் செவிலி அழைத்துச் செல்கிறாள். யாவும், இயல்பு நிலைக்குத் திரும்பி நலமுடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை மருத்துவமனக்குச் செல்லும் போதெல்லாம் சிமெண்ட் பெஞ்சில் விளையாடும் குழந்தையின் சிலையைத் தொட்டுப்பார்க்கத் தவறுவதில்லை. 


அன்று நிகழ்ந்த அதே பரபரப்பை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இக்கவிதை வழியே உருவாக்குகிறார் இசை. 


தெய்வதம்


//சிவராசண்ணனை லாரி தூக்கி 

வீசி விட்டது.

" ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..."

போனில் அழுகிறாள் அவர் மகள்.

அப்போதுதான் உறைத்தது

எனக்கு

மண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது.

ஆனாலும்

மண்டியிட்டே ஆக வேண்டும்

அறுவை சிகிச்சை நிபுணர்களும்

அதையே சொல்கிறார்கள்.

சிவராசண்ணன்

நாளிரண்டு முறைகள்

ஓய்வாக நின்று, ஆனந்தமாக புகைபிடிப்பாரே

அந்த மே ஃப்ளவர் மரத்தடிக்கு ஓடினேன்.

அதன் முன் மண்டியிட்டேன்.//


        ( நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்  தொகுப்பிலிருந்து )


"மண்டியிட ஒரு தெய்வமில்லை 


ஆனாலும் மண்டியிட்டே ஆக வேண்டும் "  வேப்ப மரத்தை தெய்வமாக வணங்கும் நம் மரபில் மே ஃபிளவர் மரம் புதிதாக வந்து சேர்கிறது. வேண்டும் போது யாவும் தெய்வமாகும் அதிசயத்தை நிகழ்த்தும் கவிதை, வேண்டியது நிகழுமா நிகழாதா என்றெல்லாம் யோசிக்காமல் இயல்பாக விடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஊருக்கு செல்லும் வழியில் ஆகஸ்ட் மாதத்தில் 

ஒரு நாள் பைக் ரிப்பேராகி நின்று விட்டது.வயல்களைத் தாண்டி தோப்புக்குள் இருந்து அழைத்தது சிவப்புக் குரல். மரங்களின் நடுவே  உயரத்தில் செக்கச் செவேலென இருந்த மே ஃபிளவர் மரத்தில் இலைகளேத் தெரியவில்லை. இசையின் கவிதை அடுக்கடுக்காக பூத்துக் கொண்டிருந்தது.  மண்டியிட்டு வேண்ட ஆரம்பித்து விட்டேன். மரத்திற்குள் கவிதையை ஏற்றி விட்ட பிறகு பார்க்கும் மரங்களெல்லாம் மே ஃபிளவர் மரங்களாகி விட்டன.


🔘🔘🔘 


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருப்பதி செல்லும் சப்தகிரியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் நிரம்பி வழியும் கூட்டத்தினூடே சட்டையணியாத வாலிபன் ஒருவன் அழுக்கான தேகத்துடன் கால்களை பின்பக்கமாக மடக்கி மண்டியிட்டது போல  நகர்ந்து செல்கிறான். பயணிகளின் இருக்கைக்கு அடியிலுள்ள குப்பைகளை சட்டையால் வாரித் துடைத்து கையேந்துகிறான். அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களின் கால்களைத் தட்டித் தன் காலையும் காட்டுகிறான். சில்லறைகளை வாங்கியபடியே தொங்கிய முகத்துடன் நகரும் அவனுக்கு சிக்னல் போட்டது தெரியவில்லை. ரயில்வே காவலர் ஏய் ! என்றபடி விசிலடிக்கிறார். பெட்டியில் ஏறியதும் லத்தியை எடுக்கவே பாய்ந்து ஒடுகின்றன கால்கள். பயணிகள் சிலர்  போலிக் கால்கள் பாய்ந்து ஓடிய அதிர்ச்சியிலிருந்து மீளாதிருக்கின்றனர். அதே பெட்டியில் மாற்றுத்திறனாளியான தனது ஐந்து வயது மகனை  கையில் தூக்கியபடி நடந்து செல்கிறாள் தாயொருத்தி கழிவறையைத் தேடி . கூட்டத்தினரின் இரக்கத்தைத் தூசாகத் தட்டி ஊதுவது போல் பார்க்கிறாள். "நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும் " என்று லெஷ்மி மணிவண்ணன் கவிதை ஒன்று உண்டு. சிறப்புக் குழந்தைகளை பாதுகாக்கும் அம்மாக்கள் இன்னும் சிறப்பானவர்கள். வாழ்வில் துயரத்தின் பாடலை மரத்துப்போகச் செய்தவர்கள் அவர்கள்.  அங்கே அப்போது ஒலிக்கிறது ஒரு குத்துப்பாடல். இந்த நேரத்துக்குக் குத்துப்பாடல் தேவையா என யோசிக்கும் போதே , நடக்க முடியாத அக்குழந்தை ஆடத் தொடங்குகிறது மனத்துக்குள் . ஆடுவதென்றால் வெறும் கால்கள்தானா ?  " ரயிலில் கால்களை ஆட்டும் அக்குழந்தையினருகே "டங்கா மாரி ஊதாரி" பாடலை பாடுவது ஹாரிஸ் ஜெயராஜ்  இல்லை நம் இசைதான். 


ஆட்டுதி அமுதே 


//இந்த அதிகாலை பயணிகள் இரயிலில்

சுண்டல் வாடையொடு கலந்து

துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

குழந்தையான சிறுவனொருவன்

என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.

இடுப்புக்கு கீழே இரண்டு குச்சிகள்

ஒன்று மற்றொன்றின் மீது 

அணைந்து கிடக்கிறது.

சுண்டுவிரலைப் போன்றதான  

கட்டைவிரல் 

வாயைப் போன்றதான ஓட்டைக்குள்

அழுந்திக்கிடக்க

நிலைகொள்ளா விழியிரண்டும் 

எங்கேயோ வெறிக்கின்றன.

புதிதாய் வந்தமரும் ஒரு இளைஞன்

தன் ஸ்மார்ட் ஃபோனை  

முடுக்கி விடுகிறான்.

“டங்காமாரியான ஊதாரி” 

எங்கள் பெட்டிக்குள்

வந்து குதித்தான்.

நான் அந்த இளைஞனை

அவன் ஃபோனை

அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.

பார்க்கவே கூடாது என்று

முகம் திருப்பியிருந்த படியால்

பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.

நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்

கண்டேன்

அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்…

அப்படி.... ! அப்படி... !

விளங்காத காலே ஆயினும்

அதை அப்படி ஆட்டு

என் செல்லமே!//


         ( ஆட்டுதி அமுதே தொகுப்பிலிருந்து )


"அப்படி.... ! அப்படி... ! 

ஆயினும் அதை அப்படி ஆட்டு என் செல்லமே!" எனும் போது எல்லாமும் ஆடத் தொடங்குகிறது. இசையின் கவிதை ரயில் பெட்டி வழியே குதித்து  மனங்களை ஆட்டி வைக்கிறது. ஆட்டுவித்தால்  யாரொருவர் ஆடாதாரே கண்ணா ! 


கவிஞர் : இசை 


கவிதைத் தொகுப்புகள் : 

1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி, 2.உறுமீன்களற்ற நதி

3.சிவாஜி கணேசனின் முத்தங்கள்

4.அந்தக் காலம் மலையேறிப் போனது 5.ஆட்டுதி அமுதே

6.வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்.                         7.நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன்  

8.உடைந்து எழும் நறுமணம்.

Comments